குறியீடுகள்
ஆணோ, பெண்ணோ
அர்த்தநாரியோ
எவராயினும்
மனிதனல்லவா முதலில் நீ !
மறுக்கலாமோ இதையும் நீ
சொல் தோழா.
சிலுவையோ, நாமமோ
சிறுபிறையோ
எது குறியீடு எனினும்
இம் மண்ணின் மகனல்லவோ முதலில் நீ !
இதை மறந்திடலாமோ மானுடா ?
மதக் குறியீடுகளில்
மனிதக் குறியீடுகளைத்
தொலைத்திடல் நியாயமா ?
என் தாய் உனக்கும் தாயென்றால்
நீ கொள்வது நாமமல்லவா !
உன் தாய்தான் எனக்கும் தாயென்றால்
நானும் தொழுவது பிறையல்லவா !
எதிர் வீட்டு எலிசபத் அக்காவிற்கு
நாம் இருவரும்
மக்களாய் பிறந்திருந்தால்
சிந்தையில் சுமப்பது சிலுவையல்லவா !
இந்தப் பிறவியில் இதுவென்றால்
எந்தப் பிறவியில் எது எதுவோ !
குறியீடுகள் தேகத்திற்கு மட்டுமே.
ஆத்மனுக்கல்லவே !
தேகங்கள் அழிகையில்
நம் குறியீடுகள் போவதெங்கே ?
தேடிச் சொல் என் சோதரா !