திடீர்க் காதல் கவிதைகள்

சிக்னல் கம்பத்திற்கு மூன்று கண்கள்
பச்சை ஒளிக்குக் காத்திருக்கும் கூட்டம்
பார்த்திருப்பதென்னவோ உன் இரு கண்கள்...!
-/

முன்னேறத் தடை
முற்றுப் புள்ளி என்கிறாய்...
வேகத்தடை
மெதுவாக முன்னேறு என்றே
அர்த்தம் கொள்கிறேன்
மூக்கிற்குக் கீழே சின்னதாய் உன் மச்சம்...!
-/

பூக்காரிகளின்
பூ வாங்கிப் போ... பூ வாங்கிப்போ
என்ற குரல்கள்
எனகென்னவோ
கூடைப் பூக்கள் தாம்
உன் கூந்தல் சேர
என்னை வாங்கிப்போ
எனக் கெஞ்சுவதாகத் தோற்றம்...!
-/

நீளும் இந்தக் கரிய இரவை
நீட்டித் தார்ச் சாலையாக்கி இப்போதே
உன்னை வந்து சேர்ந்து விடவேண்டும் நான்...!
-/

நீண்ட இந்தப் பகலை
வெட்டி வெட்டி
அந்திக்குள்
உன் பாத விரல்களுக்கு
மெட்டி செய்து விட வேண்டும் நான்.
-/

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (25-Feb-14, 6:58 am)
பார்வை : 509

மேலே