எதிரிகள் முத்தமிடும் மழைக்காலம்

மழை மிதந்த வீட்டின் கதவில்
புன்னகைத்து நிற்கும் தலைவிக்கு
கண்களால் கொஞ்சலிட்டு
காதலின் நீரூற்றை கசிய செய்கிறான்

தீண்டல் காற்று இலை தடவி
அசையும் மணம்
காலையின் கருவறையில்
மைனாக்களாய் முத்தமிட
நிகழும் கணத்தில்
பூக்கள் கரைகின்றன

இன்றைப் பிரிந்த இரவின்
நினைவுகளின் சர்ப்பம்
மினு மினுத்து நெளிய
கிளையசைத்து சிலிர்க்கிறது
உயிர் உருகும் யாசிப்பு

யாரோ பிதற்றும் பாடலின் துவக்க வரியில்
எதிரியென படிந்திருந்த சொற்கள்
தலைவியின் பெருவெளியை
கடக்க திணறியது

உறை பனி உச்சியில்
விறைத்த குழந்தையென
அந் நிசப்தத்தில்
அவள் கடந்த பாலை
எதிரியெனும் சொல்லால் விரிந்தது

எனினும்
எல்லா தருணத்திலும்
உதய மாகிக் கொண்டிருக்கிறாள்
ஆன்மத்தின் தலைவனுக்காய்
ஒரு கடவுளாகவும்
ஆயிரம் குழந்தைகளாகவும்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (7-May-14, 2:55 pm)
பார்வை : 84

மேலே