கொஞ்சம் எடுத்துதான் சொல்லுங்களேன்

கொஞ்சம் எடுத்துதான் சொல்லுங்களேன்

அவளுறக்கத்தை களவாடி
ஒற்றையிலைதாழ்ந்த தாமரையாய்
அமளியிலேயே வீற்றிருக்கின்ற
அந்த முகபாவத்திற்கு
காரணமானவன் யாரென்பதை
உணரமறுக்கும் அவளிடம்
கொஞ்சம் எடுத்துதான் சொல்லுங்களேன்

உனக்குப்பிடிக்குமே என்றுதானோ என்னவோ
என் நாவிற்கும்
உன் செவிகளுக்குமிடையே
கடிவாளமிட மறுக்கிறது
உடைபடவும் மறுக்கிறது ஒரு வித்யாகர்வம்
நீயோ பாவம்
உன் அத்தியாபகஞானத்தால்
என் அன்பை
அளவிடப்பார்க்கிறாய் எனையறியமுற்பட்டு

கற்பனையில்கூட அழகாகத்தான் இருக்கிறது
உன் விழிகள்மிரள்வது
குழந்தையாகக்கூட என் இறுமாப்பிற்கு
உன் முன்னால்
நடிக்கத் தெரியவில்லைப் பாரேன்

சேடியொருவளிடம் சேகரிக்கச்சொன்னது
அன்று பூத்த பிறை பிடித்திருக்கிறதா
என் பிழைபிடித்திருக்கிறதா
எனக்கேள் என்றால்
அளகையில் உதித்த புலர்பதம் ஒன்று
மீனாக்ஷி புறத்திற்கு பயணப்பட்டு
குருவிக்கொண்டான்பட்டியில்
தஞ்சங் கொண்டுவிட
தயாராகுந் திறக்கில் என்கிறாளாம்

அமிழா ஆழத்தில்
தெரியா திருமுழுக்கு உன் ஆழிக்குள்
துலா மாதத்திற்கும் காவிரி நீராடலுக்கும்
துணைதேடிடும் ஒரு முடவன்மனம்போல்

அரக்கப்பறக்க வருகின்ற அவளோ
அற்பநொடியில்
கரண்டிவிட்டுக் கலக்கியவளாய்
உப்பிருக்கிறதா காரமிருக்கிறதா
நான் உரசிய வியர்வைநெடியில் என்று
கூட்டு சம்வாதம் செய்து
நண்பர்களுடன் ருசிப்பார்க்கிறாள்
அனற்குவை ஒன்றில்
கொதிக்கின்ற என்னாவி கண்டுரசித்தபடி

மண்ணகம் மறந்து விண்ணகம்பறந்த
காதலர்கள் யாரேனும்
அவள் வாசிப்பிற்கு உட்பட்டிருந்தால்
இதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்

அவளுறக்கத்தை களவாடி
ஒற்றையிலைதாழ்ந்த தாமரையாய்
அமளியிலேயே வீற்றிருக்கின்ற
அந்த முகபாவத்திற்கு
காரணமானவன் யாரென்பதை
உணரமறுக்கும் அவளிடம்
கொஞ்சம் எடுத்துதான் சொல்லுங்களேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (19-Jun-14, 7:12 am)
பார்வை : 67

மேலே