அப்பனுக்கு கடிதம்

வாக்கப்பட்டு வந்ததுக்கு
வக்கனையா சோறு
ஆக்கிப் போட்டாச்சு!

ஆசைக்கொன்னும்
அவஸ்தைக்கொன்னுமாய்
பிள்ளை ரெண்டும்
பெத்து போட்டாச்சு!

மாமனாரின் மாமியாரின்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு
உலகத்து வேலைகளை
பார்த்தா கியாச்சு!

இன்னும் என்ன செய்ய
குடிகாரப் புருஷன்
திருந்த வழி இல்ல

வாழ்க்கையெனும்
சோலைக்காட்டில்
நான் இப்போ பொம்மை!

பாசக்கார அண்ணன்
ரோசக்கார தம்பி
அடிச்சதில்லை ஒருபோதும்
ஆத்திரத்தில் என்னை!

வாடிக்கையாய் அடிவாங்கி
வல்லூறின் இரையாகி
வாழுறேன் நான் இங்கே
வாழ்க்கையே தடம் மாறி!

குடியால அம்மாவ
கொன்னதுவும் போதாதுன்னு
கொடுத்த வாக்கு என்று
சொல்லி என்னையும் ஏன்

தள்ளி விட்ட அப்பாவே...
கொள்ளி ஏன் வச்ச
என் அப்பாவே.....

ஓயாம குடிச்சுபுட்டு
உன்னால நீ கெட்ட...
ஒருமுறையும் குடிக்காமலே
உன்னால நான் கெட்டேன்!

குடிகார அப்பா உனக்கு
மகளாக பிறந்தது
என் தப்பா?

குடிகார புருசனுக்கு
மனைவியாக போனது
என் தப்பா?

என் கவலை எல்லாம்
இப்போ என்னவென்று தெரியுமா?
என் மிச்ச மீதி உசுரும்
கொஞ்ச நாளில் போயிடும்!

உன்னைப்போல என் புருசனும்
வாக்கு கொடுத்ததாகச் சொல்லி
என்னோட சேர்த்து எம் மக
வாழ்க்கைக்குமாக கொள்ளி
வச்சுடுவானே -

என்ன செய்ய நான் இப்போ?
தீரும் இந்த வலி எப்போ?

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Apr-14, 12:07 pm)
Tanglish : appanukku kaditham
பார்வை : 302

மேலே