சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 6

அத்தியாயம் 6

மானிடா ! நீ சொன்னது சரிதான். தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட இடங்கள் ஏராளம். அதுபோல அண்டை மாநிலங்கள், தேசங்கள் என்று உலகம் முழுவதும் உள்ள இடங்கள் எத்தனையோ உள்ளன. அங்கு வாழும் ஜீவன்கள் கோடானு கோடிகள். பூகோள வாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பவை தான் நீ காணும் வரிசைகள். புரிந்ததா ?

ஓ .. வெகு நன்றாகப் புரிந்தது.மேலும் சொல்லுங்கள். கேட்கிறேன்.

பூமியில் நாளும் மடியும் உயிர்களை வெறும் இரண்டு யமகிங்கரர்களால் எப்படிக் கொண்டு வரமுடியும் என்று நீ சற்று யோசித்திருந்தால் உனக்கே உன் வினாவின் விடை தெரிந்திருக்கும். கேள்.

யமகிங்கரர்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள். அவர்களுக்கென்று எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி ஒன்றும் கிடையாது. என்று சொல்லி நிறுத்தவும்,

நான் ஒரு "சப்ளிமெண்டரி" கேள்வி கேட்கலாமா, என்று மிகுந்த தயக்கத்துடன் கேட்கவும், கிங்கரன்

நீ கேட்வேண்டுமென்று தான் நான் நிறுத்தினேன் என்று கூறவும், பின் எவ்வாறு கிங்கரர்கள் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள் ?

சொல்கிறேன். கேள்.

இயற்கை வகுத்த நியதிகளில் ஒன்று .. "ஆட்டொமடிக் ப்ரமோஷன் ஆஃப் லைஃப்" எனப்படுவது. நீ கரையான் பார்த்திருக்கிறாயா ?

ஓ .. பார்த்திருக்கிறேனே. பார்த்தது மட்டுமில்லாமல் பல கரையான்களை சுடுநீர் விட்டு சாகடித்திருக்கிறேன். ஓரிரு கவிதைகள் கூட புனைந்திருக்கிறேன். கரையான் மீது கவிதை எழுதிய முதல் மனிதன் நான் தான் என்று என் நண்பர் கூறியிருக்கிறார். ஆறு மாத காலம் மும்பையில் என் மகள் வீட்டிலிருந்து, சென்னைக்குத் திரும்பி வந்த போது வீட்டில் குளிப்பறையிலும், குறிப்பாக சமையல் அறையில் வெகுவாகவும் இருப்பதைக் கண்டு, சுமார் பத்தாயிரம் ரூபா செலவு செய்து, சிலமாதங்களுக்கு முன், பூச்சிக்கொல்லி மருந்து கூட அடித்திருக்கின்றோமே.

ஐய்யய்யோ ! உயிர்வதை செய்ததை ஒப்புக்கொண்டு விட்டேனே. எமதர்மராஜன் என்னை கொதிக்கும் எண்ணைச் சட்டியில் குளிக்கச் சொல்லிவிட்டால் என்செய்வேனோ .. தெரியவில்லையே .. கிருஷ்ணா .. குருவாயூரப்பா ..

உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியாது என்று முதலிலேயே சொல்லியிருக்கின்றேனே. மறந்து விட்டாயா ? நான் சொல்லவந்தது என்னெவென்றால் .. கரையான், கரப்பான் வகையில் சமஇறகிகள் வரிசையை சார்ந்த சமூக விலங்கு, ஒரு மூவறிவு ஜீவி என்பது உனக்குத் தெரியுமா ? ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிவிட்டன. கறையான்களில் பத்து சதவிகிதமே, பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. . சமஇறகிகள் என்ற கறையான் வரிசையில், ஏழு கறையான் குடும்பங்கள் உள்ளன. இக் குடும்பத்தில் பிறந்து இறந்த சமஇறகிகள் கிங்கரர்களாக நிமயமணம் செய்யப்படுகிறார்கள். தேவ மொழியில் சொல்வதென்றால் இது கறையான்களின் பிறப்புரிமை. ராணிக்கரையான் சொற்கேட்டு வாழ்நாள் முழுதும் உழைத்து, மூப்படைந்து உயிர் துறக்க விரும்பும் நேரம், உழைப்பு ஒன்றே குறிக்கோளாய்க் கொண்ட அந்தக் கரையான்களுக்கு சிறகு முளைக்க, ஈசல்புற்றிலிருந்து வெளியேறி பறந்த சில நிமிடங்களில் உயிர் துறக்கும். அப்படி உயிர் கரையான்களை பாம்பு, பல்லி, கோழி போன்ற ஜீவராசிகளுக்கு உணவாகின்றன. பிற உயிர் வாழ உணவாகிய கரையான்களே கிங்கரர்களாக நியமனம் செய்யப்படு கிறார்களாம்.

அப்பிடியா ?.. நம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நான் இவ்வாறு எங்கும் படித்திருக்கவில்லை. இது கிங்கரர்களின் கற்பனையாகக் கூட இருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால், இவ்வாறு பல உண்மையற்ற செய்திகள் முகநூல்களில் நாள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவின் தேசியகீதம் மற்ற தேசிய கீதங்களை விடவும் கேட்பதற்கு இனிமையாக இருப்பாதாக யு.என். அறிவித்து விட்டதாக ஒரு செய்தி வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருப்பது கிங்கரர்களாகிய உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

உண்மையோ .. பொய்யோ .. யாரறிவார் ? கேள்விப்பட்டதை சொல்கிறேன். அவ்வளவு தான்.

மேலுலகிலும் "ரூமர் மில்" இருக்கும் போல் தோன்றுகிறது.

- வளரும் -

எழுதியவர் : (26-Mar-14, 11:47 am)
பார்வை : 118

மேலே