பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல்

உருண்ட பாறையாய்
அருவுருவமாய் உள்நுழைந்து
உளியின் வலிதாங்கி
நளினமாய் நல்நட்பின் துணையாலே
கலையாகி சிலையானேன் நன்று !

எழுத்தில் நுழைந்தேன் அன்று...
எதுவும் அறியா கன்றாய்
பயமின்றி துள்ளிக் குதித்து
அன்பு உள்ளத்தை அள்ளியெடுத்தேன்
அதிகம் எழுதி பக்குவமானேன் இன்று !

அற்புதம் செய்திட
கவியொன்றும் காண்டீபமல்ல
காலிடுக்கில் பிறந்து இடுகாடு முடிக்கும்
மனிதக் குழந்தையுமல்ல
நல்கவிஞனாவது எங்ஙனம்?
எல்லோர் மனதிலும் விழும் கேள்வியிதுவே !

பற்பல நூல்கள் பயின்றிட வேண்டும்
தமிழ் பற்றுடன் இருந்திடல் வேண்டும்
கற்றோர் கவியை ஆழ்ந்து படித்திடல் வேண்டும்
இலக்கணம் சற்றேனும் அறிந்திடல் வேண்டும்
அதன்மேல் ஆர்வமிகுதி இருத்திடல் வேண்டும்

இவையாவும் இல்லாதவர் எங்ஙனம்
நல்கவி படைத்திடல் முடியும்!
இத்துனை சிரத்தை எடுத்திட முடியா
முயற்சி தொடர்ந்திட எழுத்தில்
நுழைந்திட வேண்டும்

கற்றோர் நல்கும் கவி படித்து
கருத்தில் கொண்டிட வேண்டும்
எழுத்தில் இலக்கணம் எக்கணம்
உட்பொருளாய் கருவாய் வளைந்து
கவியாய் விளங்குதென்பதை அறிந்திடல் நன்று !

எண்ணற்ற கவிஞர்களின் கற்பனை திறனை
எல்லாக் கவியும் படித்து கற்றிடல் வேண்டும்
தோழமை கவிதைமட்டும் பாரமால்
அறிமுக கவிஞரின் கற்பனையையும்
எண்ணி ரசித்திடல் வேண்டும்

எழுத்தில் நுழைகையில்...
இடிமின்னல் தாக்கிடக் கூடும்
மனவலிமை கொண்டு தாங்கிட வேண்டும்
பட்டைத் தீட்டத் தான் ஒளிரும் வைரம் போல்
அனலில் உருக்கிட ஒளிபெறும் தங்கம் போல்
புடம்போடாமல் கவிதை புலனாகாது !

மழையாய் சிலநேரம் மனதை வெல்லும்
இடியாய் சிலநேரம் மனதைக் கொல்லும்
நேர்கொண்ட ஆதவன் பார்வையில் ...
சில நேரம் சாம்பலாக கூடும்
நெஞ்சுரம் கொண்டு ஆர்வமாய்
பதித்தால் மட்டுமே வெற்றிக்கோப்பை
வென்று கவிஞனாய் நிலைபெற முடியும் !

ஆன்றோர் படைக்கும் கவிபயின்று
ஐயம் தீர்ந்திட வேண்டும்
பூவோடு சேர்ந்து நாறும் மணப்பதுபோல்
நட்போடு சேர்ந்து நானும் மணக்கிறேன்
சில நூறு கவி படைத்து களிக்கிறேன்...

எழுதியவர் : கனகரத்தினம் (9-Jun-14, 8:56 am)
பார்வை : 99

மேலே