மனைவி சொல்லே மந்திரம்

ஒரு ஊரில் ஒரு ராஜா அரசாட்சி செய்து வந்தார். ஒருநாள் அவரது முக்கியமந்திரி, சிறிது காலதாமதமாக அரசவைக்கு வந்தார். உடனே அரசர் மந்திரியைப் பார்த்து, எதனால் காலதாமதம்? என வினவினார். மந்திரியும், அரசே எனது மனைவி அவளுக்கு ஒத்தாசையாக காய், கறி நறுக்கித்தரக் கூறினாள், அதனாலேயே தாமதம் ஏற்பட்டது எனவும், அதற்காக மன்னிக்கவும் வேண்டினார்.
அதைக் கேட்ட அரசரும், மிகுந்த கோபத்துடன் "நீர், ஒரு நாட்டின் முக்கியமந்திரி. அதிலும் எனது முதல் மந்திரி. கேவலம் ஒரு பெண் விடுத்த ஏவலை செய்துவிட்டு வந்து, புகழ் வாய்ந்த எனது அரசவையிலே, மற்றோர் அறியும் வண்ணம் அக் கருமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் மேலும் அதற்கு மன்னிப்பு வேறு வேண்டுகிறீர்கள்." என்று கூற, மந்திரியும் அடக்கத்துடன், அரசே எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டில் அனைத்து திருமணமான ஆண்களுமே, அவரவர் மனைவிமார்கள் கூறுகின்ற வேலைகளை செவ்வனே செய்கின்றனர் என்றார்.
அதைக்கேட்ட அரசருக்கு கோபம் மேலிட, அவர் மந்திரி கூறியதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார். உடனே, திருமணமான ஆண்கள் அனைவரையும் அன்று மாலை அரசவைக்கு அருகிலுள்ள பெரிய மைதானத்திற்கு வந்துசேர தண்டோரா போட ஆணையிட்டார்.
அரசரது ஆணைப்படி, திருமணமான ஆண்கள் அனைவரும் அன்று மாலை மைதானத்தில் ஒன்று கூடினர். சிறிது நேரத்தில் அரசரும், முக்கியமந்திரியும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அரசர் ஒரு சேவகனைப் பார்த்து மைதானத்தின் குறுக்காக ஒரு கோடு போடும்படி ஆணையிட்டார். பின்னர் அரசர், அனைத்து திருமணமான ஆண்களையும் பார்த்து "யாரெல்லாம் தங்களது மனைவியின் சொல்பேச்சைக் கேட்பவர்களோ அவர்களெல்லாம் கோட்டிற்கு மறுபுறம் செல்லுமாறும், மனைவியின் சொல்லை கேட்காதவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும் கட்டளையிட்டார்".
உடனே, அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட்டு ஒரே புழுதி கிளம்பியது. இரண்டு நிமிடங்களில் எல்லாம் அடங்க, ஒரு திருமணமானவனைத் தவிர மற்ற அனைவருமே கோட்டிற்கு மறுபுறம் சென்று தாங்கள் தங்களது மனைவியர் சொற்களை கேட்டுத்தான் நடப்போம் என்ற கட்சியில் இணைந்திருந்தனர்.
அதைக் கண்ட அரசருக்கோ தலை சுழன்றது. இருப்பினும் தன் சொற்படி நடக்க ஒரு பிரஜையாவது இருக்கிறானே என்று மகிழ்ச்சி. உடனே, அவனுக்கு பரிசு அளிக்க, அவனை அருகில் அழைத்தார்.
அருகில் வந்த அவனிடம் இது பற்றி வினவ, அவனோ "ராஜா, எனது மனைவி எப்போதும் கூட்டத்தோடு சேராதே!! என்றும் எங்கும் தனியாகவே இருக்கவேண்டும்" என்று கூறியதாலேயே தனியாக நின்றதாக பெருமையாகக் கூறினான்.


என்ன நண்பர்களே, இதற்குப் பிறகும், நான் அரசரின் நிலை பற்றி கூறவும் வேண்டுமா?????
ஸ்பைடர்மேனே மனைவிக்கு துணிகாயப்போட
உதவுகிறார் என்றால், நீங்களும் நானும் எம்மாத்திரம். ம்...............................எனது பெருமூச்சு கேட்கும் என நினைக்கிறேன்.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன். (6-Apr-14, 12:02 am)
சேர்த்தது : டிஜிட்டல் சரவணன்
பார்வை : 434

மேலே