கனவிலேனும் களிக்க விடு - மணியன்

கண் சிமிட்டும் தாரகைகள்
மேக வலை வீச
கைகளில் சிக்காமல்
கண்ணடித்து மகிழும்
காரிருள் நிலவு . . . . .

மூங்கிலோடு மூங்கில்
ஒரினத் தழுவலில்
ஓங்கார இசை எழுப்ப
இருள்சூழ் கானகமும்
இசையோடு கவி புனைய . . . . .

என்னவளின் வண்ண முகம்
ஏகாந்தப் பதுமையென
என் மனதில் நின்றாட
ஏங்கிய மூச்சுக் காற்றில்
ஏழிசை கீதம் தோன்ற . . . . .

மேனியெங்கும் சுகந்தம்
வீசி வரும்
அவளின் அசைவினை
இசையுடன் தென்றல்
இழுத்து வர
நாசிவரை துளைத்து
நல்மலர்கள் நாணம் பூக்க . . . . .

உறங்கிவிடு என்று
உள்மனது உரைப்பதுவும்
ஊற்றுபோல் அவள் நினைவு
உள்ளிருந்து கனவாக
ஊருறங்கும் சாமம் வரை
உவகையினில் மனம் நனைய . . . . .

கொல்லாமல் கொல்லுகின்ற
பொல்லாத கனவுகளில்
எல்லாமும் பெற்று
என் மனது தடம்புரள
இல்லாதச் சூரியனே
இன்று மட்டும் ஓய்வு எடு . . . . . .

காரிருளே கறுத்து விடு . . .
கண்மலரை மூட விடு . . .
கன்னியவள் தேகம் தீண்டும்
காற்றே கொஞ்சம் மூச்சு விடு . . .
காளையெனை இன்று மட்டும்
கனவிலேனும் களிக்க விடு . . . .
கற்கண்டாய் இனிக்க விடு . . . . . . . . . .




*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (18-Apr-14, 7:54 pm)
பார்வை : 136

மேலே