உலக மகளிர் தினம் 08 03 2014

உலகில் சாதிகள் இரண்டே உண்மையில் ​
​ஆண்மைக்கு சாட்சியாய் ஆண்சாதி ஒன்று
பெண்மைக்கு காட்சியாய் பெண்சாதி என்றும்
உணர்ந்தவர் இதனை உலகத்தில் சிலர்தான் !

புவியில் வாழ்ந்தனர் புரட்சிகளும் புரிந்தனர்
புரட்டிப் பார்த்தால் வரலாற்றில் அறியலாம் !
புதுப்பாதை கண்டனர் புதினத்தில் பெண்கள்
புதுமைகள் படைத்து புதுயுகம் அமைத்தனர் !

அடங்கி வாழ்ந்தவரும் ​அடக்கி ஆள்கின்றனர்
ஆணுக்கு இணையாய் அகிலத்தில் உள்ளனர் !
நாணம் தவிர்த்தாலும் நாகரீக பெண்களும்
நவீன உலகத்தின் நாளைய பக்கங்களே !

உறவுகளில் உயர்ந்தவர் தாயும் தாரமும்
உணர்ந்தவர் உண்டு உலகில் ஆண்களும் !
உலகெங்கும் மகளிர் உவகை பெற்றிடவே
உலகத்தில் மகளிர் தினமும் திருநாளானது !

சாதனை புரிந்தனர் சாதிக்கப் பிறந்தவர்கள்
​அன்னை தெரசாவை அகிலமே மறக்காது ​!
கல்பனா சாவ்லாவோ விண்ணளவு சாதனை
சாதித்தவர் பலர் பலர் சான்றுகள் பல பல !

பட்டியல் இல்லை சுட்டிக்காட்டினேன் சிலரை
பாராட்டுவோம் நாமும் மனதார மகளிரை !
முன்மொழிய எண்ணியே முந்திக் கொண்டேன்
உலக மகளிர்க்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !

உருவாகும் கருவை உருவாக்கும் பெண்கள்
தருவாக வளர்ந்திட தளராமல் உழைத்திடுவர் !
மண்ணில் வாழும்வரை மரணிக்கும் நேரம்வரை
ஈன்றெடுத்த மக்களை இமையாய் காத்திடுவர் !

தந்தைக்கும் மகனுக்கும் பாலமாய் திகழ்வாள்
மகனின் மனைவியயும் மகளாய் நினைப்பாள் !
குடும்பத்து பொறுப்பை குலமகள் தாங்கிடுவாள்
பிள்ளைவழி பிள்ளைகளை கொஞ்சி மகிழ்வாள் !

பன்முகம் கொண்ட பெண்ணினம் பேரினமே
இன்முகம் என்றுமே இவ்வுலகின் பேரின்பமே !
அனைவரும் மகிழவே அனைத்தையும் துறப்பாள்
மூலவர் ஆண்தான் மூலபொருளோ பெண்தானே !

என் இதயம் நிறைந்திட்ட
உலக மகளிர் தின வாழ்த்துக்கள் !

​பழனி குமார் ​
06.03.2014

எழுதியவர் : பழனி குமார் (6-Mar-14, 3:07 pm)
பார்வை : 1172

மேலே