அறியாத வயசு பள்ளிக்கூடம்

கோனார் தமிழ் உரை தவிர்த்து
நோட்டில் எழுதி படித்து மனப்பாடமாகிய
திருக்குறள் முதல் திருமறைக்காடுடன்
இன்னிசையளபடையான தமிழ் வகுப்பு

கேள்வித் தாளில் பொறுக்கி எடுத்து
விடையுமளித்து மதிப்பெண்ணும் பெற்று
பாஸாகி ஆனந்தமாய் ஆகிப்போன
அர்த்தமறியாத ஆங்கில வகுப்பு

எளிய பித்தாகரசு தேற்றம்
கடினமான இயற் கணிதம் (அல்ஜிப்ரா)
முக்கயத்துவம் வாய்ந்த முக்கோணவியல்
என்று கடந்த கணித வகுப்புகள்

புரியாமல் படித்த வெர்னியர் அளவுகோல்
புரிந்து படித்த மனித உடலியல்
குழப்பத்தில் தவிர்த்த மீத்தேன் ஈத்தேன்
ஆரவாரமான அறிவியல் வகுப்பு

ஹாரப்பா நாகரிக வறலாறு தொடங்கி
குடிமையியல் வழியாக சென்று
புது டெல்லியை மட்டும் சரியாக
குறித்த புவியியல் வரைபடங்கள்

மைத்தடவி நூல் அச்சு இழுத்து
வெட்டிய வெண்டைக்காய் அச்சு பதித்து
வண்ணங்களாய் ஓவியம் வரைந்த
வாழ்க்கை கல்வி புத்தகம்

'நன்று' 'மிக நன்று' என்று
சிவப்பு மையினால் எழுதப்பட்டு
வகுப்பு ஆசிரியர் முகம் பார்த்து தந்த
வண்ண தரச்சான்றிதழ்கள் (ரேன்ங் கார்டு)

முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு
முழு மூச்சை இழுத்துவிட்டு
முழுமையாய் மகிழ்ந்து போன
உண்மையான நெகிழ்ச்சிகள் – இன்றுவரை

எழுதியவர் : பிரியா பாரதி - தூத்துக்குட (27-Aug-14, 10:39 am)
பார்வை : 233

மேலே