தரமான விளைச்சல்

அம்மா ...!
(கிராமியப் பாடல் )

ஆடு வித்து ,குட்டி வித்து
ஏர்கலப்பை எருது வித்து
மாடு வித்து ,கன்று வித்து
மாசம் ஒருமுறைன்னு
மாமனையே அனுப்பி வச்சேன் .
மகராசன் உன் படிப்பு
மதராசப் பட்டினத்தில் .

காதுக் கடுக்கன் வித்தேன்
கார்மழையும் கூட வில்லே
கைவளையல் கழட்டி வித்தேன்
கண்ணே பெரிய தம்பி நீ ,
பேர் வாங்கிப் படிக்க வேணும்
பெரு விருது வாங்க வேணும்.

பட்டணத்தில் பேஞ்ச மழை
பட்டியிலே பெய்யலையே
பட்ட துன்பம் மாறலியே .
கெட்ட பஞ்சம் தீரலையே.
ஏர்புடிக்கும் சின்ன தம்பி
ஏந்தி வெதச்ச கம்பும்
களத்து மேடு தாண்டாம
கை சோர்ந்து நிக்கிறானே.

நாளைக்கு வருமாசம்
மாமன் வரத் தருவதென்ன?

சின்னக் கரையோரம்
சிறு கேணி கழனியோட
பெரு விலைக்கு கேக்குறாங்க
பிரிச்சு பிரிச்சு வெச்சு ,
சிமிட்டி கார வீடு
கட்டிவெச்சு விக்கனுமாம் .

சித்த பொறுத்தயின்னா
சீரான பணத்தோட
சின்னத் தம்பி மாமனோட
பட்டணந்தான் நானும் வாரேன்
உன்னையே நம்பி வாரேன்,
ஊரைவிட்டு வெம்பி வாரேன் .

படிப்பை நீ முடிச்சு
பதக்கம் பட்டம் வாங்கி,
பாராளும் பதவி வாங்கி,
நம்பி வரும் எங்களுக்கு
நாதி ஒண்ணு செய்வையேண்ணு.

பெரியதம்பி ...

சென்னப் பட்டணத்து சேதி இது,
நல்ல சேதி அம்மா உனக்கு இது.
பகுதி நேர வேலை செஞ்சு
சின்ன சின்ன சம்பாதனை
சிறப்பாக தேடிக் கொண்டேன்
மாமனை அனுப்ப வேண்டா
பட்டப் படிப்பையெல்லாம்
பார்த்து நான் முடிப்பேனே .

பிரிச்சு பிரிச்சு சிமெண்ட்டு
வீடு கட்டி விக்கணும்னா
மேட்டுத் தரிசு நெலம்
மேவித்தான் கெடக்குதப்பால்
விளையும் கழனிகளை
வீணாக்கி நாசம் செய்தால்
பெரும் பாவம் வந்து சேரும்.

மக்கள் வயிறு காஞ்சு போகும் ,
உண்ணத்தான் சோறெங்கே..?
ஊர்க் கழனி வீடானால்.
குடிக்கத்தான் நீரெங்கே ...?
குளம்மெல்லாம் வீடானால்.

ஊருணிக் கரையோரம் என்
அப்பன் கழனி நம் உயிரம்மா..!
படிப்புத் துணையோடு நான்
பாரளப் போகவில்லை .

பட்டத்தின் துணையோட
அறிவியலைக் கொண்டுவந்து,
இயற்கை வழியிலேயே
அறமான விவசாயம் ,
மாமன் தம்பி ,கழனி உள்ளே ,
தரமான வெளச்சல் பார்போம்.

தங்கமான அம்மா !
ஊரோடு நீயுமிரு.
உன் கவலை நான் தீர்ப்பேன்.
ஊருக்கெல்லாம் சோறிடலாம்...

எழுதியவர் : மின்கவி (7-May-14, 9:43 pm)
பார்வை : 136

மேலே