அடசொல்லிட்டு சாவுங்கப்பா

இது ஒருவகையில் நகைச்சுவை பதிவுதான்...மரணத்தைப் பற்றிய நகைச்சுவை என் வாழ்க்கையில் எத்தனையோ மரணங்களை பார்த்திருக்கின்றேன் சிலர் பல நாட்கள் மரணப்படுக்கையில் கிடந்து சொல்லிட்டு சாவுவார்கள் அய்யோ...பாவம் சிலரின் மரணம் திடிரென்று நடக்கும்எதுவும் சொல்லாமல் செத்துவிடுவார்கள்


நம்மிடம் சொல்லாமல் செத்துப்போனவர்களின் மரணம் நம் நெஞ்சில் பதிந்துவிடும் அவர்களின் நினைவு நம்மை விட்டு நீங்க பல நாட்கள்...பல வருடங்கள் ஆகும் சிலரின் மரணங்கள் நாம் மரணிக்கும் வரை மனதில் நிற்கும்


எனக்கு 7 வயது இருக்கும் போது எனது (அம்மா) பாட்டி பல மாதங்கள் படுக்கையில் கிடந்தது வயது காரணமாக இறந்தார்கள் அப்போது அந்த மரணம் எனக்கு விளையாட்டாக தெரிந்தது மற்ற சிறுவர்களுடன் ஓடி ஆடி விளையாண்டது மட்டுமே இன்னும் நினைவில் இருக்கின்றது

அப்படித்தான் 18 வயதில் நடந்த என் (அப்பா) தாத்தாவின் மரணம் வயதானாலும் நல்ல திடமாக இருந்த தாத்தாவுக்கு கள் குடிக்கும் பழக்கம் உண்டு ஒருநாள் கள் போதை அதிகமாகிவிட்டதோ....கால் தடுக்கி விழுந்தவர் சில மாதங்கள் படுக்கையில் கிடந்தார் ஒருநாள் ரொம்ப இழுத்துக்கிட்டு கிடந்தது போயே போய்விட்டார்...

எனது தாயார் மரணம் என் 20 வயதில்.......அவர்கள் உடல் நலம் சரியின்றி பல மருத்துவ மனைகளில் பராமரிக்கப்பட்டு கடைசியில் எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்டு இறந்தார்கள் அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது அடிக்கடி அழுது கண்ணீர் சிந்தியதால் அம்மாவின் மரணம் பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை

அதேநேரம்....என் 12 வயதில் காதல் தோல்வியால் என் தந்தையின் தம்பி (சித்தப்பா) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டபோது அந்த வேதனை ரொம்ப வருடங்கள் நிலையாக நின்றது அவருடன் அன்பாக பழகியது எல்லாம் நினைவுக்கு வந்து சோதனை செய்தது


அதற்குப் பிறகு என் தந்தையின் மரணம் எனக்கு 28 வயதாக இருக்கும் போது...சென்னையில் எனது உறவினர் வீட்டு மொட்டை மாடியில் தங்கி ஒரு வியாபார கடையில் வேலை செய்த நான் வேலையில் கொஞ்சம் வருமானம் கூடியதால் தனியாக வீடு எடுத்து தங்கினேன்..அதை ஊரில் யாரோ என் தந்தையாரிடம் தவறாக சொல்லிவிட...அவர் என்னைத் தேடி சென்னை வந்துவிட்டார் படித்துவிட்டு இப்படி கடையில் வேலை செய்வதால் யாரும் எனக்கு பெண் கொடுக்க தயங்குகிறார்கள் நீ வேறு இப்படி தனியாக வீடு எடுத்து தங்கினால் உனக்கு திருமணமே ஆகாது என்று புலம்பியபடி அன்றே ஊருக்கு திரும்பினார் அடுத்த நாள் அதிகாலை தந்தி வருகின்றது அவர் இறந்துவிட்டார் என்று........


சென்னையிலிருந்து ஒரு அம்பாஸிடர் கார் பிடித்து உறவினர்களுடன் ஊருக்கு போனால் பாதியில் கார் படுத்துக்கொள்ள....அப்பாவின் அடக்கம் முடிந்தப் பிறகுதான் ஊர் போய் சேர்ந்தேன்......அவரது மரணம் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை நான் மரணம் அடைந்தாலும் நீங்காது


ஆனால்...நான் அவரது உடலையும் அடக்கத்தையும் கண்ணில் காணாததால் இன்னும் அவர் மரணிக்கவில்லை என்றே மணம் ஆறுதல் சொல்கிறது இருந்தாலும் என் தந்தையின் மரணம் மறக்கமுடியவில்லை இன்று நானும் ஒரு தந்தையான பின்னரும்...........அட...சொல்லிட்டு சாவுங்கப்பா

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (10-May-14, 10:09 am)
பார்வை : 231

மேலே