புதுவையில் ஓர் பூக்குவியல்

ஈரோடு பெருந்தகை தமிழன்பன் அவர்களின் 80வது பிறந்த நாள் விழாவில் எழுத்து தோழமைகளின் படைப்புகளும் வெளியிடப்பட விருக்கிறது என்கிற செய்தி அறிந்த உடனே மட்டற்ற மகிழ்ச்சி.

விழா நடைபெறவிருக்கும் இடமும் தேதியும் குறிப்பிடப்பட்டு அழைப்பு வந்ததுதான் தாமதம் அந்த கணம் அடைந்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. அத்தனை மகிழ்ச்சி. இத்தனை நாட்கள் விரல் பேச்சுக்களில் வாழ்ந்திருந்த எழுத்து குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக கண்டு ஒலிப் பேச்சுகளில் மகிழ்ந்து களிக்கப் போகிறோம் என்று நினைத்தபோதே மனதில் ஒரு துள்ளல். விழா தேதி அறிவிக்கப் பட்ட தினத்திலிருந்தே நாட்களை எண்ணி எண்ணி கழித்துக் கொண்டிருந்ததை எப்படி கூற இயலும்??

சொல்லப் போனால் விண்ணிற்கு ராக்கெட் செலுத்தும்போது கவுண்ட் டவுன் என்பார்களே அதே போல்தான் நான் நாட்களை, நேரத்தை, மணித்துளிகளை எண்ணிக் கழித்துக் கொண்டிருந்தேன். இதோ அந்த இனிய நாள் வந்துவிட்டது. எப்பொழுது விடியும்?? எப்போது புதுவை செல்லலாம்??

மகிழ்ச்சியோடு புதுவைப் பயணம். புதுவையைத் தொட்டு நின்றபோது காலை 8.45 மணி. விழா நடைபெறும் அரங்கம் செல்ல இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் அங்குள்ள மனக்ககுல விநாயகர் தரிசனம் முதலில். அதனை தொடர்ந்து அரவிந்த அன்னை ஆசிரமம்.

விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வாசலைத் தொட்டபோது காலை நேரம் 9.40 மணி. என்னுடன் வந்த என் தம்பியை புதுவையில் இருந்த அவனுடைய நண்பர்கள் அங்கு வந்து அழைத்து சென்றுவிட்டார்கள் பணி நிமித்தமாக.

விழாவின் அரங்க வாயிலிலேயே உயர் திரு அகன் அய்யா அவர்கள், வருவோரையெல்லாம் வரவேற்றுக் கொண்டு. அரங்க வாயிலை நெருங்கும் முன்பாகவே அகன் அய்யா அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். "சென்னையிலிருந்து சாந்தி தானே நீங்கள்" என்று கேட்டவரிடத்தில் மகிழ்ச்சியுடனான வணக்கத்தை தெரிவித்துவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்தேன்.

ஆங்காங்கே நம் தோழமை நெஞ்சங்கள். பிரியா (ஆவாரம்பூ) தாரகை என்கிற ஹூஜ்ஜா, புலமி அம்பிகா இவர்களை பார்த்துவிட்டு முன்னேறுகிறேன் அங்கே KPP அய்யா அவர்கள். அவருக்கு என்னுடைய வணக்கத்தினை தெரிவித்துவிட்டு அமர்ந்தபோது அகன் அய்யா அவர்களின் அறிவிப்பு. விருது பெறுபவர்களும், புத்தக வெளியீட்டிற்கு படைப்புகளைத் தந்தவர்களும் முன் இருக்கைகளில் வந்து அமரும்படியான அறிவிப்பினை தொடர்ந்து ஆங்காங்கே அமர்ந்திருந்த படைப்பாளிகள் முன் இருக்கைகளில் வந்து அமர்ந்தபோதுதான் திரு பொள்ளாச்சி அபி, திரு ஜூலியஸ் ஜோசப், திரு அகர முதல்வன், திரு அகத்தியன் திரு கவிஜி ஆகியோர்களின் வணக்கத்துடனான அறிமுகங்கள். இருக்கையில் அமர்ந்த பின் திரும்பிப் பார்க்கிறேன் அங்கே தோழிகள் சியாமளா ராஜ சேகர் மற்றும் உமாபாரதி அனைவரின் புன்முறுவல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பவும் செலுத்தினேன்.

நிகழ்ச்சிக்கு வர ஆவலுடன் இருந்தும் தம்பி சந்தோஷ்குமார் வர இயலாது போனதை தோழி சியாமளா அவர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். தம்பியை காண இயலாது போனதில் எனக்கு வருத்தமே. இன்னும் பல தோழமை நெஞ்சங்கள் இந்த விழாவில் விடுபட்டுபோனத்தில் எனக்கு மன வருத்தமே.

வெளி நாட்டில் / உள் நாட்டில் வசிக்கும் சகோதரர்களும் தோழமை நெஞ்சங்களுமான திரு காளியப்பன் எசேக்கியல் அவர்கள் திரு அகமது, திரு மெய்யன் நடராஜன்(அதிநாடா) திரு கே.எஸ்.கலை, திரு நிலா சூரியன், திரு ரோஷன், திரு வேளாங்கண்ணி திரு சரவணா, திரு வினோத் கண்ணன் மற்றும் தோழிகள் புனித வேளாங்கண்ணி யாழினி, சுதா ஆகியோரை காண இயலாது போனதிலும் மனவருத்தமே. (பட்டியலில் யாராவது விடுபட்டு போயிருப்பின் மன்னிக்கவும்)

மேடையில் தமிழ் ஆன்றோர்கள் ஒவ்வொருவராக சொற்பொழிவாற்றினார்கள். பின்பு கவிஞர் பெருமக்கள் ஒவ்வொரு தலைப்பினில் ஒவ்வொரு கவிதையை உருக்கமாக வாசித்தார்கள். ஒருவர் இலங்கையில் வாழும் தமிழர் நிலையைப் பற்றி வாசிக்கையில் அழுதேவிட்டார். அங்கே இருந்தவர்களுக்கு எல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்தேபோனது.

கவிதை வாசிப்பிற்கு பின் விருதளிப்புகளும் புத்தக வெளியீடும் பெருந்தகை ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் திருக்கரங்களால் அவரவர்க்கும் வழங்கப் பட்டது. பின்பு தமிழன்பன் அய்யா அவர்களின் சொற்பொழிவு மழையில் நாங்கள் அனைவரும் நனைந்தோம்.
விழா மேடையில் திரு அகன் ஐயா அவர்களும் திரு அபி அவர்களும் இங்குமங்குமாக நடை பயின்று புத்தகங்களையும் விருதுகளை வழங்கும்போது அதற்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த வயதிலும் அகன் அய்யா அவர்கள் சளைக்காமல் எத்தனை முறை அந்த மேடையை விட்டு இறங்குவதும் ஏறுவதுமாக எவ்வளவு துடிப்புடன் இருந்தார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

விழா முடிந்தபின் உணவருந்தலாம் என்று உட்கார்ந்திருந்ததில் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. விழா முடிவடைந்தபோது மணி சுமார் 3.00 ஆகிவிட்டிருந்தது. அங்கே அளிக்கப் பட்டிருந்த பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு சிறிது பசியாற்றிக் கொண்டிருந்தேன்.

விழா முடிவடைந்து உணவருந்திவிட்டு அனைவரிடமும் விடை பெற்று திரும்பும்போது மனதில் ஒரு இறுக்கம் வந்து சூழ்ந்து கொண்டது. மீண்டும் அனைவரையும் இப்படி எப்போது ஒன்றாகக் காண்போம் என்று.

அனைவரையும் காணும் வண்ணம் இப்படி ஒரு விழாவினை ஏற்படுத்திக் கொடுத்த அகன் அய்யா அவர்களுக்கும் இந்த விழாவினை நடத்துதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

மேலும் இங்கே எழுத இடம் அளித்து ஒரு நட்பு வட்டத்தினை உருவாக்கிட வழி வகுத்து இப்படி ஒரு சம்பவம் நடைபெற முக்கிய காரணமாக இருந்த இந்த எழுத்து தள நிர்வாகி உயர்திரு ராஜேஷ் அவர்களுக்கும் இத்தளத்தினை நடத்த தமிழினை வளர்க்க உறுதுணையாக இருக்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்று பல நிகழ்ச்சிகள் நடைபெறவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படைப்பாளிகளை உற்சாகப் படுத்தவும் இத்தள நிர்வாகத்தினர் முன் வரவேண்டும் என்கிற விண்ணப்பத்தினை இங்கே நான் முன் வைக்கிறேன்.

தமிழ் வளர்க்கும் இத்தளத்தினருக்கு மீண்டும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் தொண்டு!!!

அன்புடன்,
சொ. சாந்தி,
சென்னை - 600 021.

எழுதியவர் : சொ. சாந்தி (27-Mar-14, 12:18 pm)
பார்வை : 238

சிறந்த கட்டுரைகள்

மேலே