வாழ்வியல் கோலங்கள்

இன்று நான்
அமர்ந்திருக்கும்
இக்கல்லின் மீது
நாளை யாரோ
வந்தமர்ந்து எதையோ
சிந்தித்திருக்கூடும்!

இன்று என் சிந்தனைகளோடு
நான் எனை சிறைப்படுத்திய
இந்த நொடிகளைப்பற்றி
அவர் அறிந்திருக்க
ஞாயமில்லை!

இந்த மேதினில்
தடம்பதித்திட
போராடும் வாழ்வின் பாதையில்
தடயங்களே இன்றி
மாண்டுபோன
ஜீவன்கள் எத்தனையோ!

இறப்பின் மடியில்
அடைக்கலம்
கிடைக்கும் நாள்வரை
ஏதோ எப்படியோ
வாழ்துவிட்டு
போகின்றன
ஜீவராசிகள்!

ஏதோ காரணத்தினால்
இறந்துபோன
தன் குட்டியை
தன்னோடு அணைத்தபடி
தாய் பாசத்தில் குலைந்த
ஒருகுரங்கு,
கிளை தாவிபறித்திட்ட
பழத்தைஊட்டிவிடத்
துடிக்கிறது....
குட்டியோ
அன்பினில் நிறைந்த
அக்கனியை பற்றி
அறியவே இல்லை.
பழம் உருண்டு
வுிழுகிறது மண்ணில்!

பாசத்தால் கட்டுண்ட
ஜீவன்கள்
புரிந்தும் புரியாமலும்
பற்றுக்களில்
உழன்றபடி
இராட்டின சுழற்சியில்
சிக்கித்தவிக்கின்றன!

எத்தனையோ உயிர்களை
துடிக்கத்துடிக்கக்
கொன்றொழித்த
ஒரு துப்பாக்கி வெறியனும்
ஒரு நாள் அழுகிறான்,
தன்னுயிர்க்காதலி
உயிர்நீத்தாளென...!

இப்படியாய்..........
மனமெனும் மாயத்தேரை
உருட்டியபடி
வாழ்வின் சக்கரங்கள்
சுழன்றுகொண்டிருக்க,
திடீரென ஒரு நாள்
நிறுத்தப்பட்டு விடுகின்றன
அதன் பயணங்கள
நிரந்தரமாய்.......!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (15-Jul-14, 7:32 pm)
Tanglish : vaazviyal kolangal
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே