பூக்களோடு ஒரு கைகுலுக்கல்

மண்ணில் யானும் ஜனித்து இன்னும்
மழலை பேசாக் காலம்

கார்குழல் ஒன்றாய் இரண்டாய் மெல்ல
காற்றி லசையும் பருவம்

தகப்பன் விரலைப் பற்றிக் கொண்டு
தத்தி நடை பழகும் போதே - என்

தலையில் இன்னொரு சுமையாய் சுகமாய்
தன் நறுமணம் என்னுடன் பகர்ந்தவளே

பள்ளிக் கால இரட்டை ஜடையில்
பன் நிறம் காட்டிய மெல்லிதழே - நான்

பருவம் எய்திய அன்று என்னை
பளிச் சென்றாகக் காட்டினயே

காதல் இலக்கணம் சொல்லத் தான் - என்
காதலன் உன்னையும் துணைக்கழைத்தான்

அன்பைக் கொட்டி கலவிக் கழைக்க -காதல்
அன்பன் உன்னையே தூதுவிட்டான்

வளைகாப்பும் நடாத்தி பெண்மை இங்கே
வளமாய்த் தாய்மை அடைகையிலே
வஞ்சி கூந்தல் முழுதும் மறைத்தவளே

பதி எனை விட்டு பரமனின்
பாதம் நிரந்தரமாக அடைந்தவுடன் - என்

இளமை தொடங்கி வந்தவள் உன்னை
இரக்கமின்றிப் பறிக்கின்றார் - ஐயா

இடையில் வந்த தாலி இழந்தேன்
இனி இழப்பதற்கென்னிடம் ஏதுமில்லை - மீண்டும்

இளமை முதலாய் என்னுடனிருந்த
பூக்களோடு ஒரு கைகுலுக்கல்!!!
பூக்களோடு மீண்டும் ஒரு கைகுலுக்கல்!

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (12-Aug-14, 12:07 pm)
சேர்த்தது : Patrick Koilraj
பார்வை : 147

மேலே