அந்தச் சம்பவம்

அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் ஒருதிரை விரிந்து, அதில் காட்சிகள் துல்லியத் தெளிவோடு சட்டம் சட்டமாக அப்படியே செதுக்கப்பட்டது போலத் தெரிந்துதொலைக்கின்றன. கொஞ்சம் உவகையான காட்சிகள்தான், ஆனால் சம்பந்தப்பட்டவனாக நானே இருப்பதால், அந்தச்சம்பவம் எனக்குப்பிடிக்கவில்லை !

ஒரு பிரம்மச்சரிய மதியம் ! ஒரு நிமிடம் ........ " பிரம்மச்சர்ய மதியம் " என்கிற இந்தச்சொல், ஒரு புதிய கலைச்சொல்லாக தமிழுக்கு என்னால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை இவ்விடத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் மேற்கண்ட அந்தச்சொல்லில் இருந்து பிரம்மச்சரியக் காலை, பிரம்மச்சரிய இரவு, பிரம்மச்சரிய நடுநிசி,, பிரமச்சரிய அதிகாலை, பிரம்மச்சரிய நேற்று , பிரம்மச்சரிய இன்று, பிரம்மச்சரிய நாளை, பிரம்மச்சரிய நாளைமறுநாள், பிரம்மச்சரிய முந்தாநாள் ,,,,,,,,,,,,,,,,,,என்ற பல புதிய சொற்கள் உருவாகக்கூடும் சாத்தியமிருப்பதால் அவ்வாறு உருவாகும் அனைத்து சொற்களுக்கும் ஏகபோக பாத்யதை எனக்கே கிடைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். நிற்க ! எங்கே விட்டேன் ?

ஆங் ....ஒரு பிரம்மச்சரிய மதியம் ! இன்னுமா எனக்குத் திருமணமாகவில்லை என்று புருவம் உயர்த்தாதீர்கள் ! ஆகவில்லை, அவ்வளவுதான் ! அதைப்பற்றிச்சொன்னால் இக்கதை திசைமாறிவிடும். ஆகவே அதைப்பற்றிச் சொல்வதை விடுத்து இதைப்பற்றிச்சொல்கிறேன். சொல்கிறேன், சொல்கிறேன் என்று சொல்கிறேனே தவிர இன்னும் சொன்னபாடில்லை என்கிற தங்கள் ' மூளைக்குரல் ( mind voice ) எனக்குக் கேட்கிறதுதான் !

அதில் பாருங்கள், நடந்த அந்தச்சம்பவம் ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அதை நீட்டி முழக்கி, இழுத்துக் கோர்த்துச் சொல்லவேண்டும் அல்லவா ! அதற்கென ஒரு மனத்தயாரிப்பு வேண்டாமா ? அந்த ஒரு தயாரிப்பைத்தான் எனக்கு நானே செய்து கொண்டிருக்கிறேன் ! நீங்கள் அங்கே கொட்டாவி விடுகிறீர்கள். தெரிகிறது !

பொதுவாக ஒரு வாலிபனின் பிரம்மச்சரிய மதியம் எப்படியிருக்கும் என்றால், எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கும். ஆனால் முப்பதுகளின் மிகத்தொடக்கத்தில் இருப்பவனது பிரம்மச்சரிய மதியம், வாலிப மதியத்தை விட சற்று முதிர்ந்து இருக்கும். சொறியாதீர்கள்.....விளக்குகிறேன்.

ஒரு இருபத்திஐந்து வயது வாலிபன் மதியத்தில் பொதுவாக, பெருபாலும் அறையில் / வீட்டில் இருக்கமாட்டான். அப்படியே இருந்தாலும் வீடாக இருந்தால் தூங்குவான்.

ஆனால் அறையாக இருந்தால் அவன் நண்பர்களுடன் மது அருந்துவான், நண்பர்களுடன் தொ.கா பார்ப்பான் அல்லது நண்பர்களுடன் உறங்குவான். வான்....வான் ...வான் ! இந்த ' வான் ' என்பது குறியீடாக சுதந்திரத்தை உணர்த்துகிறது என்பதை நீர் இவ்விடத்திலே புரிந்து கொள்ள வேண்டும் ! இப்படியாக அறைவாசி வாலிப பிரம்மச்சரியனுக்கு எல்லாமே நண்பர்களுடன்தான். எல்லாமே நண்பர்கள்தான். ஆமென் !

இதே அந்த பிரம்மச்சாரி முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்து, திருமணமும் ஆகாமல், அறைவாசியாகவும் இருந்தால் கொஞ்சம் தனியாக இருப்பான். அவனது அறையில் மிக அதிகப்பட்சம் மூன்று பேர் அறைப்பங்காளர்களாய் இருப்பார்கள். அவர்களும் தனிமை விரும்பிகளாய் இருப்பார்கள். விடுமுறை நாட்களில் அவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள். அறை யாருமில்லாமல் பூட்டியிருக்கும் அல்லது ஒரே ஒருவனோ, மிக அதிகபட்சமாய் இரண்டு பேரோ இருப்பார்கள்.
நான் அன்று ஒருவனாய் தனியே இருந்தேன்.

அறைத்தனிமை என்றாலே எனக்கு குஷியாகிவிடும்.

அத்தனிமையில் நான் தேகப்பயிற்சியில் ஈடுபடுவேன், கதவைச்சாத்திக்கொண்டு தொலைக்காட்சியைப் போட்டு, அதில் ஒரு இளம் தெலுங்கு கதாநாயகன் ஆடும் நடன அசைவுகள் எனக்கு எவ்வளவு சதவிகிதம் நடனமாக வருகிறது என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதில் எனக்கு அலாதி ஈடுபாடு. ஏன் தெலுங்குக்கதாநாயகன் என்றால், அதீத வளைவு நெளிவு சுளிவுகள் அங்குதான் சாத்தியம். தமிழில் கயிறுகட்டி இழுக்கிறார்கள் அல்லது ரீலை வேகமாக ஓட்டுகிறார்கள். தெலுங்கிலும் இது உண்டு என்றாலும் கொஞ்சம் இயல்பாக இருக்கும். மேலும், நான் ஏன் நடனமாடுகிறேன் என்றால் அது என்னை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் என்ற நம்பிக்கைதான். திருமணம் ஆகவேண்டுமல்லவா ? ஆனால், நான் நடனமாடுவது ஆடிகொருமுறை, அமாவாசைக்கு ஒருமுறைதான் !

அப்புறம், மடியாகக் குளித்துவிட்டு, திவ்யமாக, ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டு, ஜெகதீஸ் மெஸ் என்று லோக்கல் மெஸ் இருக்கிறது, அங்கே அளவுச்சாப்பாடு 40 ரூபாய், அங்கே சென்று அசைவச்சப்பாடு கேட்டுவாங்கி, ( குழம்பு மட்டும் ) உண்டு களித்து, பிறகு அறைக்கு வந்து, மன்மதன் ரதியை மனப்பூர்வமாக சேவித்து, பயபக்தியுடன் சிடியில் ' படங்கள் ' பார்ப்பேன். படங்கள் என்ற அந்த வார்த்தை அடைப்புக்குறிக்குள் உள்ளதை நீங்கள் புரிந்துகொண்டு, முகத்தை இலேசாகச் சுளித்துக்கொண்டு ஒருவித அறுவெறுப்புத் தன்மையுடன் இக்கதையை இனிமேல் அணுகுவீர்கள். தெரியும் ! ஆனால் நான் சொல்லவந்தது அதைப்பற்றியல்ல, அந்தச் சம்பவத்தைப் பற்றி ! ஆகவே, பாத்ரூம் போகிற மாதிரி மூஞ்சை வைக்காமல் மேற்கொண்டு படியுங்கள்.

' படம் ' பார்த்தால் அதன் விளைவாக தூக்கம் வரும். ஆகவே, அடுத்து ஒரு தூக்கம் ! தூங்கியெழுந்து கொஞ்சம் சூனியத்தை தரிசித்ததில், இலக்கில்லாமல் வெறித்தபடி சற்று நேரம் அமர்ந்துவிட்டு பிறகு " கை கால் மூஞ்சி கழுவி " மாலையில் வெளியே சென்று அடைப்புக்குறி தேவையில்லாத ஒரு ( U ) படம் பார்த்துவிட்டு, அதே ஜெகதீஸ் மெஸ்ஸில் ஒரு ரோஸ்டும் ஒரு அம்லெட்டும் சாப்பிட்டால், தனிமை இனிமையாகக் கழிந்திருக்கும். பிறகு அறைக்குவந்து விட்டத்தை வெறித்துவிட்டு பிறகு மீண்டுமொரு தூக்கம். ரொம்ப சுற்றுகிறேன் இல்லை ! கொஞ்சம் எழுந்து உலாத்தி விட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு வந்து படிக்கவும் !

மேற்கண்ட நிகழ்ச்சிநிரலில் சிற்சில மாறுபாடுகள் எப்போது வருமென்றால், துவைக்கவேண்டிய துணிமணிகள் ஒரு மோளி சேர்ந்துவிட்டால், சில நிகழ்ச்சிகள் ரத்து ஆகலாம். தேகப்பயிற்சி ரத்தாகும், தெலுங்கு நடனம், ரத்தாகும் ! எனவே, சம்பவம் நடந்த அன்று நான் அவ்விரு நிகழ்ச்சிகளை ரத்து செய்து துணி துவைத்தேன். நான் ஏன் துணி துவைக்கும் போது தேகப்பயிற்சியை இரத்து செய்கிறேன் என்றால், துணி துவைப்பதே ஒரு தேகப்பயிற்சிதான்.

ஆகவே நான் அன்று துணி துவைத்தலாகிய அத்தேகப்பயிற்சியை செவ்வனே செய்து முடித்து மடியாகக் குளித்து, ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டு " நெகிழிவாளியில் " ( பக்கெட் ) துவைத்த துணிகளைப் போட்டு அத்துணிகளைக் காயப்போட மொட்டை மாடிக்குச்சென்றேன். ஆங்கே வழியில் இரு பெண்கள் ! ஒரு நிமிடம் .........உங்கள் புருவம் ஏன் உயருகிறது ?. மேலும் ஒரு பிரம்மச்சரியன் பெண்களைப் பற்றிச் சொன்னால் உங்கள் புருவம் உயருகிறது ? ஏனெனில் பிரம்மச்சாரிகளைப் பற்றிய உங்களுடைய கண்ணோட்டம் அப்படிப்பட்டது ! அந்தக் கண்ணோட்டத்திற்கு முதலில் நல்ல கண்ணாடி வாங்கி மாட்டுங்கள் !

அப்பெண்களை அந்த அறைக்கு வந்ததில் இருந்து எனக்குத் தெரியும். ஒரு பெண் திருமணம் ஆனவர். குழந்தையுண்டு. இன்னொரு பெண் கல்லூரிப்பெண் ! இவர்களோடு நான் பேசியதில்லை. ஆனால் அவர்கள் இருவரும் தமக்குள்ள சதா சர்வகாலமும் எதையாவது தொண தொண வென்று பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சையெல்லாம் ஆவணப்படுத்தினால் ஒரு முந்நூறு பக்க அளவில் ஒரு புதினம் ருவாகலாம்.

மேலும் இவ்விரு பெண்கள் மத்தியில் நான் மரியாதைத் தனமான ஒரு தோரணையை உருவாக்கி நடமாடி வந்தேன். இதுகாறும் அவர்களிடம் பேசியதில்லை. பெண்கள் தானாக வந்து என்னோடு பேசவேண்டும் என்ற சுபாவம் கொண்டவன் நான். இதனாலேயே எனக்கு அலைபேச, காதல் வளர்க்க ஒரு பெண் நண்பி கூட இல்லை. நான் பயங்கர அமைதியாக இருப்பதால் அவர்கள் என்னைப்பார்த்தால் மரியாதையாக எழுந்து நகர்ந்து வழிவிடுவார்கள். அப்படி ஒரு கெத்து ! ( காறித் துப்பவேண்டுமென்றால் வெளியே போய் துப்பவும் )

சம்பவம் நடந்த அன்று இருவரும் சலசலவென்று ( ' சலசல ' க்கு ஒற்றை ல வா ? இரட்டை ள வா ? ) பேசிக்கொண்டிருந்த அப்பெண்டிர் அடியேனைக் கண்டதும் ' டப் ' என நிப்பாட்டினார்கள். நான், ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் போது அவர் முகத்தில் ஒரு மோகன நிலை தென்படுமல்லவா அப்படிப்பட்ட மோகன நிலையில் முகத்தை வைத்துக்கொண்டு மாடியின் படிகளில் ஏறினேன். ஏறும்போது எதேச்சையாக அந்த இருபது வயதுப் பெண்ணை சைட் அடித்துவிட்டேன். அவளும் என்னை சைட் அடித்தாளா இல்லை கண்ணோடு கண்ணோக்கி முறைத்தாளா என்பதைத் துல்லியமாக யூகிக்கும் மனநிலையில் இல்லாத நான் கடகடவென்று மேலேறி அவள் கண்களோடு என் கண்கள் கலந்திட்ட அந்த அற்புதத் தருணத்தை அசைபோட்டபடியே முகத்தில் ஒரு இரசமான புன்னகையோடு துணிகளைக் காயப்போட்டேன். ( உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து கண்ணாடியை எடுத்து விடுங்கள் )

முதலில் கொடியில் கிளிப்புகளை மாட்டி அதன் மீது துணிகளைப் போட்டுவிட்ட நான் கடைசியில் கிளிப்புகளைக் காணாது அங்குமிங்கும் தேடிச் சலித்த வேளையில் காற்றடித்து என் டவுசர் ஒன்று பறந்ததில் கிளிப் கண்ணுக்குத் தெரிய, ஒரு கெட்டவார்த்தையில் என்னை நானே செல்லமாக வைதுகொண்டு பிறகு ஒழுங்காக முதலில் கொடியில் துணியைப் போட்டு அதன் பின்பு கிளிப்புகளை அதன் மீது மாட்டினேன். மேலும் இந்தக் கிளிப்புகளுக்கு " ஆடை பிடிப்பான் " என்றொரு பெயரைப் பரிந்துரை செய்யவிருந்தேன். அது இருபொருள் அல்லாமல் பலபொருள் தருவதால் அதை, சமூக கலாச்சார பொருளாதார காரணங்கள் கருதி வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

மீண்டும் படிகளில் கீழே இறங்கிச் செல்வதை நினைத்தாலே எனக்கு கிளுகிளு வென்று இருந்தது. கண்களா அவை ! " இருபது வயதுப் பெண்ணே ! இரு வருகிறேன் ! " என்றபடியே நான் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்தோடு கீழே இறங்க, மீண்டும் அவர்கள் சலசலவென்று பேசிக்கொண்டிருந்தார்கள் ! அப்படி என்னதான் பேசுவார்களோ ? என்று நான் ஆவலோடு கீழே இறங்கிக்கொண்டிருந்த போது, ' சொலுக் ' என்று எதோ ஒரு கருமாந்திரம் என் காலுக்கடியில் வழுக்க, என் கைகளில் இருந்த " நெகிழி வாளி ' படிக்கட்டுகளில் உருள, ட டடவென நான் கீழே அவ்விரு பெண்களையும் நோக்கி உருண்டேன் ! அவர்கள் குய்யோ முய்யோ எனக்கத்தியபடியே ஓட, இதை வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டு நாய், திடீரென்று சூழலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தில் வெகுண்டு " வள் வள் " எனக் கத்த, அந்தத் திருமணமான பெண்ணின் குழந்தை வீறிட்டழ, ஒரே ரசாபாசம் ஆகிவிட்டிருந்தது.

நல்ல செவிட்டு அடி ! இதற்குள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து சில பேர் வந்து என்னைத் தூக்கி விட்டு, தண்ணீரெல்லாம் கொடுத்து, மந்திரித்து தாயத்து கட்டாத குறையாக என்னை அறைக்கு அனுப்பி வைத்தார்கள். உள்ளே வந்த நான் ஆசுவாசபெருமூச்சோடு முதலில் தலையைச் சொறிந்தேன் ! பெருமூச்சு விட்டேன் ! அப்புறம் உடம்பை இப்படியும் அப்படியும் வளைத்துப் பார்த்தேன். ஆயினும் என் எலும்புகளின் ஆரோக்ய நிலைபற்றி எனக்குச் சந்தேகம் ஏற்படவே, விலுக் விலுக் என்று என் கைகால்களை நன்றாக ஆட்டிப்பார்த்தேன். நன்றாக ஆட்டமுடிந்த குஷியில் மேலும் நன்றாக ஆட்டி கிட்டத்தட்ட நடனம் போன்ற ஒன்றைச் செய்துகொண்டிருக்க எதோ நிழலாட , பார்த்தேன் !

பக்கத்து வீட்டு அறுபது வயது மூதாட்டி பேயறைந்தது போல என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, நான் சுதாரித்துப் பல்லிளிக்க, " கிளிப் கீழ விழுந்துடுச்சு " என்று கொடுத்து விட்டுச் சென்றது !

எழுதியவர் : குருச்சந்திரன் (25-Jun-14, 3:37 am)
Tanglish : andhach sambavam
பார்வை : 243

மேலே