ஒரு நூலுக்குள் ஒரு நூறு நூல்கள் - ஒரு திறானாய்வு

பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் ‘மகிழ்ச்சி மந்திரம்’:
நூல் விமர்சனம் - கவிஞர் புதுயுகன்

நூல் வெளியீடு: ஏப்ரல் 2014 திறனாய்வு: ஜூலை 2014
________________________________________________________________

ஒரே சாவி கொண்டு ஒரே நேரத்தில் மூடி இருக்கிற இரண்டு கதவுகளைத் திறக்க முடியுமா?
இதற்கு பதிலைச் சொல்லும் முன் வேறு சில முன்னுரைக் கேள்விகள் இப்படி முன்னே வந்து நிற்கின்றன.

மகிழ்ச்சியின் பின்னணி என்ன?
_____________________________

ஒரு மனிதர் இருந்தார். அவர் பிறந்தது பிரபுத்துவமான குடும்பத்தில். பெற்றது பெருஞ்செல்வம். வென்றது உலகப்புகழ். கொண்டது தேசத்தின் அதிமுக்கிய புள்ளி என்ற மதிப்பு.
இவற்றையெல்லாம் 'மகிழ்ச்சி' 'மகிழ்ச்சி' என்று மனதில் நீங்கள் குறித்து வைக்கக்கூடும். ஆனால் தனது இந்த அதீத செல்வத்தால், உலகப்புகழால், மதிப்பால் அவருக்கு 'மகிழ்ச்சி' ஏற்படவில்லை. அதனால் தனது பரம்பரை பட்டத்தை உதறி, சாதாரண உழைப்பாளியைப் போல் உடையணிந்து அகிம்சையை பின்பற்றி வாழத் தொடங்கி முடிவில் எல்லாவற்றையும் துறந்து சென்றார், தனது எண்பத்திரண்டாவது வயதில். அவர் லியோ தால்ஸ்தாய்.

அல்பேனிய வேர்களோடு ஐரோப்பாவில் உதித்தார் ஒரு பெண்மணி. அங்கே அவர் தம் மக்களோடு இயல்பு வாழ்வு வாழ்வதையே 'மகிழ்ச்சி' என்று நாம் கருதக்கூடும்.
அதைச் செய்யாமல் கொல்கத்தாவின் தெருக்களில் தொழு நோயாளிகளோடு, சமூகம் முகம் திருப்பிய ஜீவன்களோடு தனது நீண்ட வாழ்வை கழிப்பதிலேயே மகிழ்ச்சி கண்டார் அவர். அன்னை தெரசா.

இவர்களது இந்த மகிழ்ச்சியின் பின்னணி என்ன?

இந்த பிரபல மனிதர்களை தாண்டி அத்தனை பேரின் மனதிலும் விதவிதமாய் இருக்கும் இந்த மகிழ்ச்சி என்பதன் தாத்பர்யம் என்ன? நம் மனதிலேயே மகிழ்ச்சி இருக்குமானால் அதை ஏன் தேட வேண்டும்? இந்தக் கோடி ரூபாய் கேள்விகளுக்கான விடை தான் 'மகிழ்ச்சி மந்திரம்' என்ற இந்த நூல்.

இது திறனாய்வு நூலா? இலக்கிய விமர்சன நூலா? ஆன்மிக நூலா? செந்தமிழ் ஆய்வு நூலா? நகைச்சுவை நூலா? கட்டுரைத் தொகுப்புகளா?
தகைசால் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் எழுதி, பிரபல வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல், மேற்சொன்ன அத்தனைச் சுவைகளையும் ஒருங்கே வழங்கும் ஒரு உன்னத நூல். மேற்சொன்னவைக்கும் மேல் சொல்லும் நூல்!

புன்னகைப் பக்கம், மகிழ்ச்சிப் பக்கம், உள்ளொளிப் பக்கம், செம்மொழிப் பக்கம், கவிதைப் பக்கம் மற்றும் அக்கம் பக்கம் என்று பல சுவைகளில் இந்த நூலின் 40 குறுங்கட்டுரைகளும் வகைப்படுத்தப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.

திறனாய்வு, கட்டுரை, உள்ளோளிச் சிந்தனை என்று பல நிலைகளில் பல
சுவைகளை, வகைகளை கொண்ட நூலானதால் இதற்கான திறனாய்வும் வரையரை விடுத்து விசாலப்பட்டு நிற்பதே பொருத்தம் என்று கருதுகிறேன்.


ஒரே சாவி இரண்டு கதவுகள்
___________________________

‘சிரிப்பது என்பது ஒரு புனிதமான பிரார்த்தனைக்குச் சமம்!’ என்பார் ஓஷோ.
எந்த மனநிலையில் மகிழ்ச்சி மந்திரத்தை திறந்தாலும் - மந்திரம் போல் மகிழ்ச்சி மலரும். அதற்கு முதற்காரணம் நகைச்சுவை.

இப்போது அந்த முதல் கேள்விக்கு வருவோம்.
ஒரே சாவி கொண்டு ஒரே நேரத்தில் மூடி இருக்கிற இரண்டு கதவுகளைத் திறக்க முடியுமா?
முடியும். அப்படிச் சில சாவிகள் இங்கே உண்டு. அவை பாட்டு, புன்னகை மற்றும் நகைச்சுவை. இந்தச் சாவிகளில் ஒன்றை உபயோகித்தால், ‘தருபவர், பெறுபவர்’ என்ற இரண்டு இதயக்கதவுகளையுமே ஒரே நேரத்தில் திறக்க முடியுமே!
இங்கே 'புன்னகைப் பக்கம்' என்ற தலைப்பில் பல இதயக்கதவுகளை திறக்கிறார், புத்தகத்தை திறந்ததும்.

இரசிகமணி டி.கே.சி., பாரதியார், கண்ணதாசன், வாரியார் இவர்கள்
அவரவர் துறைகளில் சிறந்து அதன்மூலம் நமது மனதை வென்றவர்கள்.
இவர்களை, இவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நகைச்சுவை என்ற நூல் எடுத்து நூலில் இணைத்து வைத்திருக்கிறார். இது வித்தியாச கோணம்.

'நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' என்றார் மகாத்மா. இந்த மேதைகளின் வாழ்விலும் இந்தச் சிந்தனை எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது. நகைச்சுவை தாண்டிய வாழ்க்கை பாடமாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பல உதாரணங்களை ஆசிரியர் தருகிறார். ஒரு உதாரண உதாரணம் -
பேராசிரியர் கல்கி ஒருமுறை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இல்லத்திற்கு செல்கிறார். 'என்ன சாப்பிடுகிறீர்கள்? காபியா? டீயா?' என என்.எஸ்.கே உபசரிக்க, 'டி. ஏ. மதுரம்' என்கிறார் கல்கி. ‘டி’ [Tea]
மதுரம் அதாவது இன்பம், ஆனந்தம் என்ற பொருள் வருகிறது. அதோடு அந்த 'டி’யை கொண்டு வர இருக்கிற என்.எஸ்.கே அவர்களின் மனைவியின் பெயர் 'டி. ஏ. மதுரம்’! [பக்: 23].

இப்படி முதல் சுவையிலேயே நமது மனதை திறந்துவிடுகிறார் நூலாசிரியர். அதோடு பிறர் வாழ்வில் நடந்தவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவையையும் பகிர்ந்திருப்பது சுவாரசியம்.

‘இடுக்கண் வருங்கால் நகுக..’ பற்றி தாம் வகுப்பில் பாடம் நடத்தியதைச் சொல்ல வரும் ஆசிரியர் மறுநாள் வகுப்பிற்குள் நுழையும் போது மாணவர் ஒருவர் அதையே சொல்லி அவரை சிரித்து வரவேற்றதை சொல்வது சிரிப்பில் தோய்ந்த சிறப்பு. அது இவரது நகைச்சுவை உணர்வையும் காட்டுகிறது; கூடவே தன்னம்பிக்கையையும் சொல்கிறது.


மகிழ்ச்சி, மனதின் அறிவியல்
____________________________

‘ஒரு மனிதனின் மகிழ்ச்சி மற்றொரு மனிதனின் சோகம்’ என்ற ஆங்கில பொன்மொழிக்கேற்ப மனதிற்கு மனம் மகிழ்ச்சி மாறும். அதை அந்தந்த மனிதன் திட்டமிட்டு, பரிட்சித்து, காலவரையிட்ட செயல்பாடுகள் மூலம் வசப்படுத்துவதே மனதின் அறிவியல். மகிழ்ச்சி மந்திரம். இதை எளிமையாக, இரசிக்கும்படியாக மகிழ்ச்சிப் பக்கம், உள்ளோள்ளிப் பக்கம் என்ற வகைகளில் வகுத்துப் பேசுகிறார் பேராசிரியர். ‘இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்தல்’ என்ற கட்டுரையில் மகிழ்சியாய் வாழ்வதற்கான நான்கு வழிமுறைகளையும் அருமையாகச் சொல்கிறார் [பக்: 88].

‘அறிவைக் கூட முயன்று பெற்றுவிடலாம்; ஒருவன் நேர்மையானவனாக, பண்புள்ள மனிதனாக வாழ்வது தான் மிக முக்கியம்’ என்று நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானி சர். சி.வி. இராமன் அவர்கள் கூறியது வாழ்க்கையின் நங்கூரக் கூற்று. அவரது அறிவியல் கண்டுபிடிப்பு போல இது அவரது அரிஇயல்புக் கண்டுபிடிப்பு!
இதை அழகாக ஆசிரியர் எடுத்தாண்டிருக்கிறார் மகிழ்ச்சிப் பக்கத்தில்.

ஆரம்பத்தில் சொன்ன லியோ தால்ஸ்தாயைப் போல, அன்னை தெரசாவைப் போல மகிழ்ச்சியின் கூறுகளை பட்டினத்தாரின் மூலமாக ஆசிரியர் அலசுகிறார்.
ஆண்டியின் முன் அரசன் நின்று 'ஆண்டியாகி என்ன சாதித்தாய்' என்று கேட்க பட்டினத்தார் 'நீர் நிற்க, யாம் இருக்க!'[பக்:105] என்று பதிலளித்தாராம். இதைப் போல இந்த நூலில் பல அரிய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. வாழ்க்கை தன் மீது எரியும் எதையுமே மகிழ்ச்சித் தென்றலாக உள்வாங்கிக் கொள்ளும் அசாத்திய மனஎழில் கொண்ட பூர்ணகாஷ்யபா என்ற புத்தரின் சீடரைப் பற்றி சொல்லும் போதும் [பக்: 73], தத்துவராயர் தனது குருநாதரான ஞானி சொரூபானந்தரின் மீது போர்வீரனுக்கான பரணிப் பிரபந்தத்தை ஏன் பாடினார் என்பதை விளக்கும் போதும் [பக்:107] ஆசிரியர் மகிழ்ச்சிப் பேராசிரியர் ஆகி விடுகிறார்.

‘வீரம் என்பது பிறரை வெல்வது அல்ல; தன்னையே வெல்வது தான். அலெக்சாந்தரை விட புத்தரே மகாவீரர்’ என்று சொல்கிறவர் 'மனம் இருப்பவரே பணக்காரர்' என்ற கட்டுரையில் மனதில் அழுத்த பதிவுகள் ஏற்படுத்தி விடுகிறார். அமெரிக்க பிலடெல்பியாவின் டெம்பிள் பாப்டிஸ்ட் சர்ச் உருவான கதை உருக்கமான கதை. சிறிய தேவாலயத்தினுள் இடம் இல்லாததால் அனுமதிக்கப்படாத ஏழைச் சிறுமி நோய்வாய்ப்பட்டு இறக்கும் போது 57 சென்ட் நாணயங்களை விட்டுச் சென்றாளாம். எதற்குத் தெரியுமா? தன்னைப் போன்ற ஏழைச் சிறுமிகள் பலர் பயன்படுத்த வசதியாக அந்தச் சிறிய சர்ச்சை பெரிதாகக் கட்டுவதற்காக. இந்த உருக்கமான செய்தியை அறிந்து பலர் உதவ, 3300 பேர் அமருமளவு பிரமாண்டமாய் வளர்ந்தது அந்தச் சர்ச் [பக்: 121].

இன்று பாரத தேசம் உட்பட உலகம் முழுக்க ‘stress’ என்கிற வார்த்தை விருப்பச்சொல் ஆகிவிட்டது. ‘அம்மா’வை விட அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை இதுதான். கொடுத்தல்-பெறுதல் என்ற வாழ்க்கைக் கணிதத்தில் பெறுதல் மட்டுமே குறிக்கோளாகி விட்டதனால் விளைந்த அவலமே இது. இதில் நல்ல அழுத்தம் [Good stress] நல்லது என்று வேறு சிலர் சொல்கிறார்கள் - கறை நல்லது என்பது போல. எந்த அழுத்தமும் நல்லதாக இருக்க முடியாது; அழுத்தத்தை கையாளும் திறனே நல்லது. அழுத்தமே வராமல் வாழத் தெரிந்தால் அது சாலச் சிறந்தது.
ஆக, போட்டி உலகில் மாட்டிக் கொண்டு விழிப்பவர்களுக்கு இந்த நூலின் மூலமாக அற்புதமான உதவி ஆற்றி இருக்கிறார் பேராசிரியர்.


செம்மொழித் தமிழே சிம்மப் பெண்ணே!
_____________________________________

இந்த நூலில் இருக்கும் பல்வகை சுவைகளில் மிகச் சிறப்பானதாகத் தோன்றுவது 'செம்மொழிப் பக்கம்' தான். அருமையான இலக்கியச் செறிவு மிகுந்ததாய், தமிழ் மணம் கமழ்வதாய் இருக்கின்றது.

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்; கிள்ளிவளவன் - பண்ணன் எனச் செந்தமிழ் நட்புகளை, சீலம் நிறை சீரிய பண்புகளை இலக்கிய நயத்தோடு ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தந்திருக்கிறார் பேராசிரியர்.

சோழன் கிள்ளிவளவன் பெருந்தலைவனான போதும் சிறிய தலைவனான பண்ணனை நட்பின் சிறப்பால், சிறந்த நட்பால் போற்றி பாடி இருப்பதை சுவைபட கூறுகிறார்.

‘யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;’ என்ற புறநானூற்றுப் பாடலை விளக்கி நம்மை கிள்ளிவளவன் அருகே அமரச் செய்து சிறுகதை சொல்வது போல் இந்தப் பெருங்கதை சொல்கிறார் [பக்: 131].

சங்க கால பெண் புலவர்கள் வெள்ளிவீதியார், அஞ்சி அத்தை மகள் நாகையார், பொன்முடியார் பற்றிய குறிப்புகள் சுவாரசியமானவை.
‘காலே பரிதப் பினவே..’ என்ற சாகாவரம் பெற்ற வெள்ளிவீதியார் பாடலைச் சொல்லி அதன் நயங்களை மிக அருமையாக எடுத்தியம்புகிறார் [பக்: 145].

நூலின் இந்தப் பகுதி ஒரு நல்ல தமிழ் வகுப்பில் சென்று அமர்ந்த உணர்வைத் தருகின்றது.


க(ளி)விதைப் பக்கம்
___________________

சங்கப் பாடலின் நயங்களில் தொடங்கி இன்றைய தமிழ்க் கவிதையின் நவீன உத்திகளையும், வளர்ச்சியையும் ‘கவிதைப் பக்கத்தில்’ பேசி இருப்பது இந்த நூலின் மற்றொரு முக்கிய சிறப்பு. மூத்த கவிஞர், இளைய கவிஞர் என்ற பாகுபாடு விடுத்து கவிதைத் தரத்தை, தளத்தை அலசி இருப்பது பாராட்டுக்குரியது.

கவிஞர் யூசுப் ராவுத்தர் ரஜித் கவிதைகள் மற்றும் கவிஞர் மீனாட்சி கவிதைகள் போன்றவற்றில் புதுக்கவிதையின் நுணுக்கங்கள் பலவற்றை அருமையாக அணுகி இருக்கிறார்.
‘ஆணுக்குள் பெண்மை; பெண்ணுக்குள் ஆண்மை’ என்று சொல்லி கவிஞர் இரா. மீனாட்சி அவர்களின் 'பெண்மொழி' பற்றிய கருத்தை சிலாகித்திருப்பது சிறப்பு.

ரஜித்தின்,

தெய்வத்தைப் / பிரித்தது மானுடம்
மானுடத்தைப் பிரிக்கவில்லை தெய்வம்

போன்ற கூர்கவிதை கூறுகளை கூறி இருப்பது கூறத்தக்கது [பக்: 166].

படிமம் என்பது சொற்சித்திரம். 'சொல் கேட்பார்க்குப் பொருள் கண் கூடு ஆவது' என்பதைச் சொல்லி படிம அழகினை எழிலுற அலசுகிறார் கவிஞர் ஆர்.எஸ். மூர்த்தியின் பின்வரும் இனிய கவிதையின் மூலமாக;

இருட்டை பிழிந்து
எடுத்து வைத்ததைப் போல
படுத்திருந்தது ஆட்டுக்குட்டி
பாதை ஓரம்
காலை நேரம்
[பக்: 190]

இருட்டைப் பிழிந்தது கறுப்பு ஆட்டுக்குட்டி ஆனது என்பது வரை உவமையாக இருக்கும் உத்தி, பிழிந்ததை எடுத்து வைத்தநிலை படுத்திருந்த நிலை போல இருந்தது எனச் சொல்லும் இடத்தில் மிக அழகான படிமம் ஆகின்றது இந்தக் கவிதையில்.

அறுபது ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி, இருமுறை சாகித்யா அகாதெமி விருது பெற்ற பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி அவர்கள். அவரது பரிசு வென்ற 'ஒரு கிராமத்து நதி' நூலில் இருந்து அம்மாவைப் பற்றி இப்படி தொடங்கும் இந்த அற்புதமான கவிதை வரிகளை பதிவு செய்திருப்பதும் சிறப்பு;

அழித்து எழுத முடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா
... [பக்: 197]


இதைப்போல தாயுள்ளம் பற்றிய அருமையான சில ஹைக்கூகளையும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அவற்றில் மு. முருகேஷின் பின்வரும் அழகிய ஹைக்கூவை குறிப்பிட்டுச் சொல்லலாம்;

'அடுப்புப் புகை
கரித்துணிக் கவிதை
அம்மா' [பக்: 200]



நவில் தொறும் முகநூல் நயம்
_____________________________

சங்க காலம் கடந்து, நவீன இலக்கியம் வழி நடைபயின்று பின்
நவில் தொறும் முகநூல் நயமும் நாடி விரையவும் செய்கிறார் ‘அக்கம் பக்கம்’ என்ற பகுதியில். இப்படி முகநூல் தமிழைச் சொல்லி முடிப்பது தற்கால தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறது.

பேராசிரியர் மோகன் அவர்கள் மு. வ. வின் செல்லப் பிள்ளை என்று போற்றப் படுகிறவர். கல்வித்துறையில் பல நிலைகளில் பணியாற்றியவர். பல இலக்கிய ஆளுமைகளை சிலாகிக்கும் விரிமனம் கொண்ட தமிழ்க் காதலர். பல விருதுகளை வென்றவர். இன்னும் புதியன தேடித் தேடி இயங்கும் வளமான சிந்தனைக்காரர். இன்னும் முதல் நூல் எழுதும் மனப்பான்மையோடு விளங்கும் இவர் இதுவரை 110 நூல்கள் எழுதி சாதனை புரிந்திருக்கிறார் என அறியும் போது வியப்பாக இருக்கிறது.
இத்தனை நூல்கள் எழுதிக் கடந்தும் இன்னும் நீர்த்துப் போகாமல் இப்படி ஒரு நல்ல நூலைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது.

காரணம் இன்றி காரியமில்லை என்பார்கள். அதைத் தவறு என எண்ணச் செய்யும் காரியங்கள் சில உலக அரங்கில் அரங்கேறுவதுண்டு.
காரணம் இன்றி விமானங்கள் கடத்தப்படுவதும், அழிக்கப்படுவதும்; காரணம் தேவைப்படாமல் பொதுமக்கள் கொல்லப்படுவதும்; காரணமே இல்லாமல் பல அழிவுகள் நிகழ்வதையும் பார்க்கிறோம்.

சிந்தனைகளே செயல்கள் ஆகின்றன. இந்த எதிர்மறை சிந்தனைகளுக்கு இடையே வரவேற்கப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான, அழுத்தமான படைப்பு இது. பல சான்றான்மைகளை, ஆளுமைகளை ஒருசேர அழைத்து வந்திருக்கும் படை இது. நல்ல சிந்தனைகளை சமூகத்தில் வளரச் செய்யும் சக்தி படைத்தது.

முதல் முறை படிக்கும் சுவாரசியம், பலமுறை படிக்க வேண்டிய பயன்பாட்டுத் தகுதி - இவை இரண்டுமே கொண்ட நூல் இது.

மொத்தத்தில் ‘மகிழ்ச்சி மந்திரம்’ - ஒரு நூலுக்குள் ஒரு நூறு நூல்கள்!

எழுதியவர் : புதுயுகன் (17-Aug-14, 6:53 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 301

மேலே