உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம்

உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.... அன்று

இன்று.... ஒவ்வொரு கவிதை
எழுதும்போதெல்லாம் தோன்றும்
முதன்முதலில் கரும்பலகையில் 'அ ' 'ஆ' போட்டு - நீ
எவ்வளவு நேரம் என் கைபிடித்து எழுதிகாட்டினாயென்று !

இன்று.... மிதிவண்டியில்
இரு கைகளையும் விட்டபடி
அநாயசமாக செல்லும் போதெல்லாம் தோன்றும்
எனக்கு கற்றுக்கொடுக்க -நீ
எத்தனைநாள் போராடிக் கொண்டிருந்தாயென்று !

இன்று....தலைக்கீழாய்த் தண்ணீரில் குதித்து
மேலெழும்போதெல்லாம் தோன்றும்
எனக்கு நீச்சல் கற்றுத்தர -நீ
எ த்தனைமுறை மூழ்கியிருந்தயென்று !

இன்று....முக்கியமானதை தொலைத்துவிட்டு
தலைதெறிக்க நான் தேடும்போதெல்லாம் தோன்றும்
திருவிழாவில் நான் தொலைந்தபோது - நீ
எப்படி தேடி இருப்பாயென்று !

இன்று....மேடையில் நின்று
மணிக்கணக்காய் பேசும்போதெல்லாம் தோன்றும்
சிறுவயதில் எனக்கு தமிழ் வார்த்தை சொல்லித்தர - நீ
எவ்வளவு சிரமப்பட்டிருப்பாயென்று !

இன்று....உன்னைப்பற்றி யாரவது
கேட்கும்போதெல்லாம் தோன்றும்
"புன்னகைப் படர்ந்த உன்புகைப்படமும்....
புற்கள் படர்ந்த உன் கல்லறையும்..."

எழுதியவர் : ஜின்னா (10-Aug-14, 5:43 pm)
பார்வை : 211

மேலே