புலம்பல் - கே-எஸ்-கலை

செய்யவழி ஏதுமில்லை
துயரவலி அயரவில்லை
கேடு எங்கள் விரல்களில் !

உய்யவழி எதுவுமில்லை
உயரவழி தெரியவில்லை
நாடு அவர்கள் கைகளில் !
==
சீலைகள் கிழித்து
தாவணி செய்யும்
தாய்மார் தவிப்பு யாரறிவார் ?

வேலையை செய்தும்
எலிக்கறி தின்னும்
ஏழையின் பசியை யாரறிவார் ?

பட்டங்கள் வென்றும்
வாழ்வினை இழந்து
நிற்கின்ற இளைஞர் என்செய்வார் ?

திட்டங்கள் உண்டு
சட்டங்கள் உண்டு
விடியலின் திறவுகோல் எங்குண்டு ?
==
ஆடி போய் ஆவணி வந்ததும்
ஆட்டிப்படைக்க-
பாதைகள் தோறும் சனிவரும் !

வாடிப் போய் காலணி தொட்டும்
வாட்டியெடுக்கும்-
வாதைகள் தானே இனிவரும் ?
==
வறுமை ஊஞ்சலாடும்
வாழ்க்கை ஊசலாடும்-
இந்த தேர்தலுக்கு...கோவணம் !

சவால்விட ஆயிரம்பேர்
சாதிக்க நாதியில்லை-
அடுத்த தேர்தலுக்கு...அம்மணம் ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Apr-14, 11:13 am)
பார்வை : 198

மேலே