தீப் பூந்தொட்டி
பூமியின்
கருத்த நிர்வானம்
ஒளிரும் அழகே இரவு
மேகதூது விடுகின்றாள்
மேற்கே தலை சாய்த்த பூமி
வாஞ்சையுடன் வானம்
வாலிபனாய் கிழக்கிரவில்
வெளிச்சம் தின்று செரிக்காத
நிலவின் ஒளிச்சிதறல்
பூமிக்காய் அவளெடுக்கும்
மசக்கை வாந்தி
வியர்க்கக் கலந்ததில்
வீழ்ந்த நீர்த் துளி
விசும்பின் விந்தணு
இரவெல்லாம் புணர்ந்ததற்கு
இப்படியா சிவக்கும் அடிவயிறு
பிரசவமாகிறான் சூரியக் குழந்தை
பிறந்ததும் தவழுதொரு
தீப் பூந்தொட்டி
அப்பனின் கை பிடித்து
அன்னைப் பாலருந்த
அழகாய்த் தவழ்கிறான்
அவள் தம் மேற்கு நோக்கி
பாலுண்ட மயக்கத்தில்
கண்ணயர்ந்து வீழ்கின்றான்
கடலானது தொட்டில்
தாலாட்டுப் பாடு நிலா
செவிலித்தாய்
இரவெல்லாம் பாடுகிறாள்
ஓயாத ஒளீப்பாட்டு
தாங்களும் உறங்கவில்லை
தாரகைப் பொம்மைகள்
ஓர் நாள் உயிரியோ சூரியனும்
ஆம்
இன்றைய கலவியில்
நாளை புதுச் சூரியன்
நாமும் தினமும் செத்தால் என்ன ?