மாத்தியோசி - Mano Red

துஷ்ட சக்திகள்
வருவது
நாய்களுக்கு தெரியுமாம்,
சொந்தக்காரர்கள்
வரும்போதும்
போகும்போதும்
நன்றாகவே குரைக்கிறது..!!

மரங்கள் பற்றியும்
மழை பற்றியும்
பேச,எழுத நேரமிருக்கும்
நமக்குத் தான்,
நடுவதற்கும்
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை...!!

இறைவன் நல்லவன்,
எத்தனை வருடங்கள்
கழிந்தாலும்,
பிச்சைக்காரிகளின்
கையில் இருக்கும் குழந்தையை
கைக்குழந்தையாகவே
வைத்திருக்கிறான்...!!

செத்துப்போன
பட்டாம்பூச்சியை
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை,
விருந்தை சுவைக்க போகும்
கர்வமும் இருப்பதில்லை...!!

மது,புகை எல்லாம்
தீங்கு என்பதை
நமக்கு உணர்த்த,
சிறந்த முன்மாதிரி
யாராவது நம்மில்
செத்துப் போக
வேண்டியிருக்கிறது...!!

அழகான பெண்களை விட
அழகா ...?
அழகில்லையா..??
என்று கணிக்க முடியாத
பெண்கள் தான்
அதிக நாள்
நினைவில் இருக்கிறார்கள்..!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Aug-14, 8:36 am)
பார்வை : 204

மேலே