மொத்தமாக கரையப் போறோம் - மணியன்

எங்களுக்கு இங்கு
எல்லாமே இலவசம். . .
ஏனிந்தக் கல்வி மட்டும்
எப்போதும் விபச்சாரமாய். . . . .
**********

இருப்பதைப் பிரித்து
இனிதாகப் பங்கு வைக்க . . .
எவனுக்கும் இன்றுவரை
எள்ளளவும் மனமும்.இல்லை. . . . .
**********

கொடுப்பதைக் கொடுத்தால்
கொல்ல வரும்
காலன் கூடக்
கோழையாகிக் கூனிக் குழைவான். . . .
**********

நாட்டுக்குள்ளே நல்லவனை
நலம்செய்ய நாதியில்லை. . . .
வீட்டுக்குள்ளே துன்பமன்றி
வேறுதுணை யாதுமில்லை. . . . . .
**********

உலையிங்கு கொதிக்கவில்லை
உள்மனதோ வேகிறது. . . .
நிலையெண்ணிப் பார்க்கின்றோம்
நிர்மலமாய்க் கனவுகளே. . . . .
**********

சேர்த்திடப் பொருளுமில்லை
சேமிக்க வகையுமில்லை. . . .
வரும்வரவு போதவில்லை
வயிறு நிரம்ப வழியுமில்லை. . . . .
**********

சோறுக்கு சூனியத்தைச்
செய்து வைத்தப் பாவியரே. . . .
ஊனுக்குள் உறைந்திட்டு
உருவாகும் பசியதை அறிவீரோ. . . .
**********

யாருக்கும் எதுவுமில்லை
பேருக்கே வாழ்கிறோம். . .
பொறுத்தும் பார்த்துவிட்டோம்
பெருகியது பொறுமை மட்டுமே. . . .
**********

வக்கு மட்டும் கால்முளைத்து
வாக்கு ஆகி நிற்கிறது. . . .
சொக்குப் பொடி போட்டெம்மைச்
சொக்க வைக்க கூட்டமுண்டு . . . . . .
**********

வைக்கோலைப் போட்டுவிட்டு
வயிறறுக்கும் வஞ்சகர்போல்
தளர்ந்து நிற்குமெங்களைத்
தடவி விட்டு உயிர் கறப்பார். . . .
**********

சத்தமிடக் குரலுமில்லை
சித்தமெனக் குடியிருக்கோம். . . .
மெத்தனமாய் இருந்ததனால்
மொத்தமாகக் கரையப் போறோம். . . . .


*-*-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (19-Mar-14, 6:25 pm)
பார்வை : 285

மேலே