அவளின் எச்சங்கள்

அவளின் எச்சங்கள்

செவிகளையடைக்கின்ற கஜலின்
இசைராத்திரியொன்றின் நிலாவொளியில்
அலைகள் காய்கின்றது
கடற்கரைமுற்றத்தின்
அன்றையத்தோன்றல்களை
குவளைத் தேநீரின்
பிரியமிடறலோசைகளுடன்
அனுபவித்தாலென்னவென்பதுபோல்

மெதுவாக என்முன்னிலே
வந்துநிற்குமாயொரு மருட்சியில்
நள்ளிரவுபூத்த ஆவாகைமணங்களோடு
எதிர்த்திசையிலேச்சுழலுகின்றது புவிக்கோளம்

முட்டித்தள்ளுகின்ற பிரணயவாசத்தையுணர்ந்து
காரணங்கேட்குந் தருவாயில்
அந்த இதழ்விரித்த ஈர்ப்படுகையில்
வீழ்ந்திறந்தவனாய்ப் புதைகின்றேன்

"காதல்வயதின் வேலியகற்றித்திரியும்
நண்பர்கள் கூட்டத்தின்
கேளிக்கைகளுக்குமத்தியில்

அக்கல்யாண சத்திரத்தின்
சமையலறை மின்குமிழியின்
அரைவெளிச்சத்தினோடுநிறைந்த
புகைமூட்டத்தினிடையே
இமைகளிறுகத் திரும்பியபோது"

உப்பரிகைமாடத்து திருவாசல் சுவர்களில்
கன்னங்களை சாய்த்தபடி
அகச்சிவப்பு புறவூதாக்கதிர்களோடு
சிரிக்கின்றவொளியாய்த் திகழ்ந்தாள்

ஒளிபுகும் ஊடகத்தினூடேச்சென்று
உள்ளிலெழுந்த ஒளியினோடு
ஓர் ஒளிச்சிதறல்
நிகழ்வுகளை நிறைவேற்றியவள் அங்கிருந்துநகர்ந்தாள்

விரைத்துப்புடைத்த
நெஞ்சாங்கூட்டினுள்ளிலே
ஏதோவோர் இடர்நெருக்கடி சேர

அதுவரை
இழந்ததாய்க்கருதியவனைத்தும்
அக்கணத்தில் நாடிவந்தருகேநின்றது
போலதில் கரைந்தேபோனேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (6-Mar-14, 3:01 am)
பார்வை : 102

மேலே