கைகள்

கைகள்
வெறும் கைகள்தான்
கவிதை பேசும் கைகள்
காதலன்/காதலியின் கைகள் அல்ல
ஒரு தாயின் கைகள் !

அவை தானும் ஓர் சேயாய் இருக்கையில்
எச்சிலோடு சிரிப்பொழுகும்
வாயோடு
உருட்டிக் கொடுத்த
சோற்று உருண்டையை
மேலும் கீழும் இரைத்து
அளைந்திருக்கும்.

எல்லையில்லா அழகோடு
எழில் ரோஜாவாய் மலர்ந்திருக்கும்
வளர வளர
எத்தனையோ கற்பனைகளை
கனவுகளை
எழுத்தில் வடித்திருக்கும்
ஓவியத்தை, ஓர் காவியத்தை
அழகுப் பாடலாய் தீட்டியிருக்கும்

மகளாய் நான் வந்த பின்னே
தாயன்போடு தமிழன்பையும்
தன் உதிரத்தோடு ஊட்டியிருக்கும்
நெஞ்சோடு எனைச் சாய்த்து
மெய் மறந்திருக்கும்
உறவாடியிருக்கும்

அன்று
மழை கொண்ட மண்ணாய்
வளம் பெற்ற அக் கைகள்
இன்றோ
பாளம் பாளமாய்
சகாராவாய் போனதேனம்மா

தளிர்த்து ஆடிய கைகள் இன்று
வாடி வதங்கிய
வாழைத் தண்டாய்
வேக வைத்த இறைச்சிபோல்
அழகெல்லாம் இழந்து
உருவிழந்து போனதே ஏன்
எரிமலை உன் கைகளுக்குள் வந்ததேன்

என் அன்பைப் பதியம் போடவோ
உன் கைகளில்
உதிரம் தெளித்து வரப்பிட்டாய் !

பார்த்துப் பார்த்து
எனக்காய்
உணவைச் சலித்தெடுக்கவோ
உன் கைகள்
சல்லடையாய்
பொத்துப் போனது?!

உனக்கும் எனக்குமான
அன்புக் கடலை
ஓயாது கலக்கியதாலோ
வலுவிழந்து
உருவிழந்து துவண்டன
உன் கைகள் ! ?

(கை நலம் குன்றிய தாய்மைக்காக)

எழுதியவர் : நேத்ரா (6-May-14, 8:10 pm)
Tanglish : kaikal
பார்வை : 312

மேலே