யாருக்கு வாக்கு

யாருக்கு வாக்கு ? ----இரா.சந்தோஷ் குமார்
***************************

இந்தியாவில் அடுத்த ஆளுப்போகும் கட்சி எது? பிரதமர் யார்? முடிவு எடுக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.

எந்த கட்சிக்கு நான் வாக்களிக்க வேண்டும்? ஓர் அலசல் இதோ..!

காங்கிரஸ்...!

கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தது.? இந்திய மக்களின் வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் செய்தது.? காங்கிரஸ் ஆட்சியினால் எனக்கோ, என் தொழிலுக்கோ எந்த முன்னேற்றத்தை கொடுத்தது.? சர்வதேசத்துடன் எவ்வாறு தன் உறவை பலப்படுத்திக்கொண்டது.?
கேள்விகள் கேட்க எனக்கு எப்போதும் பஞ்சம் வந்ததில்லை. பதில் சொல்ல எப்போதும் எனக்கு எளிதாக இருந்ததில்லை. காரணம் பதில் தெரியாது என்பது அல்ல. பதில்கள் தேடும்போது அங்கு கேள்விகள் முளைத்து கொக்கரிக்கின்றன.
தெளிவான பதில்களில் கேள்விகள் எழுக்கூடாது அல்லவா...?

காங்கிரஸ் ஆட்சி மீண்டும் ஏன் வரவேண்டும்.? தெளிவான பதில் என்னிடம் இல்லை. மீண்டும் கேள்விகள் முளைக்க வைக்க கூடாது என்பதையும் தாண்டி.. நான் காங்கிரஸ்க்கு வாக்கு அளிக்க கூடாது என்று உறுதியாக இருக்கிறேன்.

ஆம்...! என் சொந்தங்களை, என் தொப்புள்கொடி ஈழத்தமிழர்களை இலங்கையில் ஒருவன் காட்டேரி நாயாக வேட்டையாட.. இராணுவ உதவிகளையும் , போர் பயிற்சிகளையும்
கொடுத்து ஓர் இனக்கொலைக்கு காரணமான இரத்த வெறிப்பிடித்த காட்டேரி தலைவியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் இந்திய அரசை ஆள என் வாக்கு வழிவகுத்தால் என் மீது நானே காறி உமிழ்வதற்கு சமம். என்னை நானே புதைக்குழிக்குள் புதைப்பதற்கு சமம். என்னையே நானே கருவறுத்து மானங்கெட்டு சாவதற்கு சமம். அந்த மாபாதக செயலை தமிழன் என்று உணர்ச்சியுள்ள எவனும் செய்யமாட்டான். நான் தன்மானமிக்க தமிழன் !

அடுத்து யாருக்கு என் ஓட்டு....?

பாரதீய ஜனதா கட்சி...!?

குஜராத் என்ற ஒரு மாநிலத்தின் முதல்வராம் நரேந்திர மோடி. இவரே பா.ஜ கட்சியின் பிரதம் வேட்பாளர் என்று 2 ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பணத்தை விட்டெறிந்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஊடகங்கள் பணம் என்றால் பிணத்தை கூட பிரதமர் என்று விளம்பரப்படுத்தும். கார்ப்ரேட் முதலாளிகளின் கட்டுக்குள்தானே பெரும்பாலும் ஊடகங்கள் இருக்கின்றன. அந்த கார்ப்பரேட் முதலாளிகள் தானே எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கின்றன. அப்படித்தானே நமது ஜனநாயகத்தின் மூச்சு காற்று இயங்குகிறது.

இந்த முறை கார்ப்ரேட் முதலாளிகள் சொல்லும் ஆட்சி பா.ஜ.க.!
அடுத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி.. இது மக்களிடம் வலுவாக விளம்பரங்களின் மூலம் திணிக்கப்பட்டு விட்டது. மோடிதான் பிரதமர் என்று ஊடகத்தின் வெளிச்சத்தில் மக்கள் மனதில் மாயையை உருவாக்கிவிட்டது கார்ப்பரேட் கம்பெனிகள் எனும் செல்வாக்கு கிருமிகள்.

மதச்சார்பற்ற நாட்டில் மதச்சார்பற்ற அரசுதானே அமையவேண்டும். எனது கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தால் நான் நிச்சயம் கார்ப்ரேட் முதலாளிகள் தீர்மானித்த இந்திய பிரதமர் மோடிக்கே என் வாக்கினை அளிப்பேன்.

இந்துத்வா கொள்கையினால் நாளை நவீன இந்தியாவிற்கு என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது. ? இந்துத்வா கொள்கையினை விட்டு பா.ஜ.க தன்னை ஏன் அறிமுகப்படுத்த தயங்குகிறது ?

இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்று மோடி அவர்கள் அறிவித்தாலும், பா.ஜ.க வின் தாய் அமைப்புக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கினை கொண்டிருக்கின்றன. நாளை மோடி அரசு அமைந்தால் , பிரிவினை வாதம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் உள்ளீட்ட எந்த மத அமைப்பாக இருந்தாலும் தைரியமாக தடை செய்யுமா?

மதச்சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமரே தன்னை ஒரு மதத்தின் அடையாளமாக காட்டிக்கொள்வது சரிதானா? குறிப்பிட்ட மதத்தின் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால்.. மதக்கலவரம் உள்ளீட்ட போராட்டங்களில் நடுநிலையுடன் எப்படி செயல்பட முடியும்?

இராமர்பாலம் என்று இருக்கிறதோ, இல்லையோ.. ஆனால் சேது சமுத்திர திட்டத்திற்காக ஒரு வரலாற்று சின்னம் அழிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது ?
சேது சமுத்திர திட்டத்திற்கு இராமர் பெயர் கூட வைத்துக்கொள்ளட்டும். அந்த திட்டம் நிறைவேறினால் உண்டாகும் பலன் நாட்டு மக்களுக்குதானே..? மக்களுக்கான அரசு மக்களின் நலனுக்காக ஒரு வரலாற்று சின்னத்தை தியாகம் பண்ணினால் என்ன ஆகப்போகிறது.?

பாபர்மசூதி..! அனைத்து மதத்திற்கு பொதுவாக இருக்கவேண்டிய அரசு மதக்கலவரம் உண்டாகும் என்ற ஒரு விஷயத்தில் இப்படி பிடிவாதமாக இருப்பது சரிதானா? முற்போக்கு சிந்தனையில் செயல்ப்பட்டால் இந்த பாபர்மசூதி பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும் என்று சிந்திக்காதது ஏன்..?

என்று பலப்பல கேள்விகள்... பா.ஜ.க மேல் எனக்கு எந்த நம்பகத்தன்மையும் வரவில்லை. நிச்சயம் பா.ஜ.க அரசு அமைந்து அது தன் மத கொள்கையினால் நாளை உண்டாகும் பிரச்சினைகளுக்கு என் வாக்கு காரணமாக இருக்க கூடாது . ஆக பா.ஜ.க க்கு என் வாக்கு இல்லை.

ஆம் ஆத்மி...!

தன்னை நம்பி வாக்கு அளித்த டெல்லி மக்களை ஏமாற்றிவிட்டு முதல்வர் பதவி ஏற்ற சிலநாட்களிலேயே ராஜினாமா செய்த கோழைதான் திரு.அரவிந்த் கெஜ்ரிவால். இவர் செய்யும் பல விஷயங்கள் மோடிமஸ்தான் வேலையாகவே படுகிறது. பெரிய பெரிய பணக்காரர்களின் பணத்தில் கட்சி வளர்க்கும் இவர் அந்த பணத்திற்கான ஆதாரத்தை சரியான முறையில் தெரிவிக்க இயலாத இவரா ஊழலை ஒழிப்பார். எனக்கு பலத்த சந்தேகம் ஆம் ஆத்மி மீது. ஆம் ஆத்மி ஒரு சுயநல விளம்பர இயக்கம்.!

நம்பிக்கை இல்லை...! வாக்கும் இல்லை...!


இதர கட்சிகள்...!

அ.தி.மு.க.. : தெளிவான சிந்தனையில்லாத கட்சி. அம்மா புராணத்தை எதிர்பார்க்கும் ஒரு தலைவி, சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதிலே கவனம் செலுத்துகிறார். தானே பிரதமர் என்றார். இப்போது தான் ஆதரிக்கும் ஆட்சியே அமையும் என்கிறார். யாரை ஆதரிப்பார்.? பி.ஜே.பி அல்லது காங்கிரஸ். இரண்டுமே ஆகாது என்கிறாரே..! சரி மூன்றாவது அணி.. அப்படிப்பட்ட அணியே இல்லையே..
யார்தான் பிரதமர்...? சொல்ல முடியுமா அம்மா..?

தி.மு.க : ஈழத்தமிழர்கள் இறுதிப்போரில் மாண்டுக்கொண்டிருந்தபோது வெறும் உண்ணாவிரத நாடகத்தில் தன் தமிழ் உணர்வை காட்டியவர் இந்த கட்சியின் தலைவர். காங்கிரஸ் அரசு தமிழ் இனப்படுக்கொலையில் உதவிய போது வாய்மூடி மெளனியாக இருந்து, தன் ஆதரவை வாபஸ் பெற தைரியம் இல்லாத ஒரு கட்சி, இறுதியில் சுய ஆதாயத்திற்கு கூட்டணி அரசில் இருந்து வெளியேறியது. தமிழ் இன உணர்வை தன் அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தும் இந்த கட்சியை இனியும் நான் நம்ப தயாராக இல்லை.

மற்றகட்சிகள் எல்லாமே ஏதோ ஒர் ஆதாயத்திற்குதான் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கின்றன. ஆக எவரும் யோக்கியமில்லை. எவருக்கும் என் வாக்கு இல்லை.

ஆனால் நான் ஜனநாயக கடமையாற்ற வேண்டுமே...!
நல்ல வேளையாக இந்திய தேர்தல் ஆணையம் “NOTA” என்று -- யாருக்கும் வாக்கு இல்லை -- என்ற வாக்கு பதிவு முறையினை கொண்டு வந்துள்ளது. இம்முறை வாக்கு பதிவு எந்திரத்தில் இறுதியாக இருக்கும் பொத்தான்.. இந்த நோட்டா . ! இதைத்தான் நான் அழுத்தி , எவர் மீதும் நம்பிக்கையற்ற என் இயலாமையை காட்டப்போகிறேன்.


கட்சி சின்னங்களுக்கு வாக்கு அளிப்பது ஓர் ஆட்சி மாற்றத்திற்காக...! ஆனால் எனக்கு தேவை ஓர் அரசியல் மாற்றம். அரசியல் மாற்றம் எதிர்ப்பார்த்தே நோட்டாவிற்கு என் வாக்கு.!!


நன்றி...!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (23-Apr-14, 5:11 pm)
Tanglish : yaruku vaakku
பார்வை : 550

சிறந்த கட்டுரைகள்

மேலே