‘‘ குற்றம் புரிந்தவன்…” நூற்றாண்டு விழா நாயகன் குசா கிருஷ்ணமூர்த்தி 1914 -2014 யின்

காற்று உள்ளவரை காதுகள் உள்ளவரை
நூற்றாண்டு விழா நாயகன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி
(1914 -2014 )
முனைவர் மா.தாமோதரகண்ணன்
இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘ குற்றம் புரிந்தவன்….” ராஜராஜன் படத்தில் ‘‘ நிலவோடுவான் முகில்….” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘ காதல் கனிரசமே…” போன்ற காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்பாடல்கள் 750 க்கும் மேல் எழுதியவர் கு.சா.கி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
இவர் கும்பகோணத்தில் 19-05-1914 ஆம்ஆண்டு சாமிநாதபிள்ளை-மீனாட்சிஅம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.மூன்றாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகத்தின் மீதுள்ள காதலால் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர், பர்மா நாடுகளுக்கெல்லாம் சென்று வென்று வந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் 'அவ்வையார்' நாடகத்தில் கு.சா.கி. எழுதிய 'பெருமை கொள்வாய் தமிழா' என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சிப் பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந் நாடகம் நடந்தபோது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்ட போது அதை எழுதிய கு.சா.கி.யை கவிமணியாரிடம் அறிமுகப்படுத்தினார்கள். அவர் கு.சா.கி. யின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டாராம். நிரந்தர வருவாய்க்காகப் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும் படக்கடையையும் தொடங்கினார். வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி கு.சா.கி.யின் குடும்பத்தில் நடந்தது.இந்நிகழ்வைக் கண்டு கவிஞா் மனம் புழுங்கினார்.இதை அடிப்படையாக வைத்து ‘‘ அந்தமான் கைதி ” என்னும் நாவலை எழுதி நூலாகவும் வெளியிட்டார்.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நாவலை நாடகமாக மாற்றி நண்பர்களுடன் நடித்தும் வந்தார். அந்நாளில் புகழ் பெற்ற டி.கே.எஸ்.சகோதரர்களாலும் இந் நாடகம் நடத்தப்பட்டது. கு.சா.கி.க்கு மேலும் மேலும் புகழ் சோந்தது.அறிஞர் அண்ணா ,பாவேந்தர் பாரதிதாசன் ,கல்கி, வ.ரா போன்றோர் நேரில் வந்து நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள்.
தமிழ்த்திரையுலகில் பாடல்ஆசிரியராகத்தான் நுழைந்து ஆண்டாள், போஜன் முதலிய படங்களுக்குப் பாடல் எழுதி வந்தார். 1952 ஆம்ஆண்டு ராதாகிருஷ்ணன் பிலிம்சார் ‘‘ அந்தமான் கைதி ” நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தார்கள்.கதை, வசனம் பாடல்களை அவரே எழுதினார்.எம்.ஜி.ஆர் முதன்முதலில் கதைநாயகனாக நடித்து மாபெரும் வெற்றிப்படமாக ஆனது. ஜுபிடர் அதிபர் சோமு அவர்களால் கு.சா.கி. சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.பின்னாளில் ஜுபிடரின் பல படங்களுக்குக் கதை, வசனம் ,பாடல்கள் எழுதினார்.சந்திரகாந்தா படத்தில் கதைநாயகனாக நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்கவைக்க இருந்தார்கள். கு.சா.கி. ஜுபிடர் அதிபர் சோமுவிடம் வாதாடி பி்.யு.சின்னப்பாவைக் கதைநாயகனாக நடிக்க வைத்துப் பெரியஅளவில் வெற்றியைத் தேடித்தந்தார்.
ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய 'குற்றம் புரிந்தவன்….' என்ற பாடல் பெரிய `ஹிட்' ஆகி கு.சா.கிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. கு.சா.கியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி தனி இசைத்தட்டாகவும் வெளியிட்டு இருந்தார்கள். அதைத்தான் படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
உவமைக்கவிஞர் சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரைத் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் கு.சா.கி.க்கு உண்டு.
'மங்கையர்க்கரசி' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிக்குத்தான் வந்தது. இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, ‘‘இவர் என்னைவிட திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ” என்றார். இப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கியும், கம்பதாசனும் பாடல்கள் எழுதினார்கள்.
அகில இந்தியஅளவில் புகழ்பெற்ற நடிகை வகீதாரஹ்மானை முதன்முதலில் திரைப்படத்தில் ‘‘ ஒன்றே குலம்” படத்தில் நர்ஸ் வேடத்தில் முதன்முதலில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
கு.சா.கி. 1943- ஆம்ஆண்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராகவும் இருந்தவர். அப்போதைய புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்களாட்சி ஏற்பட நடத்தியப் போராட்டத்திற்கு முக்கிய பங்குவகித்தார்.

'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் நெருங்கிய மாணவரகவும் தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. தொடங்கியதிலிருந்தே செயற்குழு உறுப்பினராக அக்கட்சியில் அங்கம் வகித்தார். உணர்ச்சிப் பொங்கப்பேசும் நட்சத்திரப்பேச்சாளராகவும் விளங்கினார்.தழிழ்நாட்டின் எல்லைகளை இணைக்கும் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

திருச்சியில் தங்கவேலன் எனும் கவிஞர் கு.சா.கி. யைத் தன்னுடைய எழுத்துலகின் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். எழுதும் படைப்புகளை எல்லாம் கு.சா.கி.தாசன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.குருவும் சீடரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புப் பாராட்டினார்கள்.பின்னொரு நாளில் திருச்சிக்கவிஞர் கு.சா.கி. யை நேரில் சந்தித்தார். ‘‘ யாரும் யாருக்கும் தாசனாக வேண்டாம் ” என்று அன்புக் கட்டளையிட்டு அக்கவிஞருக்கு ‘‘ திருச்சி பாரதன் ” எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.அன்று முதல் நகமும் சதையுமாகவே நட்பாடினார்கள். திருச்சி பாரதன் எனும் பெயரிலேயே குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள், முருகப்பக்திப்பாடல்கள், தமிழிசைப்பாடல்கள் ,சில திரைப்படப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்று கலைமாமணி பட்டமும் வென்று தமிழ்இலக்கியவரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான 1978 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கானஇரண்டாம் பரிசினை கு.சா.கி. எழுதிய ‘‘ பருவ மழை ” என்னும் கவிதை நூல்பெற்றது.
திருவருட்பிரகாச வள்ளலாரின் 101 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘ அருட்பா இசையமுதம் ” என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘அமுதத் தமிழிசை” என்னும் பெயரிலும் வெளியிட்டார்.
'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவிஞராகவும், தமிழரசு இயக்கக் கவிஞராகவும் திகழ்ந்து தமிழ்த்திரையுலகில் சாதனைகள் பல புரிந்த கு.சா.கி., அவர்களுக்கு 1966- ஆம் ஆண்டு தமிழக அரசு ‘ கலைமாமணி' விருது வழங்கியது.
கு.சா.கி. எழுதிய அமுதத் தமிழிசை , அருட்பா இசையமுதம் , அந்தமான் கைதி , இசையின்பம் , பருவ மழை, தமிழ் நாடக வரலாறு , கலைவாணன் (நாடகம்) ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. கு.சா.கிருஷ்ணமூர்த்தி 1990-ஆம் ஆண்டு மே 13-நாள் தமது 76-வது வயதில் காலமானார்.காற்று உள்ளவரை காதுகள் உள்ளவரை நூற்றாண்டு விழா நாயகனான கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் தங்கவரிகள் தமிழ்க்கானங்கள் வாழும்.

எழுதியவர் : damodarakannan (7-May-14, 2:46 pm)
பார்வை : 192

சிறந்த கட்டுரைகள்

மேலே