இந்திய சுதந்திர மாவீரர் மருதநாயகம் பாகம்-5

தந்திரம்


போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.


சூழ்ச்சி வென்றது…


மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!


அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.


அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.


விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தொடரும்............

எழுதியவர் : லெத்தீப் (9-May-14, 7:38 pm)
பார்வை : 73

மேலே