அகதிகளானோம்

அந்தரங்க நிலையில்
அவதிப்படுகிறது எனதுள்ளம்
அல்லல் நிறைந்த இவ்வாழ்வில்
அமைதிக்கு இல்லை இடம்...

ஆழியில் விழுந்த
ஆலமரமாய் தவிக்கிறேன்
ஆறுதல் பூட்டுடைக்க திறக்காதோ
ஆலயக்கதவுகள்....

இமை மூடவும் அஞ்சுகிறேன்
இடி வந்து விழுந்து விடுமோ என்றல்ல
இன்னல் வந்து நின்று
இடம் கேட்குமோ என்று ...

ஈவாரும் இல்லை - பிறருக்கு
ஈய என்னிடமும் எ துவுமில்லை
ஈசனும் இங்கு வந்தால் அவனுக்கும்
ஈசலின் வாழ்க்கைதான் ....

உறக்கமின்றி தவிக்கும்
உள்ளத்திற்கு இங்கு
உறுதுணையை நில்லாமல்
உதறிவிடுகின்றன சில மனங்கள் ...

எத்தனை துன்பங்கள்
எத்தனை துயரங்கள்
எண்ணியதில்லை இத்தனையும்
என் வாழ்வில் நடக்குமென்று ....

ஏக்கங்கள் எல்லாம்
ஏலத்தில் விடப்பட்டது போல
ஏழை விட்டிலமர்ந்து
ஏளனமாய் சிரிக்கின்றன ....

ஒன்றரை வருடமாய் நான் வளர்த்த
ஓராயிரம் கனவுகளெல்லாம்
ஒரு நொடியில் மழையில்
நனைந்த கோலமாகிவிட்டன....

எத்தனை போர்கள்
எத்தனை யுத்தங்கள்
நினைக்கையில் ஒரு நிமிடம்
மேனி கூட ஆட்டம் காண்கின்றது.....

பிஞ்சு நெஞ்சங்களை
அநாதையாய் தவிக்க விட்டு
எத்தனை தாயுள்ளங்கள்
தனிமையில் தவமிருக்க சென்றன ...?

நாளை வருவான் என் பிள்ளை
என்று எத்தனை
பெற்றோர் உள்ளங்கள்
கதிகலங்கி நின்றன...?

நானும் என் பெற்றோரை இழந்து
எண்ணற்ற துன்பங்களில் மிதந்து
எல்லையில்லா சுமைகளை சுமந்து
எடுத்த பிறவிக்காய் அழுகின்றேன்.....

பல கஷ்டத்தால் நித்தம் என் மனம்
நிலைக்குழைந்தாலும் நினைக்கையில்
என் குடும்ப வாழ்க்கை மாத்திரம்
நிம்மதியை தருகிறது....

கம்பனும் எழுதினான்
கம்பதாசனும் எழுதினான்
பாரதியும் எழுதினான்
பாரதிதாசனும் எழுதினான்
மாறவில்லை மனிதனின் மனம்
குவிகின்றது மனிதப்பிணம்...

எங்களது வாழ்க்கையை
படைத்தவனும் வேடிக்கை பார்க்கிறான்
படித்தவனும் வேடிக்கை பார்க்கிறான்

போர்த்த போர்வை இல்லாமல்
உடுத்த உடை இல்லாமல்
உண்டு மகிழ உணவில்லாமல்
கொஞ்சிப்பேச உறவுகளில்லாமல்
என் போல தனிமையில்
தத்தளிப்பவர்கள் எத்தனையோ பேர்

இருட் பொழுதில்
நான்கு சுவர்களுக்கு மத்தியில்
நான் மட்டும் புலம்புகிறேன்
என நினைத்தேன்
இல்லை என்னைப்போல்
பல ஜீவன்களும்
கண்ணீர் மழையுடன் புலம்புகின்றன .....

நாங்களும் ரோஜாக்களும்
ஒருவகைதான் ....
அவற்றின் வாழ்க்கை முள்ளுக்குள்
எங்களின் வாழ்க்கை முட்கம்பிக்குள்
என்ன ஒரேயொரு வித்தியாசம்
அவை சிரித்த ரோஜாக்கள் ....
நாங்கள் அழுத அகதிகள் ....

எழுதியவர் : ம.கலையரசி (28-Aug-14, 1:23 pm)
பார்வை : 65

மேலே