நான் தமிழில் மொழிபெயர்த்தக் கதை

(இச்சிறுகதை "சிலியில் ஒரு நிலநடுக்கம்" என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புச் சிறுகதைப் பகுதியில் "தீக்கதிர்" என்னும் தமிழ் நாளிதழின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பான் "வண்ணக்கதிரில்" 16.09.2007 அன்று பக்க எண்கள் 3 மற்றும் 4ல் வெளிவந்தது. இந்நேரத்தில், மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய என் தமிழ்ப் பேராசிரியை, பண்டாரகர். (திருமதி). பத்மாவதி விவேகானந்தன் (தமிழ்ப் பேராசிரியை, மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை 24) அவர்ளுக்கும் "தீக்கதிர்" நாளிதழ்க் குழுவினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)


சிலி, ஐரோப்பிய மொழியான ஸ்பானிசு மொழியினைப் பெரும்பான்மையாகப் பேசும் மக்களையுடைய தென் அமெரிக்க நாடு. அந்நாட்டினை 1647 ஆம் ஆண்டில் ஒரு நில நடுக்கம் உலுக்கியது. அந்நேரம் அங்கு நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்ச்சியினைக் கருவாக்கி ஜெர்மானிய மொழியில் சிறுகதையாக எழுதினார் என்ரிச் வான்க் கெளயிஸ்ட் (1777 / 1811). அச்சிறுகதையின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து இக்கதை தமிழில் தரப்படுகிறது. பண்பாட்டுப் பிதபோக்குத்தனங்களின் மானுட விரோத முகத்தைக் காட்டுகிற இக்கதை ஆங்கிலத்தில் எவ்வாறு சுருக்கமாக மறுபதிப்பு செய்யப்பட்டதோ அதே நடையில் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது.

சிறையில் ஜெரோனிமோ ருகேரா தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க முயல்கிறான்.

டான் ஆஸ்டிரான் என்பவரின் மகள் ஜோஸபெவிற்கு ஆசிரியனாக பணியாற்றி வந்தவன் அவன். ஆசிரியனான அவன் நாளடைவில் காதலனாகவும் ஆனான். அவர்களுடைய காதல் உறவை ஜோஸபெவின் வீட்டார் அறிந்தவுடன் ஜெரோனிமோவைத் துரத்தி அடித்தனர். அதன் பின்னரும் ஜோஸபெவின் உடன் வயிற்றோன் (சகோதரன்) அறிந்துக் கொள்ளும் வரை அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆத்திரத்தில் பொங்கிய ஆஸ்டிரான் தன் மகளைத் தேவாலயத்தில் சேர்த்து விட்டார். அங்கேயும் அவர்கள் காதல் தொடர்ந்தது. களவியலின் விளைவாக தேவாலயத்தின் வாயிற் படிகளில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் ஜோஸபெ. அந்தக் குழந்தைதான் பிலிப்.

செய்தியினைக் கேட்டுப் பெரிதும் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஜோஸபெவிற்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கினர். ஜோஸபெவிற்கான ஒறுப்பினை நிறைவேற்றுவதற்காக ஒரு நாள் அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த ஊர்வலத்தின் இரைச்சலை, சிறைக்குள்ளிருந்து கேட்ட போதுதான் ஜெரோனிமோ தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்வதற்கு முயல்கிறான். அவன் தூக்குக் கயிற்றினைத் தன் கழுத்தில் போட முயலும் தருவாயில் பெரும் நிலநடுக்கம் ஊரையே குலுக்குகிறது. அந்த நிலநடுக்கமே அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது.

ஜோஸபெவை எண்ணிப் பெரிதும் வருந்தகிற அவன் ஊர் மக்களின் அவல நிலைக்கு நடுவில் அங்கும் இங்குமாக ஜோஸபெவைத் தேடி அலைகிறான். அன்று மாலை அவளைத் தன் மகனுடன் ஒரு குட்டைக்கு அருகில் கண்டு பிடிக்கிறான். அவர்களுடன் மகிழ்ச்சியாக இணைகிறான்.

ஜோஸபெ ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட நேரத்தில் நிலநடுக்கம் தாக்கியது, அது அவள் தப்பிக்க ஏதுவாயிற்று என்பதை அவளிடமிருந்து கேட்டுத் தெரிந்துக் கொண்டான். தேவாலயத்தில் ஒரு கன்னித் துறவியிடம், தான் ஒப்படைத்திருந்த மகனை மீட்டு வரச் சென்றதையும் அங்கு அக்கன்னி உட்பட ஏனையவர் அனைவரும் நிலநடுக்கத்தின் தாக்குதலில் இறந்து விட்டிருந்ததையும், தன் மகனை அங்கிருந்து எளிதில் மீட்டு வரமுடிந்ததையும் அவனிடம் சொல்கிறாள் ஜோஸபெ.

மகிழ்ச்சியின் எல்லையிலிருந்த அவர்கள், ஜோஸபெவின் பெற்றோர் வாழும் லா கன்செப்சியான் நகரத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று தங்களுடைய வாழ்நாளைக் கழிக்க முடிவு செய்கின்றனர்.

நில நடுக்கத்தின் தாக்குதலிருந்து மீளாத ஊர் மக்கள் தெருக்களிலேயே இருக்கின்றனர். அப்போது பச்சிளங் குழந்தையான் ஜீவான் பசியால் அழுகிறான். அக்குழந்தையின் தந்தை டான் ஃபெர்னான்டோ, தன் குழந்தைக்குப் பாலூட்டும் நிலையில் இல்லாத அளவிற்கு தன் மனைவி டான் எல்விரா அடிபட்டிருக்கிறாள் என்பதை ஜோஸபெவிடம் விளக்குகிறார். அவளே தன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டுமென்று வேண்டுகிறான்.

ஜோஸபெவும் மகிழ்ச்சியுடன் அதற்கிசைந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறான். பூரித்துப் போன டான் ஃபெர்னான்டோ, ஜோஸபெவையும் ஜெரோனிமோவையம் தன் குடும்பத்து மனிதர்களாகவே கருதுகிறார். அவர்களைத் தன் மாமனாரிடமும் மனைவியின் தங்கையான டோனா கான்ஸ்டான்சாவிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

நில நடுக்கத்தின் தாக்கத்திலருந்துத் தப்பிய அருகிலிருந்தத் தேவாலயம் ஒன்றில் அன்று மாலை வழிபாடு நடக்க உள்ளது என்பதனை எல்லோரும் அறிகின்றனர். பெர்னான்டோவின் மனைவியையும் மாமனாரையும் தவிர எல்லோரும் வழிப்பாட்டிற்கு்க கிளம்பிச் செல்கின்றனர். அவர்கள் கிளம்பும் போது பெர்னான்டோவின் மனைவி ஜெரோனிமோவிற்கும் ஜோஸபெவிற்கும் ஆபத்து நிகழக்கூடும் என்று எச்சரிக்கிறாள். அதனைப் பெரிதாகக் கருதாமல் பெர்னாண்டோ பிலிப்பைத் தூக்கிக் கொள்ள, ஜோஸபெ ஜீவானைத் தூக்கிவைத்துக் கொள்ள, ஜெரோனிமோ, டோனா கான்ஸ்டான்சா எல்லோரும் தேவாலாயத்திற்குப் பயணமாகிறார்கள்.

முதலில் விவிலியக் கதைகளைப் பற்றி விரித்துக் கூறப்பட்டுக் கொண்டிருந்த தேவாலயத்தில் சிறிது நேரத்தில் ஜெரோனிமோ மற்றும் ஜோஸபெ இருவரது குற்றம் பற்றி பேசப்படுகிறது. தங்களுக்கு உறுதியாக ஆபத்து நேரக்கூடும் என்பதனை உணரும் அவர்கள் ஆறுபேரும் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகிறார்கள்.

அப்போது கூட்டத்திலிருந்து முன்னால் வரும் ஜெரோனிமோவின் தகப்பன் அவனைக் கட்டையால் தாக்கிக் கொன்று விடுகிறார். ஜேரோனிமோவின் அருகில் நிற்கும் கன்ஸ்டோன்சா அஞ்சி நடுகங்குகிறாள். அதனைப் பார்க்கும் செருப்புத் தொழிலாளி ஒருவர் அவள் தான் ஜோஸபெ என்றெண்ணி அவளைத் தாக்கிக் கொல்கிறார். அதிர்ந்துபோகும் ஜோஸபெ தன் கையிலிருக்கும் பெர்னான்டோவின் குழந்தையை அவரிடமே கொடுத்து விட்டுத் தானே ஜோஸபெ என்று அறிவிக்கிறாள். அடுத்த நொடியே அவளும் தாக்கப்பட்டு இறக்கிறாள்.

இரண்டு குழந்தைகளை வைத்து நின்றுக் கொண்டிருக்கும் பெர்னான்டோவிடம், பாவத்தில் தோன்றியக் குழந்தை உயிருடன் இருத்தல் கூடாது என்றுக் தொலைவிலிருந்தக் கம்பத்தில் வீசி எறிந்துக் கொன்று விடுகிறது கும்பல். குழந்தை பிலிப்பை பெர்னான்டோவும் அவர் மனைவியும் தங்கள் மகனாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டுச் செல்கின்றனர்......

எழுதியவர் : Yaazhini Kuzhalini (4-Mar-14, 4:29 pm)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 155

மேலே