கூட்டல் கழித்தல் பெருக்கல் - மாணவர்களுக்கு அறிவுரைக் கவிதை - போட்டிக் கவிதை

பண்ணமுதத் தமிழ் வணங்கிப்
..... பாக்கள் நெய்வோம்
எண்ணமதில் இறை வணங்கி
..... ஏற்றம் சேர்ப்போம்
நல்லறங்கள் வகுப் பறையில்
..... நாளும் ஈயும்
நல்லவராம் குரு வணங்கி
..... நாங்கள் உய்வோம் !

கல்விதனில் மனம் விதைப்போம்
..... கைகள் கோர்ப்போம்,
வள்ளுவனார் வகுத் தளித்த‌
..... வாழ்க்கை ஏற்போம்,
மண்வளர்க்கும் கனி இலைகள்
..... மட்டும் உண்போம்,
கொண்டுமீந்தும் கொடை வளர்த்து
..... கூடிக் கொள்வோம் !

குற்றமதாம் புற முரைத்தல்,
..... கூடார் சேர்க்கை,
பித்துவினை நெருப் புறவாம்
..... பேரா சைகள்,
ஆத்திரமும், பொய், வெறுப்பும்
..... ஆட்டும் நோய்கள்
அத்தனையும் உடன் கழித்து
..... அன்பால் வெல்வோம் !

அற்புதமாய் மனி தவளம்
..... ஆராய், ஊற்றாய்,
நற்சுனையாய் நிதம் பெருக்கி
..... நாணல் வேராய்
வல்லபுகழ் தர வுழைத்து
..... வாட்டம் தீர்த்து
நல்லரசாய் நம துடைமை
..... நாட்டைக் காப்போம் !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (30-Aug-14, 5:22 pm)
பார்வை : 102

மேலே