வாழ்வியலின் வரிகள்

​கருவில் உருவாகி தருவாக வளர்ந்து
பருவங்கள் பலகடந்து முடிவில் நாம்
எருவாகிப் போவதுதானே வாழ்க்கை !​

கடந்திடும் பாதையில் கற்கள் முட்கள்
நடந்திடும் வழியிலே நச்சு நாகங்கள்
திசைமாறிப் போகும் பல திருப்பங்கள் !

அடியடியாய் முன்னேறும் வாழ்வில்தான்
அடிபடுகிறோம் பலபல அனுபவங்களால்
அடிபதிக்கிறோம் அனுதினமும் நாமும் !

இடையிலே இன்பம்தரும் தருணங்களும்
இடரில்லா நடைபோடும் நல்ல நாட்களும்
தடையிலா பொழுதுகளும் வருவதுமுண்டு !

சந்தர்ப்பங்கள் பலசந்தடியின்றி நுழையும்
சச்சரவுகளும் சரவெடியாய் வெடித்திடும்
சலனங்களும் வரிசையில் வந்து நின்றிடும் !

உறவுகளை அறிந்திடுவோம் உலகினில்
உண்மைகளை புரிந்திடுவோம் புவிதனில்
உடனிருந்து கவிழ்ப்போரை கண்டிடுவோம் !

நட்புகள் மலர்ந்திடும் நாமே எதிர்பாராமல்
நண்பர்களாய் மாறுவர் நாமே முயலாமல்
நல்வழி காட்டுபவரும் உண்டு நானிலத்தில் !

உள்ளத்தை பகிர்ந்திட உள்ளங்கள் உண்டு
உள்ளத்தில் கள்ளம் இருப்போரும் உண்டு
உள்ளதை அறிந்திட சம்பவங்களும் உண்டு !

பகல்வேசம் புதுவேசம் புனைந்திடுவர் பலர்
நகலும் அசலும் ஒன்றாய் தெரியும் நமக்கு
பகுத்துப் பார்த்து பழகுதல் பாரில் அவசியம் !

நல்வழியில் அழைப்போர் நட்பில் குறைவு
நன்றி மறந்தோர் நம்வாழ்வில் பலருண்டு
நல்லவர் கெட்டவர் நாம் அறிய நாளாகும் !

அசைபோட வேண்டும் அலசிட வேண்டும்
அன்றாடம் இதற்கென நேரமும் வேண்டும்
அவசியம் இதனை செய்திடவும் வேண்டும் !

மனிதரை மதித்து மனிதனாய் வாழ வேண்டும்
மனிதத்தை இழக்காமல் இருந்திட வேண்டும்
மனிதராகவே வாழ்ந்து மறைந்திடல் வேண்டும் !

வாழ்வியல் கட்டுரை எனநான் எழுதவில்லை
வாழ்வில் மகிழ்வோடு வாழ வழிகாட்டவில்லை
வாழ்வின் படிகளை பகுத்தறிய வழிமொழிகிறேன் !

இனிப்பும் கசப்பும் வாழ்விலே கடந்து போகும்
கணிப்பாய் அல்ல நடந்ததையே சொல்கிறேன்
நுனிநாக்கு சுவையல்ல என்வாக்கும் பொய்யல்ல !

அறிவியல் வளர்ச்சி ஆயிரம்கோடி வளர்ந்தாலும்
அனுதினமும் வாழ்வியலில் வசந்தமே தேவை
அதனாலே உரைக்கின்றேன் உண்மையை உணர்க !

செவ்வாய் இன்று செவ்வனே ஒன்றை எழுதிடவே
செந்தமிழ் துணைகொண்டு செப்பினேன் நானும்
செழிப்பே உங்கள் வாழ்வில் நிலைத்திட என்றும் !

தத்துவமேதை அல்லநான் தமிழ்பித்தனே நானும்
தவறாக இருந்தால் தவிருங்கள் இக்கவிதையை
சரியென தோன்றின் சிந்தையிலே கொள்ளுங்கள் !

இன்னும் நீடித்தால் உறக்கம் தழுவிடும் உங்களை
இவ்வுலகின் இயற்கையை அடியேன் எழுதினேன்
இன்பமே பெற்றிடுங்கள் இவ்வுலகில் வாழும்வரை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-May-14, 9:16 am)
பார்வை : 423

மேலே