வேரில்லாச் செடி

இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்

தேனீர் கோப்பைகளுடன்

உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது

என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.

மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்

உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.

மௌனம் செடியின் நீரானது.!

விழி திறந்திருக்கும்.

நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.

இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.

பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!

பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்

சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்

நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.

நானும் வண்ணமாய் நிறைகையில் உறக்கம் கலைகிறது.

கனவுகளால் கிளை பரப்பியது செடி.!

நான் தொடங்கினேன் நீ தொடர்ந்தாய்

வார்த்தைகள் தீரா வெளியில் நடமாடினோம்.

பின், நான் நீயாய் - நீ நானாய் முடிந்தோம்.

செடியின் இலைகளாய் நம் காதல் இருக்கிறது.!

உன்னை கவிதை செய்து தருகையில்

கால்கள் நிலம் தறிக்காது பறக்கிறேன்.. என்றாய் நீ.

இரண்டு நிலாக்கள் எதற்கு.? இங்கேயே இரு.. என்றேன் நான்.

வெட்க நிறத்தில் பூ பூத்தாய் இதழ்களால்.!

பூக்களாய் ஆனாய் செடியில் நீ..!

வேரில்லாச் செடி விருட்சமாய் வளர்ந்து நிறைத்தது

என்னில் உன்னை .!



........................ - பிரபாகரன்.!

எழுதியவர் : Prabakaran (12-Jun-14, 2:42 am)
பார்வை : 124

மேலே