கனாச் சந்தை - வினோதன்

மயிலென துயில்கொண்ட
என்னவளின் தூக்கத்
துகிலுரிந்து - கண்ணொளி
தளவாடங்களுடன் - உள்
நுழைகிறேன் - விழியே
தூரிகையான காரிகையின்
கனவுத் தோட்டத்துள் !

என்னையொரு ஓரமாய்
உட்கார வைத்துவிட்டு,
ஒரு கண்ணால் பார்த்தபடி
மறுகண்ணில் விரைந்து
வரைந்து உறைந்தாள் - நான்
உருவம் உள்வாங்கி கரைந்தேன் !

நீண்ட வரிகளாய் மண்டிக்
கிடந்தயென்னை - செதுக்கி
சிற்பமாக்கி சிசுவுமாக்கி
கண்ணோரம் கருவேற்று,
மயங்கி மசக்கையுமானால் !

என் கண்களுள் பிரவேசித்து
எம் காதலை பிரசவித்து
உச்சி முகர தருகிறாள்,
உருவமோ வேறேதும்
விவரமோ அற்ற - அன்பின்
முப்பரிமாண குழந்தையை !

அவளிதய அறைகளின்
முகப்பு விளக்குகள்
அணைந்த பின்னரும்,
அவளை ஒரு புறமும்
காதலை மறுபுறமும்
அணைத்தபடி கிடக்கிறேன் !

சூரியன் உலகைச் சூழ்ந்து
தாக்க ஆரம்பித்த - சில
வினாடிகளில் - எல்லாக்
கனவுச் சித்திரங்களும்
தத்தம் உருவத்தை தாமே
உள்வாங்கி சாகின்றன,
கனாச்சந்தை கணநேரத்தில்
தானே மூடிக்கொள்கிறது !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (25-Jun-14, 5:30 pm)
பார்வை : 74

மேலே