சோகச் சுவடுகள் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் டேவிட் ராஜ போஸ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
சோகச் சுவடுகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தேவிஸ் பதிப்பகம் ,தேவிஸ் வில்லா , சித்தாரல் அஞ்சல். கன்னியாகுமரி .629151. விலை ரூபாய் 40.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்கள் குமரி மாவட்டம் நெய்யூர் இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் .பரபரப்பான கல்லூரிப்பணி ,கல்விப்பணி இவற்றுடன் கவிதைப்பணியும் புரிகின்றார் .பாராட்டுக்கள் .நூலின் அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று . ஈழ சோகம் , பஞ்சாப் குண்டு வெடிப்பு ,சுனாமி என சோகச் சுவடுகள் புகைப்படங்களுடன் அட்டைப்படம் உள்ளது .அச்சு நேர்த்தியாக உள்ளது .கவிதைகளின் இறுதியில் கவிதை பற்றிய விமர்சனங்களும் உள்ளன .வித்தியாசமான பதிப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர்
ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்கள் ஆங்கிலப் பேராசிரியாராக இருந்தபோதும் உலகின் முதல் மொழியான தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழ்க் கவிதை வடிப்பதற்கு முதல் பாராட்டுக்கள் .உதவிப் பேராசிரியர் முனைவர் சி .கணேஷ் அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் தன்னுரையில் கவிதை குறித்த விளக்கம் நன்று .
மனிதநேய மாண்பாளர்கள் ,இரக்க குணம் உள்ள யாராலும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமைகள் ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் நடத்தப் பட்டது .அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. தமிழ் இன அழிப்பை நடத்திய கொடூரன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பம்.இன்று கூட ஈழத்தில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் கிடைப்பதாக செய்தி படித்தேன்
ஈழம் குறித்த கவிதை நன்று .
ஈழமே என் தமிழ் இனமே !
கண்ணீர் துளிபோன்று
தண்ணீர் சூழ்ந்த
குட்டித்தீவு
இலங்கை !
அதை எட்டிப் பார்த்தால்
நடுங்குதே
நாடி நரம்புகள் !
சிங்கள சிப்பாய்கள்
சீறிப் பாய்ந்தனர்
தமிழன் நிழல் மீதில் !
தெருவெல்லாம்
ரத்த ஆறு !
செடி கொடிகளில்
இளம் பிஞ்சுகளின்
இரத்த துளிகள் !
போபால் விச வாயுவால் பல உயிர்கள் மடிந்தன .பல உயிர்கள் சிதைந்தன .இந்த கொடுமைக்குக் காரணமான கொடியவன் ஆன்டர்சனை தனி விமானத்தில் தப்பிக்க விட்ட செயலை மன்னிக்கவும் மறக்கவும் முடியாது .
போபால் .. விசப்புகைகூடாரம் !
கார்பைடு என்ற விசக் கூடாரம்
கக்கித் தள்ளிய விசப் புகையால்
அமெரிக்க நாட்டின் ஆன்டர்சன்
அதிகாரப் பிடியில் கார்பைடு
எமனின் தூதுவன் வேடமிட்டு
எல்லா உயிரையும் கவ்விக் கொண்டான் !
இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு சேரவில்லை .இது போன்று நட்ட ஈடு தர முன் வராத இரசியாவின் ஆபத்தான கூடங்குளம் அணு மின் நிலையத்தை அவரசமாக திறந்துள்ளனர். இதற்காகவும் பின்னர் வருத்த வேண்டி வரும் . இடிந்தகரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் .தமிழகத்தை ஆபத்தை சோதித்துப் பார்க்கும் மாநிலமாக மாற்றி வருகின்றனர் . இது போன்ற சிந்தனைகளை விதைத்து கவிதை .
பள்ளிக்குழந்தைகளின் உயிரைக் கொன்று குவித்த மறக்க முடியாத கும்பகோணம் தீ விபத்து பற்றியும் கவிதை வடித்துள்ளார்மிக நன்று .
கும்பகோணம் குரல்கள் !
கூனிக் குறுகிப் போனாய் !
உன் பூந்தொட்டத்தில்
பூத்து நறுமணம்
வீசி தென்றலசைவில்
அலைந்தாடிய
எங்கள் இளம் மொட்டுக்களை
மண்ணோடு மண்ணாய்
சாம்பலாக்கி விட்டாயே !
இயற்கையை மனிதன் இரக்கமின்றி சிதைக்கச் சிதைக்க இயற்கை பொங்கி எழுந்து வந்து சுனாமியாக சிதைத்தது.ஆனால் மனிதன் இன்னும் திருந்தாமல் மலைகளை தகர்ப்பது ,மணல்களை கொள்ளை அடிப்பது ,மரங்களை வெட்டி வீழ்த்துவது ,பாலிதீன் பைகள் பயன் படுத்துவது .சுற்றுச் சுழல் மாசு படுத்துவது தொடர்கதையாகி தொடர்கின்றது .சுனாமி பற்றிய கவிதை நன்று .
அழுதிட ஆளில்லை !
பண்டிகை நாட்களாம்
கிறிஸ்மஸ் நாட்களில்
கொண்டாட்டம் முடிந்தபின்
திண்டாட வைத்தாயே !
விரைந்திட்ட எங்களையே
மடித்து சுருட்டினாயே !
மயான உன் அலைதனிலே !
சோகச் சுவடுகள் கவிதைகள் மனதில் மறக்காமல் வடுக்களாக உள்ள முக்கிய நிகழ்வுகளின் சோகத்தை உணர்த்தி மறக்க முடியாத கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--