நீயும் நானும் நூலகம் போயிருந்தால்

நான்
படிக்கவந்த புத்தகம் மறந்து
என்னைக்
குடிக்கவந்த புத்தகம் பார்த்திருப்பேன்..

அங்கே
நின்று கொண்டிருந்திருக்கும் நிசப்தங்கள்!
உன்
பட்டு இதழ்களிலும்
நட்டு வைக்கப்பட்டிருந்திருக்கும்
மௌனப்பூக்கள் !

நிறைய நூல்கள் ..நிறைய ஆள்கள்..
இருந்திருக்கலாம்! - எனக்கென்ன?
உன்னைப்பார்த்த விழிகள்
உட்கார்ந்து விட்டிருக்கும்..
எழுந்துபோய்
எந்த நூலையும் தேடியிருக்காது!.

அங்கே
புத்தகங்கள்
அழகாய்
அடுக்கிவைக்கப் பட்டிருந்திருக்கலாம்
அழகுகள்
அடுக்கிவைக்கப்பட்ட
புத்தகம் நீ மட்டுமே! -எனவே
உன்னை எடுக்கச் சொல்லியிருக்கும் காதல்!

காதல் நண்டுகள்
ஓடியாட....
நான் கடற்கரையாகியிருப்பேன் அப்பொழுதினில்!!

மழை பெய்யும்போது
பூ நனையும்.. பூமி நனையும்.
வானம் நனையுமா?
நனைந்திருக்கும் ..
உன்
பார்வைமழை பட்டு -என்
காதல் வானத்தில்
கடலே ஓடியிருக்கும்.!

அத்தனை நூல்களையும்
மறுத்துவிட்டு
காதல் நூலை
கையிலெடுத்திருப்பேன்

"தேவதை நீ படிக்க
தேனால் செய்த நூலே தேவை
பூலோக நூலகங்கள்
புலம்புகின்றன!"
அவசரக் கவிதையை
அள்ளிப் போட்டிருக்கும் காதல்!

அன்று
நூலகம் விட்டு
நீ சென்றவுடன்
நானும் சென்றிருப்பேன் !
என் காதல் மட்டும்
கவிதை நூல்களை
புரட்டிக் கொண்டிருந்திருக்கும்.....

முக்கியமான ஒன்று..
இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்காது..

----நடராஜன் மாரியப்பன்..
யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராய!

எழுதியவர் : (18-Jun-14, 9:57 pm)
பார்வை : 155

மேலே