துளித்துளியாக உப்புக்கரைசல்-வித்யா

வலிகள் இதயம் கடக்கும் போது
ஆன்மாவின் கதறல் கண்களில்
எதிரொலிக்கிறது...........!

மென் கற்களென
கவலைகள் உடையும் போது
புன்னகை சிலசமயம்
கண்ணீரிலும் பூக்கிறது......!

வாழ்கையை காலம்
நிர்வாணப்படுத்தி
அலங்கோலமாக்கும்போது எச்சரிக்கைஎன
தவறாது வருகை பதிவு செய்யும்
இவை.......உப்புக்கரைசல்கள்......!


வான்தூவும் பனிமழை....
வெண் நிலவின் மின்னொளிக் கீற்று..
விண் புதைந்த நட்சத்திரம்..
மண் புதைந்த வைரம்..

விண்கற்களென இரு கரு விழிகளில் உதிரும்
இக்கண்ணீரை எதனோடு ஒப்பிட்டுக்கூறுவேன் நான்.....

ஆழ்கடலிலிருந்து
வாழ்வின் ரகசியங்கள் சுமந்து
கன்னங்களில் வழிந்து
காற்றில் கரையும் உப்புநதிகள் என்பேனா.....

கண்களை ஒளித்து வைத்துக்கொண்டு
இருட்டில் குமுறும்
ஊமை மேகங்களின்
சப்தமான விம்மல்கள் என்பேனா.....

எதுவாயினும்....

இவ்வுலகின்
எல்லா வெறுப்புகள்
எல்லா துக்கங்கள்
எல்லா கவலைகள்
இதுவரை பொழிந்த
கண்ணீர் மழைக்கு..........
என் முதல் கண்ணீர்த்துளியை
காணிக்கையாக்குகிறேன்.......!

எழுதியவர் : வித்யா (25-Jul-14, 5:00 pm)
பார்வை : 216

மேலே