விழித்தொட்டில் ✿ சந்தோஷ் ✿

அவள் மட்டும்
இப்போது என்னோடு
உறவாக என்னுள்
உயிராக
இல்லையென்றால்...

இதோ
எந்தன்
வாழ்க்கை பயணத்தின்
முப்பத்தைந்தாவது
வயது சாலையில்
கொலை செய்யப்பட்டிருப்பேன்.

அதோ
அந்த பணத்தின்றிகள்
என் பிணத்திலேறி கொத்தி கொத்தி
வெட்டி வெட்டி சிதைத்திருக்கும்
என் கடந்துப்போன அனுபவங்களில்
உறைந்துக்கிடக்கும்
தன்னம்பிக்கை பொக்கிஷங்களை..!


தோற்று தோற்று
சற்று செத்துப்போன
எந்தன் உயிருக்குள்
சட்டென்று பிடித்துக்கொண்டாள்.
என் உயிரில்
உரசியவள் தீயா?
இல்லை என் காதலியா?

”விடைதேடாதே....!
இந்த உணர்வுத்திசையில்
புதிய உறவுப்பாலத்தில்
நடைப்பழகுவோம் வா” என்றே
கடைக்கண் காட்டி -அன்பு
குடைக்குள் அழைத்து
அவளின் கருவிழித் தொட்டிலில்
எனை சேயாக்கி அவள் தாயாகினாள்..

”நாளைய வெற்றிவிடியலில்
உனக்கும் ஒரு சரித்திரம்
நிச்சயமிருக்கு
இன்று மட்டும்
செல்லமே நீ கண்ணுறங்கு” என்று
ஓர் ஆறுதல் தாலாட்டில்
என் தோல்விகளை விரட்டியடித்து
என்னை
உறங்க வைத்துக்கொண்டிருக்கிறாள்.
---


என்னருகே இல்லாத
அவளின் மார்பகத்தை
உருவகப்படுத்தும்
இந்த தலையணையில்
முகம் புதைத்து
உறங்கப் போகிறேன்.

அவள் மட்டும்
இப்போது என்னோடு
உறவாக என்னுள்
உயிராக
இல்லையென்றால்...

சற்று நிமிடங்களுக்கு முன்பு
ஒரு ஏமாற்றத்தின் விபத்தில்
கொலை செய்யப்பட்டிருப்பேன்.


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-Jun-14, 9:03 pm)
பார்வை : 961

மேலே