காதல் ஜெயித்தது 4

மறு நாள் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினாள் சத்யா. யாரிடமும் பேசவில்லை.
வீதியை தாண்டும் முன்பே அவளை பார்த்த பெண்கள் ஜாடையாக பேசுவது அவள் காதில் விழுந்தது.
அடியே, ஊமை ஊரை கெடுக்கும் தெரியுமா.? நீ யாரை சொல்ற வள்ளி, என்றாள் செண்பகம். அத போறா பாரு சத்யா அவளை தாண்டி சொல்றேன். இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு என்ன வேலை பண்றா பாரு. சும்மா இரு வள்ளி அந்த புள்ள அப்படிப்பட்ட புள்ளை இல்ல என்றாள் செண்பகம்.
போடி போக்கத்தவளே, நெருப்பில்லாம புகையுமா? அவ அப்பன்காரனே கண்ணால பார்த்துட்டு வந்து
அடிச்சிட்டான் தெரியுமா என்றாள்.

இதெல்லாம் கேட்ட சத்யா மனதிற்குள் அழுதாள். நான் செய்த தவறு என்ன ? புரியவில்லையே. என் கருத்தை கேட்க யாருமில்லையே? நான் என்ன செய்வது.
சத்யா அவள் அப்பாவிடம் அடி வாங்கிய விஷயம் அன்புக்கு அவன் நண்பன் மூலம் தெரிந்து விட்டது. டேய் அன்பு நேத்து சத்யாவுக்கு அவங்க அப்பாகிட்ட அடிடா. ஏண்டா ? பதறினான் அன்பு.
நீ அவகிட்ட பேசினத பார்த்து அவங்கப்பா , அவளும் நீயும் லவ் பண்றிங்கனு நினைச்சு அடிச்சிட்டார். சத்யா பாவமுடா , என்றான் அன்பின் நண்பன் கார்த்திக்.
பள்ளியிலும் தோழிகள் கூட முன்னால் விட்டு பின்னால் கூடி கூடி பேசினார்கள்.
அன்பு அவளிடம் பேசிவிட துடித்தான். தன்னால் தானே அவளுக்கு அடி விழுந்தது . மன்னிப்பு கேட்டு விட நினைத்தான்.
தன் வீட்டுக்கு பக்கத்தில் அவளுடன் படிக்கும் கீதாவிடம் ஒரு கடிதம் எழுதி கொடுத்தனுப்பினான்.

ஏய் சத்யா , இங்க வாடி ? என்றாள் கீதா. என்ன ? என்றாள் சத்யா . அன்பன்னா உன்கிட்ட ஒரு கடிதம் கொடுக்க சொன்னார். இந்தாடி என்று கையில் திணித்து விட்டு சென்றாள்.
இது என்ன புது பிரச்னை. இருப்பது போதாதா.இது வேறா? ச்சே என்று குப்பை தொட்டியில் வீசினாள்
மீண்டும் மனம் கேளாமல் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க கையில் எடுத்தாள்.
பிரித்து படிக்கலானாள்.

சத்யா என்னை மன்னித்து விடு. என்னால் உனக்கு வீட்டில் பிரச்சனை. நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. என்னை மன்னித்து விடு.,என்னை மன்னித்து விடு.என்று 100 முறை எழுதியிருந்தான்.

இதை கவனித்த வள்ளியின் மகள் தன் அம்மாவிடம் சென்று சத்யா ஒரு காகித வெச்சு படிச்சிட்டிருந்தாமா என்று சொல்ல, வள்ளி சத்யாவின் தாயிடம் ஒன்னுக்கு ரெண்டாக திரித்து கூறினாள்.

அன்று மாலை அவள் அப்பா சேரில் அமர்ந்திருக்க , சத்யா சைக்கிளை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தாள். அதற்கு முன்பே வள்ளி சொன்ன விஷயம் அவள் அம்மா மூலம் அவர் காதுக்கு போய்விட்டிருந்தது.

பெல்ட்டை உருவி தயாராய் வைத்திருந்தார். அவள் ரூமுக்குள் நுழைந்ததும் கதவை தாளிட்டு , பெல்ட்டால் அடித்துவிட்டார். உனக்கு என்ன நெஞ்சழுத்தம். நேத்து தான அவன்கூட பேசாதன்னு சொல்லி அடிச்சேன்.

அதுக்குள்ளே இன்னைக்கு லெட்டெர் அனுப்பிட்டானா? லவ் லெட்டெர் அனுப்பரளவுக்கு முத்தி போச்சா. அவன்கிட்ட என்ன இருக்கு. சொத்து பத்து எதுவுமில்ல. படிப்பில்ல , நல்ல வேலையில்ல.
ஆள பார்த்த சும்மா அம்மாவாச இருட்டு மாதிரி. உனக்கு அவன் கூடத்தான் பழக்கமா.
அப்பா இல்லப்பா. நீங்க நினைக்கிற மாதிரி இல்லப்பா . எம்மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லப்பா. நம்புங்கப்பா. என்றழுதாள் சத்யா.
நீ சொல்றத நான் கேட்கணுமா? இந்த வருஷ படிப்போட நிறுத்திக்க. வினோத்துக்கு இன்னும் ரெண்டு வருஷம் பாக்கி இருக்கு . அவன் படிப்பு முடியட்டும். அவன் கையில் உன்னை புடிச்சி குடுத்திடறேன். அது வரை உன்னை வீட்டில் வெச்சிருந்தா இன்னும் பேரை கெடுத்திருவ. உன்னை நூல் மில்லில் சேர்த்துவிடறேன். அங்கேயே ஹாஸ்டல்ல இரு. மூணு வருஷம் இந்த ஊர் பக்கம் வரமுடியாது. அப்பறம் உங்கல்யானதுக்கு தான் நீ இந்த ஊருக்கு வரபோற? என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.
என்னது என் படிப்பை நிறுத்த போகிறார்களா? நான் வினோத்தை திருமணம் செய்து கொள்வதா. அது என் உயிர் போனாலும் நடக்காது.

நான் அன்பை காதலிக்கிறேன் என்று பேர் கட்டிவிட்டார்கள். இனி வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டால் அவனும் இதை தானே சொல்லி காட்டுவான். பெற்றவர்களே நம்பாதபோது, வேறு ஒருவன் எப்படி நம்புவான். அதுவும் அந்த வினோத் திமிர் பிடித்தவன். அதற்கு என்னோடு சேர்த்து பேசிய அன்பையே கட்டிகொள்ளலாம் . பேர் கெட்டது கெட்டு விட்டது. இனி என் வாழ்க்கை அன்பரசனோடு போகட்டுமே என்று முடிவு செய்து விட்டாள்.



(தொடரும் )

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Jul-14, 11:26 am)
பார்வை : 169

மேலே