ஆத்மா என்று ஒன்று இருக்கின்றதா
நசிகேதஸ் :
வைராக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த சிறுவன் .
கடோபநிஷத்தில் வரும் கதை . .
சுவர்க்க பதவியை அடைவதற்காக விச்வஜித் என்னும் யாகத்தை வாஜஸ்ரவசர் என்பவர் நிகழ்த்தினார்.
அந்த யாகத்தைச் செய்பவர் தன்னிடமுள்ள செல்வங்களை யெல்லாம் தானம் செய்துவிட வேண்டும் என்பது நியதி.
அவருக்கு நசிகேதஸ் என்ற ஒரு மகன் இருந்தான். சிரத்தையின் மறு உருவமாய்த் திகழ்ந்த அவன், தனது தந்தை புரோகிதர்களுக்கு அளிக்கும் மலடு தட்டிய கிழட்டுப் பசுக்களைப் பார்த்துத் திகைத்து நின்றான்.
தனது தந்தையின் வேள்வியில் ஏற்பட்ட இக்குறையை ஈடுகட்டுவதற்கு, மகன் என்ற முறையில் தான் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று நசிகேதஸ் எண்ணினான். தன்னையே தானமாகக் கொடுப்பதற்குத் தான் ஒப்புக் கொள்ள வேண்டும் அன்று அவன் முடிவு எடுத்தான்.
எனவே, அவன் தனது தந்தையை அணுகி, “நீங்கள் என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். மூன்றாவது முறையாக நசிகேதஸ் இதே கேள்வியைக் கேட்டதும், வாஜஸ்ரவசர் கோபமாகத் தன் மகனைப் பார்த்து, “உன்னை யமனுக்கு அளிக்கிறேன்” என்று கூறினார்.
“என் தந்தை ஒரு பேச்சுக்காக இத்தகைய வார்த்தைகளைக் கோபத்தில் கூறியிருந்தாலும் அவை பொய்யாவதற்கு அனுமதிக்கக் கூடாது” என்று நசிகேதஸ் நினைத்தான்.
அச்சிறுவன் யமலோகத்தைச் சென்றடைந்தான். அங்கே யமன் இல்லாததால், நசிகேதஸ் பொறுமையாக மூன்று நாட்கள் யமனுக்காக வாசலிலேயே காத்திருந்தான். வெளியில் சென்றிருந்த யமன் திரும்பி வந்ததும், அச்சிறுவனைத் தான் மூன்று நாட்கள் காக்க வைத்ததால் வந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அவனுக்கு மூன்று வரங்களை அளித்தார்.
மூன்றாவது வரமாக, இறந்த பிறகு, உடல், இந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஆத்மா என்று ஒன்று இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக நசிகேதஸ் யமனிடம் கோரினான்.
ஆத்மாவைப் பற்றிப் போதிப்பதற்கு முன், அதற்கு வேண்டிய தக்க மனவுறுதியுடன் நசிகேதஸ் இருக்கின்றானா என்று அவனைப் பரீட்சை செய்வதற்காக, யமன் அவனைப் பலவிதங்களில் ஆசை காட்டி மயக்கிப் பார்த்தார்.
நசிகேதஸை நோக்கி, யமன் பேசத் தொடங்கினார். “நூறு வருடங்கள் வாழக்கூடிய புத்திரர்களையும், பேரன்களையும் விரும்பிக் கொள். பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் யானைகளையும் கேள்; நிறைய தங்கத்தையோ அல்லது பரந்த நிலங்களையோ கேள், தருகிறேன். உன் விருப்பம் போல் எத்தனை ஆண்டுகளானாலும் ஜீவித்துக் கொள். இவற்றிற்குச் சமமான வேறு ஏதாவது வரத்தைக் கேட்க ஆசைப்பட்டாலும் கேட்டுக் கொள். நீண்ட ஆயுளையும், மிகுந்த செல்வத்தையும் கேள். அல்லது பெரிய இராஜ்ஜியத்திற்கு உன்னை அதிபதியாக்குகிறேன். எல்லாப் போகங்களையும் அனுபவிப்பதற்கு ஏற்றவாறு உன்னைத் தயார் செய்கிறேன்”
“அடைவதற்கு மிக துர்லபமான பொருள்களையும் உனது விருப்பம் போல் கேட்டுக் கொள். ரதங்களோடு மற்றும் இசைக் கருவிகளோடு கூடிய தேவலோகத்துக் கன்னிகைகள் இங்கு இருக்கிறார்கள்; மானிடர்களால் அவர்களை அடைய முடியாது. நீ விரும்பினால், அவர்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உடல் நீங்கியபின், அதனின்று வேறுபட்டது ஏதாவது இருக்கிறதா என்று கேள்வியைப் பற்றி மட்டும் விசாரிக்காதே.”
யமன் தன்னால் முடிந்த வரையில் எல்லாவித போகங்களையும் கொடுத்து அச்சிறுவனை மயக்க முயற்சித்தாலும், அமைதியான பெரிய நீர்நிலையைப் போல் நசிகேதஸ் அவற்றால் சிறிதும் மனக்கலக்கம் அடையாமல் உறுதியுடன் நின்றான்.
அவன், “ஓ, யமனே! உங்களால் இது வரையில் சொல்லப்பட்ட அத்தனைப் போகங்களும் முடிவில் மறையக்கூடியவையே. தவிரவும், அவை மனிதனுடைய இந்திரிய சக்தியை வீணாக்கி விடுகின்றன. கடைசியில், விதிவிலக்கு இன்றி, இவை எல்லாமே ஒரு நாள் முடிவடைந்து போவதால், இவை அற்ப ஆயுளைக் கொண்டதுதான் அன்றோ! ஆகையால், இவையெல்லாம் தங்களுடையவைகளாகவே இருக்கட்டும்” என்று கூறினான். தான் கோரிய வரம்தான் தனக்கு வேண்டுமென்று யமனை அவன் வற்புறுத்தினான்.
நசிகேதஸினுடைய மனவுறுதியையும், வைராக்கியத்தையும் கண்டு வியந்த யமன், அவனுக்கு ஆத்மவித்தையை எடுத்துரைத்தார். அதைக் கேட்ட அச்சிறுவன் ஞானியானான்.
அசைக்க முடியாத வைராக்கியத்தைப் பெற்றவனே ஆத்ம ஞானத்தை அடைவதற்குத் தகுதியுள்ளவனாகிறான் என்னும் இக்கருத்தை, கடோபநிஷத்தில் வரும் இக்கதை நன்கு வெளிப்படுத்துகிறது.
பொன் பொருள் சதமென்று பூமியிலே அலைந்து
பொய்யை மெய்யென்று நம்பி விட்டேன்
உன்மலர்ப் பாதாரம் மறந்து விட்டேன் ஐயா
இன்று தான் உண்மையை உணர்ந்து கொண்டேன் ...
பட்டினத்தார் சினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை.