குறுங்கவிதை - படைப்பு கவிஞர் சி அருள்மதி

குறுங்கவிதை - படைப்பு கவிஞர் சி. அருள்மதி

கார்முகிலின் நடுவே
ஒரு மின்னல் கீற்று
அவளின் நரைமுடி !

கேள்விக்குறியாய் மாறிப்போன
முதுகெலும்பும் வாழ்வும்
முதியோர் இல்லத்தில் பெற்றோர் !

பாலம் பாலமாய் பிளந்து கிடக்கும்
உயிர்க் கரிசல்
முகத்தின் முதிர்ச்சி ரேகைகள் !

விழுந்தவற்றை விதைக்கிறது
மரித்தவற்றை மக்கச் செய்கிறது
பிரம்மனா ? சிவனா ?
மழைத்துளி !

கடலின் மௌன தவம் கலைக்கும்
அஃறிணை உயிர்
துறவி நண்டு !

என் வீட்டிற்குள் பல நாள்
நுழையாததால்
இன்று சிலந்தியின் வீட்டுக்குள்
நான்
ஒட்டடை !

மேற்குக் காற்றில்
கிழக்கில் குவியும் குப்பைகள்
கலாச்சார சீரழிவு !

எவரெஸ்ட் நோக்கி
மெதுவாக நகர்கிறது நத்தை
அரசின் மக்கள் நலத் திட்டங்கள் !

மேகத் திரைச் சீலை மூடி
முகச்சாயம் பூசும் வெள்ளைப்பெண்
நிலா !

புயலால் ஒரு இலையைக் கூட
உதிர்க்க முடியவில்லை
இலையுதிர் காட்டின் மொட்டை மரம் !

வானத்திலிருந்து வீசப்பட்ட
செம்பிளம்புத் தூண்டில்
ஏரியின் நடுவில்
சூரியக் கதிர் !

குளிருக்குத் தப்பிக்க
பனியால் கட்டிக்கொண்ட வீடு
இக்ளூ !

எனது கைகள்
மென்மையாக அணைத்தாலும்
முட்களே குத்துகின்றன
உறவுகளின் பாசம் !

என் எழுதுகோலின் மைவிழிகள்
வெட்கத்தில் மூடிக்கொண்டன
நிர்வாணக் கவிதைகளுக்கு அஞ்சி
மோகம் !

எழுதியவர் : கவிஞர் சி . அருள்மதி (23-Apr-14, 4:07 pm)
பார்வை : 263

மேலே