மனித உரிமைச்சிந்தனைகள்

நன்றி/கவிப்பேரரசு வைரமுத்து!

அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய நேர்கானல் இதோ உங்கள் பார்வைக்கு!
வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்.
வினா நிரல் :
1. ஒரு சமூக படைப்பாளியான நீங்கள் மனித உரிமை என்னும் தளத்தை எவ்வாறு காண்கிறீர்கள்?
படைப்பு மட்டும் அல்ல அமைப்புகள், வாழ்க்கை முறை, மதம், இலக்கியம் எல்லாமே மானுடத்தை கட்டிக் காக்கிற துணை பொருள்கள்தான். மானுடம் தான் இந்த பூமியை பொருள் உள்ளதாக செய்தது. மனிதன் இந்த பூமிக்கு வந்த கடைசி ஜீவராசி தான். அவன் வந்த பிறகு தான் பூமி என்பது பொருள் உள்ளதாக, பொலிவுள்ளதாக, பூமி என்பது வளர்ச்சிக்கானதாக ஆயிற்று. இந்த பூமிக்கு பொருள் தந்தவனுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதில் தான் எதிர்கால மானுடத்தின் வளர்ச்சி நிலை இருக்கிறது. எனவே மனித உரிமை என்ற அடிப்படையில் இயங்கக்கூடிய எல்லா சக்திகளோடும் இலக்கியமும் இயங்குகிறது. அதனால் இலக்கியம் வேறு மனித உரிமைகள் வேறு என்பது அல்ல. இலக்கியம் என்பது மனிதனை கொண்டாடுவதற்கும் மனிதனை காப்பதற்குமான கருவி என்று எப்போது நான் புரிந்து கொண்டேனோ அப்போதே அந்த பணியில் நான் ஈடுபட்டுவிட்டேன் என்று பொருள்.

2. உங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் நீங்கள் சந்தித்த முதல் உரிமை மீறல் சம்பவம்?
கிராம வாழ்க்கையில் இருந்து புறப்பட்டு வந்தவன் நான். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தான் நான் பார்த்த முதல் உரிமை மீறல். எங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்டு வந்த மூன்றாவது மாதத்தில் தெருவில் ஒரு பெண் நாய் மாதிரி அடித்து இழுத்துச் செல்லப்பட்டால் கட்டி வந்த கணவனால். எனக்கு அப்போது ஏழுக்கும் ஒன்பதுக்கும் மத்தியில் என்னுடைய வயது. அதை எதிர்த்துப் போராடுகிற மன நிலையோ, உடல் நிலையோ, வலிமையோ எனக்கு அப்போது இல்லை. ஒன்றுமட்டும் எனக்கு தோன்றியது ஒரு பெண் இந்த பூமியில் விலங்கை விட கேவலமாக மனிதனாலேயே நடத்தப்படுகிறாள் என்ற உணர்வு மட்டும் என் மனதை கவ்வியது. ஊரே வேடிக்கைதான் பார்த்தது, வடுகப்பட்டி என்ற ஊர் அதை வேடிக்கை தான் பார்த்தது. அதைத்தான் இப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் குழந்தை அல்லது சிறுவன் எனக்கு கொதிக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவதற்கோ, கேட்பதற்கோ உள்ள வலிமையும், உரிமையும் எனக்கு அப்போது இல்லை. உள்ளே மனது மட்டும் கொதிக்கிறது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் அதை வேடிக்கைப் பார்த்தார்களே தவிர “ஏனடா அந்தப் பெண்ணை இந்த பாடு படுத்துகிறாய்” என்று ஒருவர் கூட கேட்கவில்லை. ஊரில் இருந்த ஒரு பத்து பதினைந்து கதவுகள், ஜன்னல்கள் திறந்திருந்தன. ஊரில் ஆங்காங்கே திண்ணையில் அமர்ந்திருந்த சிலர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனை தடுப்பதற்கு யாரும் வரவில்லை. ஆனால் ஒரு இரக்கத்திர்க்குரிய ஜாடைகளை மட்டும் நான் அங்கங்கே பார்த்தேன். “அய்யோ பாவி அடிக்கிறானே, அய்யோ பாவம் அழுகிறாலே, என்ன துன்பத்திற்கு இவள் வாக்கப்பட்டு வந்துவிட்டாளே” என்ற ஓர் இரக்கத்தினுடைய தொனியை மட்டும் தான் அந்த தெருவில் பார்த்தேனே தவிர, அது மனித உரிமை மீறல் என்றோ, ஓர் உயிருக்கு இன்னோர் உயிர் செய்கிற கொடுமை என்றோ யாரும் தட்டிக் கேட்கிறதாக தெரியவில்லை. இது என் மனதில் சின்ன வயதில் விழுந்த மிகப் பெரிய காயமாக கருதுகிறேன். என் படைப்புகளுள் ஊடாய் வருகிற விஷயங்களில் கருவாச்சி காவியத்தில் வருகிற உரிமை மீறல்களில் இந்த சம்பவத்திற்கு பங்கு இருக்கிறது.

3. உங்களை கள்ளிக் காட்டு இதிகாசம் எழுதத் தூண்டிய சமுதாயச் சூழல்?
அந்த மண்ணை விட்டு பிரிந்து விட்டேனே தவிர, உடல் ரீதியாக பிரிந்து இருக்கிறோமே தவிர, மன ரீதியாக இன்றும் அந்த மண்ணில் வாழ்வதாகவே நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் ஒரு சோகம் ஒரே நாளில் அழப்பட்டுவிட்டால் தீர்ந்து போகும். இது ஒரே நாளில் அழுது தீர்க்கிற சோகம் அல்ல. ஐம்பது ஆண்டுகளாக கண்ணுக்கு தெரியாத கண்களால், கண்ணுக்கு தெரியாத கண்ணீர் வடிந்து கொண்டே இருந்திருக்கிறது, இந்த சோகத்தின் காரணமாக. அது தெரியவில்லை. காலமாக ஆக எனக்குள் கிடந்த இந்த சோகம் மீண்டும் எனக்குள் விஸ்வரூபம் கொண்டு எழுந்ததற்கு காரணம் இலங்கை தமிழர்கள் என்று நான் கருதுகிறேன். இலங்கை தமிழர்கள் சொந்த மண்ணைப் பிரிந்து சொந்த ஊரைப் பிரிந்து, உறவுகளை பிரிந்து, பெற்ற தாய் தந்தையரை விட்டுப் பிரிந்து இனிமேல் இந்த மண்ணுக்கும் நமக்கும் உறவு இருக்குமோ? மீண்டும் இந்த மண்ணில் வந்து வாழ்வோமா? எனது உடல் இந்த மண்ணிலேயே புதைக்கப்படுமா அல்லது எரிகப்படுமா? அல்லது தூர தேசத்தில் எறியப்படுமா? என்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் இலங்கை தமிழ்ச் சகோதரர்கள் பிரிந்து போன போது என்னை நான் மீண்டும் அந்த சோகத்தில் உயிர்பித்து கொண்டேன். என்னுடையச் சோகமும் இந்தச் சோகமும் கிட்டத்தட்ட ஒன்றுதானே என்று எனக்கு தோன்றியது. அவர்களுக்காவது என்றைக்காவது மீண்டும் அந்த மண்ணில் குடியேறிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை நாற்று அவர்கள் மனதில் ஒரு மூலையில் நடப்பட்டிருக்கக்கூடும். ஆனால் எனக்கு இனிமேல் அந்த மண்ணில் நிச்சயமாக அங்கு குடியேற முடியாது, வாய்ப்பேயில்லை என்ற சோகம் தான் இருந்தது. எனவே அந்த சோகம் பழுப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அதை மிக இள வயதில் எழுதியிருந்தால் இவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமா என்று எனக்கு தெரியாது. காலம் தன் வைரம் பாய்ந்த அனுபவங்களை நமக்கு ஊட்டி ஊட்டி அந்த காவியத்தை இன்னும் செழிப்பூட்டி இருக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.

4. இன்று எழுந்து நிற்கும் வைகை அணை ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் மீது விழுந்த சாபமா? அல்லது தென் மாவட்டங்களுக்கு கிடைத்த வரமா?
எல்லா விஞ்ஞான வளர்ச்சிகளிலுமே அதை நாம் சம்மந்தப் பட்டவர்களால் மட்டும் புரிந்துகொள்வதை விட அதன் எதிர்கால சந்ததிகளை நினைத்துப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மண்ணை, நிலங்களை இழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரமாக இருக்கலாம். இந்த அணை கட்டப்பட்டதால் ஒரு பத்தாயிரம் குடும்பங்கள் பலன் பெறுகின்றன என்கிறபோது இந்த ஆயிரம் பேரின் தியாகத்தை இந்த உலகம் எப்படி புரிந்து கொள்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று அந்த பத்தாயிரம் பேர் வாழ்வது எவ்வளவு பெரிய முக்கியமோ இந்த ஆயிரம் பேர்களையும் மீண்டும் வாழ வைத்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். எனவே எனக்கு அந்த உரிமை மீறல் எப்படி இருக்கிறது என்று சொன்னால் எங்கள் மண்ணில் நாங்கள் வெளியேற்றப்பட்டபோது அந்த உரிமையை பேசுவதற்க்குக் கூட கல்வி கற்றவர்கள் அங்கு இல்லை. அவர்கள் பாமரர்கள் இன்றைக்கு எனக்கு தெரிகிறது, என்னைப்போல கொஞ்சம் உலகத் தொடர்புகள் உள்ள ஒரு இளைஞனோ, ஒரு கல்வி கற்ற பெரியவரோ இருந்திருந்தால் இழப்பீடுகள் இன்னும் பெரிதாக வழங்கப்பட்டிருக்கலாம், அது வழங்கப்படவில்லை. இன்னொன்று சொல்கிறேன் ஒன்றை இழக்காமல் இன்னொன்று இல்லை. வீடு கட்டவேண்டும் என்பது முக்கியம்தான், மரங்களை வெட்டாமல் வீடு கட்டு என்பதும் இயலாதுதான். ஆனால் ஒரு மரம் வெட்டப்படுகிற இழப்பைவிட வீடு கட்டப்படுவது சமுதாயத்திற்கு மிக நன்மையாக இருக்கிறபோது அந்த இழப்பை தாங்கித்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே சின்ன சின்ன இழப்புகளில் பெரிய பெரிய நன்மைகள் வருகிறபோது அந்த இழப்புகளை தியாகம் என்று புரிந்து கொண்டு தியாகம் செய்தவர்களுக்கு உரிய உரிமைகளை கட்டிக் காக்கின்ற அமைப்புகள் நாட்டில் உண்டாகவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

5. வாழ்விடங்களையும், வயல் வெளிகளையும் அழித்து அணைக்கட்டுகளும், ஆலைகளும், அடுக்கு மாடிகளும் உருவாக்கப் பெறுகின்றன. இதனை தவிற்பதற்கோ, தடுப்பதற்கோ வழி ஏதேனும் உண்டா?
விளை நிலங்களில் வீடு கட்டுவதையும் விளை நிலங்களில் ஆலைகள் கட்டுவதையும் நாம் நிச்சயமாக தடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நாம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அதாவது எது விளைச்சலுக்கு பயன்படாத பூமியோ, எவை பொட்டல் வெளிகளோ, எவை இதுவரைக்கும் விளை நிலங்களாக இல்லாத நிலங்களோ அவைகளை அரசு கையகப்படுத்தி இங்குதான் ஆலைகளும், கல்விச் சாலைகளும் கட்ட வேண்டும் என்று ஒரு சட்டத்தை திட்டவட்டமாக உண்டாக்க வேண்டும். ஆனால் நம்முடைய வணிக உலகம் ஊருக்கு பக்கத்திலிருக்கும் விளை நிலங்களில் தான் முதலில் கை வைக்கிறது. கொஞ்சம் தாண்டிச் செல்லவேண்டும். விளை நிலங்கள் சுருங்க சுருங்க ஒரு நாட்டின் நாகரீகமே சுருங்குகிறது என்று நான் கவலைப்படுகிறேன். எனவே இது பற்றி ஒரு தீவிரமான கருத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். மூன்றாம் உலகப் போர் முன்னுரையில் ஒரு கருத்து சொல்லியிருக்கிறேன், மிக முக்கியமான கருத்து அது. விலை நிலங்களை விற்பனை செய்யக் கூடாது, விலை நிலங்கள் விற்கப்பட்டால் அரசாங்கம் அதை விலைக்கு வாங்கி அதை விளை நிலமாகவே பராமரிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
6. களவு நெறி என்று இலக்கணம் இயம்பிய ஒன்றை இன்று பரத்தமையாக பேசப்படுகிறதே இது பண்பாட்டுச் சீர்குலைவா? காதலர்கள் மீதான உரிமை மீறலா?
மிகச் சரியான கேள்வி இது. காதல் அது தோன்றிய காலத்திலிருந்து இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. காதல் என்பது சதை வழிப்பட்டதா? அல்லது மன வழிப்பட்டதா? என்பதில் இருக்கிறது அதன் உயர்வும், தாழ்வும். இன்றைக்கு காதல் என்பது [physical attraction] என்ற ஒரு நிலைமைக்கு தாழ்ந்துவிட்டதோ என்று சொல்லவேண்டியிருக்கிறது. காதல் என்பது இல்லறத்திற்கான முதல் படி, காதல் என்பது ஒரு ஆணும், பெண்ணும் முழுமை பெறுவதற்கான இன்னொரு நிலை. இந்த காதல் அவர்களை முழுமை செய்கிறதா? செழுமை செய்கிறதா? அல்லது அவர்களை பங்கிடுகிறதா? வீழ்த்துகிறதா? என்பதை பொருத்துதான் காதலுக்கு மரியாதையும், காதலுக்கு இழிவும். இந்த காதல் தங்களை மேம்படுத்துவதற்க்கு பயன்படுகிற மனித கூட்டம் வரவேண்டுமே தவிர இந்த காதலால் சீரழிகிற மனிதக்கூட்டம் வந்துவிடக்கூடாது. காதலிக்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை, காதல் எவ்வளவு பெரிய தர்மமோ அந்த காதலை கடைசி வரைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது மனித குலத்தின் கடமை. முன்னது தர்மம், பின்னது நெறி அதாவது கடமை. அந்த கடமைக்கு தங்களை பக்குவப்படுத்திக் கொள்பவரகள்தான் காதலில் வெற்றி பெறுகிறார்கள் இல்லையென்றால் தங்களையும், காதலையும் கொச்சைப்படுத்துகிறார்கள். காதல் எவ்வளவு பெரிய வாசல் தெரியுமா?அந்த வாசல் வழியே நீங்கள் மோட்சத்திற்குள் நுழைய வேண்டுமே தவிர நரகத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது.
7. காதல் மறுக்கமுடியாத ஒரு மனித தர்மம் என்று காதலுக்கு வழக்காடுவது எதனால்?
அது மறுக்க முடியாத மனித தர்மம் என்பது உண்மையாக இருப்பதனால் !! இந்த உலகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சக்திகள் மொத்தம் மூன்று, ஒன்று உழைப்பு, இன்னொன்று பசி, இன்னொன்று காதல் இந்த மூன்றும் இல்லையென்றால் உலகில் முன்னேற்றமில்லை, அடுத்த அடி இல்லை. இந்த மூன்று சக்கர வாகனத்தால்தான் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

8. காதல் உறவுகளுக்கு வலி கொடுக்கும்போது அது உரிமை மீறல் இல்லையா?
உறுதியாக அப்போது காதல் எங்கேயோ தடம் மாறுகிறது என்று அர்த்தம். காதல் வெறும் சதை வழிப்பட்டதல்ல மன வழிப்பட்டது என்று சொல்வதற்க்கு காரணமே தசையைக் கடந்து காதல் அன்பையும், நேசத்தையும், மதிப்பையும் நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ஒரு காலத்தில் காதல் என்பது இவைகளையெல்லாம் கடந்து மேம்பட்ட நெறிகளுக்கு மனிதனை செலுத்துவதற்க்கான ஒரு கருவியாக வேண்டும். அப்படி இல்லாதபோது அது சதை வழிப்பட்டது என்பது நிரூபனமாகிவிடும். பெற்றோர்கள் இந்த உலகத்தை பழைய கண்களால் பார்க்கிறார்கள். தங்கள் பார்வையால் பார்க்கிறார்கள். இந்த உலகத்தின் கண் இறுகிப்போய் கிடக்கிற ஜாதியினுடைய கண் கொண்டு இந்த காதலைப் பார்க்கிறார்கள். அப்படியல்ல, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணமும் அவர்களுக்கு ஏமாற்றத்தை தருவது உண்டு, பிள்ளைகள் செய்துகொண்ட திருமணமும் வளம் சேர்ப்பதும் உண்டு. எனவே திருமணம் என்பது பெற்றோர்களால் பார்ப்பது முக்கியமல்ல பிள்ளைகளால் செய்துகொள்வது முக்கியமல்ல காதல் நாகரீகப்பட்டிருக்கிறதா, காதல் நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கிறதா, உறவுகளை மதிப்பதில் இருக்கிறதா என்பதை பொருத்துத்தான் காதல். எனவே பெற்றோர்கள் தங்கள் பழைய பார்வையை விட்டுவிட்டு புதிய பார்வைக்கு இடம் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். சுதந்திரம் கொடுக்கிற பெற்றோர்கள் பிள்ளைகளை நெறிப்படவும் வளர்க்கவேண்டும். நெறியும், சுதந்திரமும் ஒன்று கூடுகிறபோது பெற்றோர்களின் வலி குறையும்

9. ஒவ்வொரு மனிதனுக்கும் இன உணர்வு, மொழி உணர்வு போல் சாதி, மத உணர்வுகள் வேண்டுமா?
நம் நாட்டில் உள்ளடங்கியிருந்த ஜாதிகளை வெளிப்படையாகக் கொண்டு வந்ததில் ஓட்டு வங்கி அரசியலுக்கு பெரிய பங்கு உண்டு. ஓட்டு வங்கி அரசியலைத் தாண்டி ஜாதியை ஒரு சகோதரத்துவமாக பார்க்கும் பார்வை மழுங்கிப்போனது. எதிர் காலத்தில் இது மெல்ல மெல்ல குறையும் நான் இப்போது கேள்விப்படுகிற செய்திகளெல்லாம் ஜாதியின் கட்டுமானம் தளர்ந்து இருக்கிறதென்றே இப்போது எனக்கு கொஞ்சம் தோன்றுகிறது. கிராமங்களில் கலப்பு மணம் ஒரு இயல்பான விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்பிருந்த எதிர்ப்பு இன்று இல்லை. வேறு ஜாதி பெண்ணும், வேறு ஜாதி ஆணும் ஓடிப்போனால் பின்னாலே சென்று வெட்டி எறிகிற பழக்கமெல்லாம் என் காலத்தில் இருந்தது, நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு இல்லை. விட்டுவிடு அவர்கள் பிழைத்துக்கொள்ளட்டும் அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்கிற உணர்வு வந்திருக்கிறது. ஆனால் அப்படிச் செய்கிற காதல் வாழ்ந்து காட்டக்கூடிய காதலாக மாற்றம் கொள்ளக்கூடிய வலிமை இளைஞர்களுக்கு வரவேண்டும். காதல் கல்யாணங்களில் நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுவோம் என்று சபதமேற்கிற இளைஞர் கூட்டம் வந்தால் ஜாதி ஒழியும்.
10. தீண்டாமைக்கு எதிராக சட்டங்கள் இயற்றப் பெற்றுள்ளன. ஆனால் படித்தவர்கள் கூட இன்று அதை தவறான ஆயுதமாக பயன்படுத்தும் நிலையில் எப்படி சமத்துவ சமுதாயம் உருவாகும்?
இந்த நாட்டில் கல்வி கற்றவர்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதுதான் தப்பு. கல்வி என்பது பள்ளிக்கல்வியும், எழுத்தறிவும் அல்ல. கல்வி என்பது மதித்தலில், ஞானத்தில், அனுபவத்தில் கூட கல்வி உண்டு. எனவே கற்றவர்கள் என்று நினைக்கிறவர்கள் வெறும் எழுத்தறிவு பெற்றவர்களே தவிர தங்களுடைய பழைய மனவியல் வட்டத்தை விட்டு வெளியே வராதவர்கள. எனவே முதல் தலைமுறையில் கற்றவர்களையெல்லாம் கல்வி கற்றவர் என்று சொல்லிவிட முடியாது. அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த கல்வி இன்னும பெரிய உயரத்திற்க்கு ஞானத்தின் திறவுகோள் கொண்டு அந்த வழியில் செல்லும்போதுதான் கல்வி முழுமை பெறும். எனவே கற்றவர்கள் என்பவர்கள் யார் தெரியுமா? மனிதர்களை மதிக்க கற்றவர்கள்தான் கற்றவர்கள். உழைக்கக் கற்றவர்கள்தான் கற்றவர்கள், அன்பைக் கற்றவர்கள்தான் கற்றவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் கற்றவர்கள் அல்ல. எழுத்தறிவு பெறாதவனும் ஜாதியை விட்டு தாண்டி வந்திருக்கிறான், எழுத்தறிவைப் பெற்றவனும் ஜாதி வட்டத்திற்குள் வாழ நினைக்கிறான். எனவே கல்வி என்பது எழுத்தோடு சம்மந்தப்பட்டதல்ல, மதித்தலோடு சம்மந்தப்பட்டது, அது மாறும்போது மாறும்

11. தாழ்த்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் மோதிக்கொள்வதை மண்பானையும், மண்பானையும் போல் என உவமிக்கிறீர்கள். இவர்களின் மோதலுக்கு காரணமான மேட்டுக் குடியினரின் செயல்கள் எத்தகையது? அவர்களின் சாதி வெறிக்கு காரணம் என்ன?
ஜாதியை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஒரு வகையான ஆதிக்க மனோபாவம் என்று நான் நினைக்கிறேன். இந்த ஆதிக்க மனோபாவம் அவர்களின் பொருளாதாரத்தோடும், அவர்களின் மனவியலோடும் சம்மந்தப்பட்ட ஒரு விஷயமாகவே தோன்றுகிறது. ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வரக்கூடிய ஒரு சூழல் இப்போது வந்திருக்கிறது. காரணம் ஜாதியை உடைக்கிற முதல் சுத்தியல் கல்வி என்று நான் நினைக்கிறேன். கல்வி என்ற ஒரு பெரிய சுத்தியல் கொண்டு மட்டும்தான் ஜாதியை உடைக்க முடியும். கல்வியால் மீட்டெடுக்கப்படுகிற பொருளாதாரமும், கல்வியால் மீட்டெடுக்கப்படுகிற சுய மரியாதையும் இரண்டும் தான் ஜாதியை உடைத்தெறியும். சட்டங்களும், திட்டங்களும், போலித்தனமான மரியாதைகளும் பொய் சொல்லும். எனவே கல்வியை நோக்கி இந்த சமுதாயத்தை முன்னேற்றுங்கள். கல்வி என்ற பெரிய ரப்பருக்கு முன்னால் ஜாதியின் கோடுகள் அழிந்தே தீரும்.

12. இன்று பெரிதாக வளர்ந்து நிற்கும் தென் மாவட்ட பெண் சிசுக் கொலை, சாதிக்கலவரங்களின் வித்து எது? அது எப்போது அந்த மண்ணில் விதைக்கப் பெற்றது?
போர்ச்சமூகத்திலிருந்து வந்தது அந்த வித்து. தென் மாவட்டங்களில் மாத்திரமல்ல ராஜஸ்தானிலும் சிசுக்கொலை அதிகம் இருக்கிறது, தென் மாவட்டங்களிலும் சிசுக்கொலை அதிகமிருக்கிறது. ராஜ புத்திர வம்சத்தில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். தென் மாவட்டங்களிலும் போர்ச்ச்சமுகத்திலிருந்து வந்தவர்களின் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. இது ஒரு பழைய கலாச்சாரத் தழும்பு. அவர்களை நாம் திருத்தி மேம்படுத்தி கொண்டு வரவேண்டுமே தவிர அதற்கான வரலாற்று காரணம் என்பது ரொம்ப ஆழமானது. போர்ச்சமூகத்தில் இருந்தவர்கள் முதலில் பலிகடாவாக கொடுத்தது தங்கள் பெண் பிள்ளைகளைத்தான். படையெடுத்து வருகிறவன் பெண்களைத்தான் மானபங்கம் செய்தான். பெண்களைத்தான் சிறையெடுத்தான். எனவே இந்தப் பெண்கள் இருக்கிறவரைக்கும் தங்களால் முழுமையாக களத்தில் ஈடுபட முடியாது போலிருக்கிறது என்ற கருத்து அந்தக் காலத்தில் நிலவியது, ஒரு தவறான கருத்தும் கூட. எனவே போர்ச்சமூகத்தில் உள்ள போர் வீரர்கள் தங்கள் குளத்தில் பெண் பிள்ளைகள் பிறப்பதை விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக இந்த கருத்தையே நவீன காலத்திலும் நிலைபெறச் செய்துவிட்டார்கள். இன்றைக்கு அது வேறொரு வடிவத்தில் வந்திருக்கிறது. பெண் பிள்ளைகளை மேடேற்றுவது நமது பொருளாதாரத்தில் அவ்வளவு உகந்ததாக இல்லை. நூறு சவரம் தங்கம் கேட்கிறவனும், சென்னையில் ஐம்பது லட்ச ரூபாய்க்கு வீடு கேட்கிறவனும் மாப்பிள்ளையாக இருக்கிறபோது எங்கள் பிள்ளைகளை எப்படி மேடேற்றுவது என்று அந்தச் சமுதாயம் தவிக்கிறது. இதை இரண்டு விதமாக நீங்கள் பார்க்கவேண்டும். வரதட்சனையை ஒழித்துவிட்டால் சிசுக்கொலை ஒழியும், பெண் கல்வி மேம்பட்டால் சிசுக்கொலை ஒழியும். நாகரீகச் சமுதாயம் வளர்ந்தால் பெண் சிசுக்கொலை ஒழியும். போர்ச் சமூகத்தின் எச்சங்கள் மட்டுமல்ல நீங்கள் என்ற பழைய மூட நம்பிக்கை ஒழிந்துவிட்டால் இந்த பெண் சிசுக்கொலை ஒழியும். இன்னொன்று சொல்லப்போனால் ஆண்களைவிட பெண்கள்தான் சமுதாயத்துக்கும், குடும்பத்துக்கும் தலைமை தாங்கினார்கள் என்ற வரலாற்றுச் செய்தி தெரிந்தால் பெண் சிசுக்கொலை ஒழியும். ஜாதிக்கொடுமைகள் மெல்ல மெல்ல தளர்ந்து வருகின்றன. இன்றைக்கு ஜாதிக் கலவரத்தை உண்டாக்குபவர்கள் ஜாதிக்காரர்கள் அல்ல. அரசியல் லாபம் தேடுகிறவர்கள்.
13. தீண்டாமை, சாதிய எதிர்ப்பு குறித்தெல்லாம் நிறைய எழுதியிருக்கிறீர்கள் ஆனால் தலித் சிந்தனைகளைத் தாங்கிய ஒரு முழுமையான தலித் இலக்கியம் ஒன்றை இதுவரை படைக்காதது ஏன்?
தலித் இலக்கியங்கள் ஒரு குழு இலக்கியமாக மட்டும் முடிந்து போவதை நான் விரும்பவில்லை. தலித் என்பவன் இந்த மண்ணின் பூர்வீகப் புத்திரன். அவனுடைய வாழ்க்கைதான் இந்த மண்ணின் பழைய தமிழ் வாழ்க்கை. அவன் ஒதுக்கப்பட்டது தவறு. ஆனால் அந்த வாழ்க்கையை மீண்டும் மீண்டும நீங்கள் கலைப்படுத்த நினைப்பதற்காக அவன் அதை மீண்டும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். தலித் சகோதரன் மேம்பட்டவனாக, வாழ்வில் முழுமை பெற்றவனாக, சமுதாயத்தை வழி நடத்துகிறவனாக வரவேண்டும், வந்தால்தான் இந்த சமுதாயம் சம நிலை பெறுமென்று நினைக்கிறேன். தலித்திய சிந்தனைகளுக்கென்று தனியாக நான் இதுவரைக்கும் நான் எழுதவில்லை, எழுதக்கூடிய காலம் வந்தால் நான் நிச்சயமாகப் படைப்பேன். இன்னொன்று சொல்லப் போனால் தலித் சகோதரர்கள் மீது நான் வைத்திருக்கிற பாசம் கொஞ்சம் நஞ்சமல்ல, ஏனென்றால் எனக்கு சின்ன வயதிலிருந்து தோழமை தந்தவர்கள் அவர்கள்தான். தோள் கொடுத்தவர்கள் அவர்கள்தான். எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களும், இருப்பவர்களும் அவர்கள்தான். தீண்டாமை என்ற விஷயமே எங்கள் குடும்பத்தில் இல்லை. நான் சின்ன வயதில் தலித் சகோதரர்களோடு தான் நீச்சல் பழகினேன், அவர்களோடு தான் விளையாடினேன், அவர்களோடு தான் பயின்றேன், அவர்களோடு தான் நான் உணவருந்தினேன். பேதம் என்பது எங்கள் குடும்பத்திலும், எங்கள் ஊரிலும் என்னைப் பொருத்தவரை இல்லை. எனவே அந்த கொடுமைகளை நான் அனுபவிக்கவில்லை, அக்கொடுமையை நான் அனுமதிக்கவும் இல்லை.
14. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் வருங்காலத்தில் நீங்கி சமத்துவ சமுதாயம் உருவாகுமா? அதற்கு மனித உரிமைச் சட்டங்கள் வழி வகுக்குமா?
இந்த சட்டங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்கிற கவலையும் எனக்கு இருக்கிறது. இந்த சட்டங்கள் என்பவை தற்காலிகமான விஷயங்கள் என்றே நினைக்கிறேன். நாகரீகப்பட்ட சமுதாயத்தில், சமதர்ம சமுதாயத்தில் இந்த சட்டங்களுக்கு இடமே இல்லாமல் போகும். இந்த சட்டங்கள் இப்போது தேவைதான், இந்த சட்டங்கள் உதிர்கிற நாளில்தான் இந்த சமுதாயம் மேம்பட்டதாக நான் கருதுகிறேன்.

15. சலவைக்குப் போடாத ஜனநாயகத்தில் மலிந்து கிடக்கும் உழலின் ஊற்றுக் கண் எது?
உலகமயமாதல்தான் இந்த ஊற்றுக்கண்ணுக்கு பெரிய காரணமாக இருப்பதாக நிச்சயமாக நான் நினைக்கிறேன். உலகமயமாதல் என்பது ரொம்ப விரிவாகச் சொல்லவேண்டிய விஷயம், உலகமயமாதலில் இந்தியா பலியாகியிருக்கிறது, இந்தியத் தலைவர்களும் பலியாகியிருக்கிறார்கள்.

16. இன்று தமிழகத்தில் முன்னெடுக்கப் பெறும் எல்லா போராட்டங்களும் எடுத்த வேகத்தில் நீர்த்துப் போவதற்கான காரணம் என்ன?
இந்த ஊடகங்கள் உயர்த்திப பிடிக்கவேண்டிய செய்திகளை உயர்த்திப் பிடிக்காமல் மறைத்துப் பிடிக்கவேண்டிய செய்திகளை உயர்த்திப் பிடிப்பதுதான் மிக முக்கிய காரணம். ஊடகங்கள் மட்டும்தானா என்றால், ஊடகங்கள் வழி எல்லாமே. ஊடகங்கள் வழி முதலாளித்துவம், ஊடகங்கள் வழி அரசுகள், ஊடகங்கள் வழி வணிகங்கள்.

17. உயிர்க்கொலை என்பது போர்க்களங்களில் இயல்பான நிகழ்வு. ஆனால் இன்று அது தண்டனைக்கு உரியது அதற்கான காரண, காரியங்கள் என்னென்ன?
உயிர்க் கொலை, யுத்தத்தில் கொல்லப்படுவது என்பது யுத்த தர்மத்தில் அடங்கிவிடுகிறது, ஆனால் யுத்தத்தின் பெயரால் அப்பாவிகள் கொல்லப்படுவது எந்த தர்மத்தில் அடங்கும்? போர்க்களத்தில் வீரனும் வீரனும் மோதிக்கொள்வது என்பது யுத்த தர்மம், ஆனால் அப்பாவி மக்களை போரின் பெயரால் சிசுக்களையும், கர்பிணிகளையும், நோயாளிகளையும், வயதானவர்களையும் அழிக்கிற இனப்படுகொலைக்கு எந்த சமுதாயமுமே அதற்கு இடம் தராதே! உதாரணமாக தமிழ்ச் சமுதாயத்திலே கூட ””பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கை விட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்க”” என்றுதான் கண்ணகி கூட சாபம் கொடுக்கிறாள்! அவள் ஒரு பெண், அவளுக்கு இருந்த தர்மம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தர்மம் இன்றைக்கு ராணுவ தளபதிகளுக்கும், நாட்டை ஆள்பவர்களுக்கும் இல்லையே! கண்ணகியிடம் கற்றுக்கொள்ளவில்லையே! எனவே அப்பாவிகளை கொலை செய்வது என்பது யுத்தத்தின் போர்வையில் செய்கின்ற அராஜகம், அநாகரீகம். அதைத்தான் நாம் கண்டிக்கிறோம்!, அதைத்தான் இலங்கைக்கு எதிராக உயர்ந்த கொள்கையாக நாம் உயர்த்திப் பிடிக்கிறோம்! மீண்டும் மீண்டும் இந்த கருத்துகள் உறுதிப்படுத்தப்பட்டால் இப்போது எஞ்சியிருக்கிற தமிழ்ச் சகோதரர்களுக்காவது நீதி கிடைக்கும் என நினைக்கிறோம்.

18. செஞ்சோலை தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிந்த பேரவலங்களின் போது நீங்கள் சிந்தித்திருந்தவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்ள இயலுமா?
அதை எதிர் காலத்தில் ஒரு நூலாகவே படைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. என்னுடைய உணர்வுகளை முழுக்க இந்த இடத்தில் என்னால் வெளிப்படுத்த முடியாது. அதற்கு என்று எனக்கு ஒரு மன நிலையும், அதற்கு என்று ஒரு மொழியும் எனக்கு தேவைப்படுகிறது சொல்லப்போனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லலாம், கூப்பிடு தூரத்தில் இருந்துகொண்டு கூப்பிடு தூரத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறபோது, கூப்பிட முடியாமல் அவனும், கூப்பிட்ட குரலுக்கு ஓட முடியாமல் நாமும் துண்டிக்கப்பட்ட இந்த அவலம் வரலாற்றில் கறுப்பு மையால் கறுப்பு தாள்களில் எழுதப்பட வேண்டிய விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது. வரலாறு நம்மை மன்னிக்குமோ, மன்னிக்காதோ என்ற அவலத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை. அதனால் இதை முழுமையாகச் சொல்ல விரும்பவில்லை. எதிர் காலத்தில் என் இதயத்தைத் தேற்றிக்கொண்டு இது பற்றிய உண்மைகளை எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
19. ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பின்போது நமது அரசுகளும், அரசியல்வாதிகளும், தமிழ்ச் சமூகமாகிய நாமும் செய்யத் தவறிய, செய்திருக்கவேண்டிய கடமைகள் என்னென்ன?
தவறிய கடமைகளும் எனக்குத் தெரிகிறது, தவறவிட்ட சூழல்களும் எனக்குத் தெரிகிறது.
20. ஒவ்வொரு படைப்பிலும் நீங்கள் மனித மதிப்புகளைப் பற்றி பேசத் தவறுவதில்லை அப்படியானால் மனித மதிப்பிற்கும், மனித உரிமைக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?
மனித மதிப்பிற்கும், மனித உரிமைக்கும் உறவு உண்டா என்று கேட்கிறீர்கள், மனித மதிப்பீடுகள் மாறிக்கொண்டே இருப்பவை மனித உரிமைகள் மாறாதவை. மாறிக்கொண்டே இருக்கின்ற மனித மதிப்பீடுகளை எந்தக்காலத்திலும் விட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான் மனித உரிமைகள்

21. உங்கள் கதைகளில் பெரும்பாலான கதைமாந்தர்களை சராசரி மனிதர்களுக்கு மேலான குண இயல்புகளைக் கொண்டவர்களாகவே படைக்கிறீர்கள். அவர்கள் வாயிலாக வலியுறுத்துவது என்ன?
நான் சராசரிக்கும் மேலான மனிதர்களை கதாபாத்திரங்களாக வைத்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், ஏனென்றால் நான் சராசரிக்கும் மேலான மனிதர்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன், சராசரிகளோடும் இருக்கிறேன். சராசரிக்கு மேலான உணர்வுகளை படைக்கிறபோது அதில் விழுமியங்களை வைக்கிறேன், வாழ்வியல் விழுமியங்களை வைக்கிறேன். அந்த விழுமியங்கள்தான் அந்த பாத்திரத்துக்கு தனியான முகம் கொடுப்பதாக நினைக்கிறேன். அந்த விழுமியங்கள் காக்கப்படவேண்டுமென்று கூட நான் ஆசைப்படுகிறேன். இன்னொன்று நான் பாராத பாத்திரம் எதையும் என் படைப்புகளில் படைக்கவில்லை. எல்லாம் பார்த்தவை, கேட்டவை, உற்றவை, உணர்ந்தவை, கற்றவை, களித்தவை, அழுதவை, காயப்பட்டவை. இவைகளையே நான் என் பாத்திரங்களாக வைக்கிறேன். அதனால் அந்த பாத்திரங்களில் இருக்கக்கூடிய இயல்புத் தன்மை என்பது வாழ்வின் இயல்புத் தன்மை என்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

22. பெண்ணியம் என்ற பதத்திற்கு நீங்கள் தரும் விளக்கம்?
பெண்ணியம் என்ற சொல்லுக்கு ஓசை நயத்தோடு பொருள் சொல்ல வேண்டுமென்றால் கன்னியம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ஒரு எல்லை இருப்பதாக நினைக்கிறேன், பெண்ணுரிமை எவ்வளவு முக்கியமோ அந்த பெண்ணுரிமைக்கான எல்லை எவ்வளவு முக்கியம் என்பதை இரு பாலாரும் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

23. பெண்ணியத்தின் பிறப்பிடம் மேலை நாடுகள்தான் என்கிறார்கள். அப்படியானால் அது உலக மயமாக்கலின் உபரியா? பெண்ணியத்தின் வேர்கள் நம் தமிழ்ப் பண்பாட்டில் இல்லையா?
இது மிக நல்ல கேள்வி! பெண்தான் நம் சமூகத்திற்கு தலைமை தாங்கினாள் என்ற காலமும் இருந்தது. பெண்பால் புலவர்கள் இருந்தார்கள், எனக்குத் தெரிந்து உழைக்கும் சமூகத்தில் மட்டும்தான் ஆணும், பெண்ணும் சமமாக இருந்தார்கள். உற்பத்தியில் பங்கெடுத்துக்கொண்டவரைக்கும் பெண் சமமாக இருந்தாள். அவளுக்கு உள்ள உரிமைகளையும் அவள் எடுத்துக்கொண்டாள், அவளுக்குரிய கடமைகளையும் நிறைவேற்றினாள். ஆனால் இந்த நவீன பெண்ணியத்தைப் பற்றி எனக்கு ஒரு முரண்பட்ட கருத்து உண்டு. அங்கே பெண்கள் உச்சத்திற்குப்போய் இனிமேல் பிள்ளை பெற்றுக்கொளவ்தில்லை அதுதான் பெண்ணியம், திருமணம் செய்துகொள்வதில்லை அதுதான் பெண்ணியம் இனிமேல் புணர்ச்சி கிடையாது அதுதான் பெண்ணியமென்று உச்சத்திற்குப் போகும்போது இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இது யாருடைய கருத்து ! எல்லா உலகத்திற்கும் பொருந்துகிற கருத்தா? ஆணுக்கு என்ன உரிமைகளோ அது பெண்ணுக்கும், ஆணுக்கு என்ன உயர்வுகளோ அது பெண்ணுக்கும் என்ற சம நிலை சமுதாயத்தைதான் பெண்ணியம் என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

24. கருவாச்சி காவியத்தில் நீங்கள் சொல்வது போல் பெண்ணை கலப்பையில் பூட்டி நிலத்தை உழுவது, தனக்குத் தானே பிள்ளைப் பேறு பார்த்துக் கொள்வது போன்ற உண்மை நிகழ்வுகளை நீங்கள் சந்தித்ததுண்டா?
சரியான கேள்வி!! பெண்ணை பூட்டி உழவு செய்ததை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் ஒரு பெண் தனக்குத் தானே பிரசவம் செய்து கொண்டதை கேட்டிருக்கிறேன். ஆக அதை எழுதுவதற்காக தனக்குத் தானே நடுக்காட்டில் பிரசவம் பார்த்துக்கொண்ட ஒரு பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து அந்த மூதாட்டியை மதித்து அவளை தன் அனுபவங்களை சொல்லச் சொல்லி அழுதுகொண்டே குறிப்பெடுத்தேன். அப்போது உண்மையைச் சொல்லப்போனால் கருவாச்சி பட்ட துயரத்தைவிட அவள் பட்ட துயரம் பெரிதென்றே எனக்குத் தோன்றியது. எனவே ஒரு தாயின் வலியைத்தான் நான் ஆண் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன் அவ்வளவுதான். சொல்லப்போனால் அது மொழிபெயர்ப்பு அல்ல! அது வலிபெயர்ப்பு.
25. தன் வாழ்வில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்த கருவாச்சி தன் தாலியை மட்டும் கொடுக்க மறுப்பது பெண்ணடிமைத்தனமில்லையா?
இல்லை தாலியை ஏன் நீங்கள் வெறும் கயிறு என்று கருதுகிறீர்கள்! நான் உரிமை என்று கருதுகிறேன்! உரிமையின் அடையாளம் என்று கருதுகிறேன் தாலியை. தாலி என்பது வெறும் கயிரல்ல தங்கத்தில் போட்டால்தான் அது உரிமை என்றல்ல, மஞ்சள் துண்டு கட்டினாலும் உரிமை உரிமைதான். இற்றுப்போன கயிறு கட்டினாலும் அது உரிமைதான். அது உரிமையின் அடையாளம் அதை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று கருதுகிறாள் கருவாச்சி அவ்வளவுதான்.
26. எதையும் இலைமறை காயாகச் சொன்ன இலக்கியங்கள் இன்று பெண்ணிய தலித்தியங்களின் வருகையால் இயல்பாகவும், அப்பட்டமாகவும் பேசத் தொடங்கிவிட்டன இது ஏற்புடையதா?
ஏற்புடையதுதான், கறுப்பிலக்கியம் மேல் நாடுகளில் வந்தபொழுது அவர்களின் வாழ்க்கை வலிகளை வேறெந்த படைப்பாளிகளும் அதை பதிவு செய்யவில்லை. ஆப்ரிக்க இலக்கியத்தில் கறுப்பிலக்கியம் வந்த பிறகு அவர்களின் புதைக்கப்பட்ட வாழ்க்கையை வெளியே கொண்டு வந்தார்கள். அவர்களின் வாழ்கையை வேறெந்த படைப்பாளிகளும் பதிவு செய்யவில்லை. இவர்களின் புதைக்கப்பட்ட வாழ்க்கையை, யாரும் பார்க்காத வாழ்க்கையை, யாரும் பதிவு செய்யாத வாழ்க்கையை பதிவு செய்கிறபோது அந்த வலியும் காணாத காட்சிகளும் வரவே செய்யும், அநத காட்சிகளை வாழ்ந்தவன்தான் பதிவு செய்ய முடியும்., வலியை உணர்ந்தவன்தான் பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு செய்தால் அதிர்ச்சி வைத்தியத்திற்காக பதிவு செய்யாமல் வாழ்வியல் கருப்பொருளுக்காக பதிவு செய்தால் அதை நாம் வரவேற்கலாம். இது வரவே செய்யும். எல்லா ஒடுக்கப்பட்ட இனத்திலும் அந்த இனத்திலிருந்து எழுத்துகள் பிறக்கிறபோது காணாத வலிகளும், எழுதாத மொழிகளும் வந்தே தீரும், வரவேண்டும்.

27. இப்போதுள்ள மனித உரிமைச் சிக்கல்களுக்கெல்லாம் சுருக்கமாக நீங்கள் சொல்லும் ஒட்டு மொத்த தீர்வு என்ன?
மீண்டும், மீண்டும் நான் இதையே சொல்ல விரும்பகிறேன், கல்விதான் பெரிய தீர்வு என்று நான் நினைக்கிறேன். அந்த கல்வி, நம்முடைய ஏட்டுக்கல்வி பண்பாட்டுக் கல்வியாக மாறினால்தான் தீர்வு வரும் என்று நினைக்கிறேன். எழுத்தறிவு என்பது பண்பாட்டோடு சேரவில்லையென்றால் அது வஞ்சகத்தை தான் கட்டிக் காக்குமே தவிர வாழ்க்கையை கட்டிக் காக்காது. அது உண்மைதான். பண்பாட்டோடு கூடிய கல்விதான் வாழ்வில் செழுமை சேர்க்கும். கல்வியோடு கூடிய பண்பாடு, பண்பாட்டோடு கூடிய கல்வி, கருணையோடு கூடிய கல்வி, அன்பு சேர்க்கிற கல்வி, சக மனிதனை மதிக்கிற கல்வி, சகிப்புத் தன்மை மிக்க கல்வி இந்த கல்வியை கொடுத்தால்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வரும். இல்லையென்றால் அரசியல் ஒரு தீர்வு சொல்லும், மதம் ஒரு தீர்வு சொல்லும், பொருளாதாரம் வேறொரு தீர்வு சொல்லும்,. மூன்று தீர்வுகள் சொல்லுகிற எதுவுமே உருப்படாது. ஒரு தீர்வுதான் ஒரு பிரச்சனைக்கு. ஒரு பூட்டுக்கு ஒரு சாவிதான் நல்ல சாவி மற்றதெல்லாம் கள்ளச் சாவி. கல்வியும், பண்பாடும் கலந்த இந்தச் சாவி கொண்டுதான் இந்த பூட்டிக் கிடக்கிற இருப்புப் பூட்டுகளை திறக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
இதை ஒலி வடிவில் கேட்க!

எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து (26-Apr-14, 11:52 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 381

மேலே