திலகமிலா தாரகைகள் - கே-எஸ்-கலை

வறுமைக்கும் வயதிற்கும்
இடையில் போராடி
உத்தரவின்றி பிறக்கும்
உணர்வுகளை மென்று
உணர்சிகளைக் கொன்று
உறவோடும் உலகோடும்
போராடும் போராளிகள் !
கனவுப் பூ பறித்து
கண்ணீர்த்துளி தெளித்து
மனத்துள்ளே மரணித்து,
பணத்திற்காய் ஜனனித்த
பாவங்களின் கூலியாய்
பரிதவிக்கும் ஏமாளிகள் !
ஆருடர்கள் மனம்தேடும்
ஆயிரங்கள் கரைந்தாலும்
நாதனென நாதியேதும்
ஊருலகில் கிடையாது -
ஆலயங்கள் பூஜையெலாம்
அஸ்தமனம் மட்டும் தரும் !
வண்ணத் திருமேனி
வண்ணமற்று போகும்வரை
எண்ணங்கள் துருவாகி
எண்ணி எண்ணிச்
சிறகொடிந்து
கன்னிச் சிறையருகே
காலங்கள் கழிந்தோடும்-
கண்ணீரும் சேர்ந்தோடும் !
பெற்றோர்கள் மனம்வாட
மற்றோர்கள் வசைப்பாட,
விருந்தாக விடமுண்டு
தடுமாறும் நிலைவந்தும்
தாலிக்கு பேர்சொல்ல
எவருமில்லை தரணியிலே !
எந்நேரம் என்நேரம்
என்றுதினம் மனம்ஏங்க
கண்ணாடி முன் நின்றால்-
காதோரம் நரைமின்னும்
கண்ணோரம் துளிச்சிந்தும் !
கனவோடு பார்த்திருப்போம்
காலமெலாம் காத்திருப்போம்
விலைகூற பலர் வருவார்
நிலைமா(ற்)ற யார் வருவார் ?