திரும்பிப் பார்
மனிதா!
திரும்பிப் பார்!
நீ பயணம் செய்து வந்த
பாதையை -
திரும்பிப் பார்!
* வீணாகிப் போன நாட்கள்-
விரயமாக்கப் பட்ட கவிதைகள்-
விழுந்து கிடக்கும் முயற்சிகள்-
வீதியோரங்களில் உன் கனவுகள்!
* கடலைக் கடக்க
படகுகள் இருந்த போது
கப்பலைத் தேடினாய்...
கப்பல் உனக்காகக்
காத்திருந்த போதோ-
கட்டுமரத்தைத் தேடுகிறாய்!
கட்டுமரமும் காணாமல் போனது...
படகுகளும் பழுது பட்டன...
கப்பலின் ஓசை -
கடலுக்குள் பெரும் இரைச்சலாய்!
நீந்தத் தெரியாத உனக்கு
கடலின் ஓசைகள்
சங்கீதமாய்க் கேட்டது...
கரையிலமார்ந்தே ரசித்தாய்!
* ஒட்டகங்கள் உனக்காகக்
காத்திருந்த போது -
பசுஞ்சோலையில்
பயணப் பட்டாய்!
ஒட்டகங்கள் ஓடிப்போனபின்
பாலைவனத்தில்
பயணப்படுகிறாய்...
பாதியில் நின்றது பயணம்!
*
நீ கடந்து வந்த
வாழ்க்கை பாதையின்
வளைவு நெளிவுகளை
எண்ணிப்பார்!
கனவுக் கரையான்களால்
அரிக்கப்பட்டே
இற்றுப் போனது
இதயம்...
இனியேனும்-
உன் முயற்சிகள்
தாலாட்டுப் பாடிடும்
தென்றலாய் அல்ல...
தேன் மலரைத் தேடிடும்
தேனீக்களாய் இருக்கட்டும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
