உப்பளங்களில் கொப்புளிக்கும் உயிர்

உப்பளங்களில் கொப்புளிக்கும் உயிர் !

உன் உணவை ருசியாக்க
உப்பளத்தில் உடல் கொப்பளித்த
உழைப்பாளிகள் எத்தனையோ !

தோல் கழிவை சுத்தம் செய்ய
உயிர் தந்த தோழர்கள் எத்தனையோ !

மனிதக் கழிவை சுத்தம் செய்து
மண்ணுக்குள் போன மகாத்மாக்கள் எத்தனையோ !

விஷ வாயு தாக்கி விண்ணுலகம் சென்ற
வீரத் தோழர்கள் எத்தனையோ !

போராடக் கற்றுக்கொடுத்த
தொண்டர்கள்
பதவி ஏற்க மறுத்து
பாசக்கயிற்றை பற்றியதென்ன !

உடலுக்குள் ஓடும் உதிரத்தை
உழைப்பு உறிஞ்சிப் பிழிய
வழியும் உப்புநீரில் (வியர்வை )
உடல் வளர்த்த பிண்டங்கள் !

சுரண்டலுக்குத் தாரைவார்த்த
சுகங்கள் எத்தனையோ ?!

மகிழ்வுந்தில் மணிக்கணக்காய்
குளிர்விப்பானில் குதூகலமாய்
கூத்தடிக்கும் முதலைக் கூட்டம்
ஈன்ற குட்டியை விழுங்குவதுபோல்
ஈட்டிகொடுத்த லாபத்தையும் விழுங்கியது !

பணம் பணத்தைக் குட்டிபோட
வறுமைக்கு விதிக்கப்பட்ட எங்கள்
குட்டிகள் வறுமைக்கே வாழ்க்கைப்பட்டன !

அஜீரணத்திற்கு மருந்துண்ணும் அவர்களுக்கு
பட்டினிக்கும் பசிக்கும் உணவளிக்கத் தோன்றவில்லை !

உழைப்பே உயர்வென்னும் மந்திரம் பொய்
சோம்பலும் சுரண்டலுமே மெய்யென்று
ஆகிப்போன முதலாளித்துவ தூண்டிலில்
சிக்கித்தவிக்கும் சமதர்ம மீனை
மீட்டுக்கும் தினமே
உண்மையான மே தினம் !

எழுதியவர் : கவிஞர் சி. அருள்மதி (2-May-14, 1:16 pm)
பார்வை : 148

மேலே