தடுமாற்றம் தாலாட்டுதே-----அஹமது அலி-----

பால் போல் கள்ளும்
நூல் போல் முள்ளும்
நூதனமாய் தோன்றும்!
-0-
பூ போல் நெருப்பும்
பூந்தென்றல் போல் புயலும்
புரியாமல் போகும்!
-0-
அரளிப் பூவும்
அழகிய முளரிப் பூவாய்
வசீகரிக்கும்!
-0-
புதை குழிகள்
புதுமேடையாய்
காட்சியளிக்கும்!
-0-
நீலவான
நீரோடைகளில்
நீலிப்பாம்புகள்
பல வண்ணங்களில்
நீந்தி மயக்கும்!
-0-
அன்னப்பறவையென
எண்ணத் தோன்றும்-அதன்
எண்ணம் கண்டபின்னும்
அன்னமென்று சொன்னால்
மடமை திண்ணமாகும்!
-0-
கானல் நீரில்
பயிர் செய்வது
கைகூடுமோ?
-0-
சாக்கடையில் குளித்து
நறுமணம் பூசுவது
நற்செயலா?
-0-
சிலந்தியின் வலை பிடித்து
சிகரம் தொட நினைப்பது
சிந்தனை சிறப்பா?
-0-
ஆழிப் பேரலையில்
ஆனந்தக் குளியல்
வினோதமே!
-0-
அறிவுச் சுடர்
அறியாமை காற்றுடன்
சிநேகம் கொள்வது
விவேகமா?
-0-
உள்ளக் கண்ணாடியில்
விழும் பிம்பங்களை எல்லாம்
உண்மையென நம்பிட ஆகுமா?
-0-
தேர்வெழுதி பின்
பாடம் கற்பது
வாழ்க்கை பள்ளியில் தான்.!
-0-
பாடம் கற்ற பின்னும்
பரீட்சையில் ஈடுபடுவது
பரிதாபம் தான்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (18-May-14, 9:49 am)
பார்வை : 285

மேலே