அப்பாயணம்- 3 க்ரைம் தொடர்

பாகம் 3
முன் கதைச் சுருக்கம்

நான்- சௌதாமினி. அப்பாவை வெறுப்பவள். தீவிர மஞ்சட்காமாலை வந்தால் இரண்டே வாரத்தில் மரணம் நேரிடலாம் என்று கான்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜான் லீவர்ட் சொல்லியிருந்தார்.

வீறிட்டு அலறினேன்! பாட்டி ஓடி வந்தாள். பாட்டியின் வெள்ளைப் புடவையை பற்றினேன். ‘‘என்னாச்சு என்னாச்சு சௌதாமினி? ’’ பாட்டி பதறினாள். நான் நிலை குத்தி நின்றேன். மெதுவாக கைகளை எடுத்து விட்டு புடவையை பார்த்தேன். திட்டு திட்டாக மஞ்சள் நிறம். ‘‘பாட்டி நான் சாகப்போறேன்; சீக்கிரமே சாகப்போறேன்; கொஞ்ச நாள்ல வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். அவ்வளவுதான்... அவ்வளவுதான்.’’ திமிறி திமிறி கதறினேன். வயதான பாட்டியால் என்னை சமாளிக்க முடிய வில்லை.

‘‘அது வெறும் மஞ்சகாமாலை, சௌதாமினி, கீழாநெல்லி கசாயம் குடிச்சா சரியாயிடும்.’’

‘‘டாக்டர் புட்டு புட்டு வச்சிட்டார் பாட்டி, நான் போற கேசு.’’

‘‘இத பார் சௌதாமினி, எங்கம்மா அல்பாயுசுல போனா. அவ ஆயுசை சேத்து வச்சு நான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்கம்மாவும் பாதி வயசுல போயிட்டா. அவ ஆயுளை எடுத்துகிட்டு நீ நல்லா இருப்பே மோளே.’’

நான் பாட்டி மடியில் சரிந்தேன். என் கண்கள், நாடி என்று என்னவோ பரிசோதித்த பாட்டி என்னை நிமிர்த்தினார். ‘‘இப்ப நீ என்ன பண்ணிட்டுருந்த? ’’

‘‘படிச்சிட்டிருந்தேன். ’’

‘‘அதையே செய்.’’

‘‘நான் படிச்சு என்ன பண்ண போறேன்?’’

‘‘படிக்காம என்ன பண்ண போறே? சாவு எல்லாருக்கும் தான் வரும். அது வரைக்கும் ஏதாவது செய்யணுமில்ல? உனக்கு நாள் குறிச்ச டாக்டரே மறு நாள் செத்துட்டதா சொல்ற. உன்னால முடிஞ்சா படி, இல்ல கண்ணை மூடி தூங்கு. சாவு கடவுள் சித்தம். கடவுள் ஜோலிய நாம பாக்க கூடாது. உங்க அச்சனை வரச் சொல்றேன். உம்மேல உயிரையே வச்சிருக்கார். அவர் கிட்ட அன்பா நடந்துக்க சௌதாமினி’’

‘‘அந்த ஆள் வந்தா இப்பவே செத்துடுவேன்’’ என்று சொல்ல நினைத்தேன். தலை தட்டாமாலை சுற்றியது. வீழும் தறுவாயில் வீறாப்பு எதற்கு? அது மட்டுமல்ல; நான் வா என்றவுடனே அவர் வந்து விடுவாரா? எந்த ஊரில், என்ன மீட்டிங், எவ்வளவு பணம்- நேரம் கிடைத்து விடுமா? அப்படியே கிடைத்தாலும் அருமைப் பெண்டாட்டி விட்டு விடுவாளா?

பாட்டி அப்பாவுக்கு ஃபோன் செய்வது தெரிந்தது. ‘‘இன்னும் பத்து நிமிஷத்தில இங்க வந்துருவீங்களா? சரிங்க மாப்பிள்ளே.’’

அட, இதப் பார்ரா! நோயின் வேகத்திலும் ஆச்சரியப்பட்டேன்.

சரியாக பத்து நிமிஷத்தில் வந்து விட்டார் அப்பா. ‘‘சிண்ட்ரெல்லா ’’ அழைத்துக் கொண்டே பதறி ஓடி வந்தார். அவர் கிட்ட கிட்ட வர நான் எட்ட எட்ட நடந்தேன். நாலாவது அடியில் பாலன்ஸ் தவறியது. கடலலை இழுத்தாற் போன்ற உணர்வு. அப்பாவின் தோளில் புதையுண்டேன். கதகதப்போடு மெல்லிய வாசம்- லெமனா, ஸ்ட்ராபெர்ரியா?

அப்படியே வாந்தி எடுத்தேன். அப்பா மில்லி மீட்டர் விலகவில்லை!

படுக்கையில் சரிந்தபோது டாக்டர் ஜெகதீஷ் உள்ளே வந்தார். சில கேள்விகள் கேட்டார். அப்பா உடனிருந்தார். டாக்டர் ஜான் லீவர்ட் பேர் சொன்னேன். கல்லீரல் புற்று நோய் என்றேன். காப்சூல்களை காட்டினேன். என்னை பரிசோதித்து விட்டு சில டெஸ்டுகளை செய்தார்.

தீவிர மஞ்சட்காமாலை இருப்பது நிஜம்தான். ஆனால் கல்லீரல் இன்னும் செயலிழக்கவில்லை. என் போன்ற நோயாளிகளுக்குத் தேவை வலியில்லாத நிலையும் மனதிற்கு இதம் தரும் சூழலும்தான். நான் விரும்பினால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாம், இல்லை வீட்டிலேயே சிகிச்சையை தொடரலாம் என்றார். எனக்கு ஆஸ்பத்திரி போக இஷ்டமில்லை. தூக்க மாத்திரை போட்டு தூங்கவும் பிடிக்கவில்லை. ஒரு குளுகோஸ் ட்ரிப் போட்டுக்கொள்ள சம்மதித்தேன்.

டாக்டர் போனதும் அப்பா கோட் சூட் கழற்றி சாதாரண வேட்டி துண்டு அணிந்தார். பக்கத்தில் அமர்ந்தார்.

‘‘டாக்டர் ஜான் லீவர்ட் கொடுத்த ரிப்போர்ட் ஏதும் உன் கிட்ட இருக்கா, சௌதாமினி? ’’ அப்பா கேட்டார்.

‘‘இல்லியேப்பா’’

‘‘அவர் ஹாஸ்பிடல்ல விசாரிச்சேன். ஓபி ரெஜிஸ்டெர்ல உன் பேர் இருக்கு. வேற உன்னை பத்தின எந்த தகவலும் இல்ல.’’

‘‘மிஸ் பண்ணியிருப்பாங்க. ஏன்னா நாந்தான் அவருக்கு கடைசி கேஸ். ரெஃபரென்ஸ் வேணுமின்னா ஃப்ரெஷ்ஷா டெஸ்ட் பண்ணிக்கணும். டெத் சர்டிபிகேட் வாங்க ரெஃபரென்ஸ் வேணும்பா. ’’

அப்பா என் வாயை பொத்தினார்.

‘‘அப்பா’’ மெதுவாக அழைத்தேன். ‘‘நான் செத்துப் போனா எத்தனை மாசம் கழிச்சு இன்னொரு மகளை கொண்டு வருவீங்க?’’

அப்பாவின் கண்ணீர் என் கண்களில் விழுந்தது. ‘‘இதே கேள்விய நான் கேட்கவா?’’ குரல் உடைந்தது.

‘‘அப்பா செத்துப் போனா எத்தனை மாசம் கழிச்சு இன்னொரு அப்பாவை நீ கொண்டு வருவேம்மா?’’

நான் மௌனமானேன்.

‘‘அப்பாவை பார்த்தா சதைவெறி பிடிச்சு அலையிறவன் மாதிரி தெரியுதாம்மா?’’

அப்பாவே தொடர்ந்தார்.

‘‘உங்கம்மா உயிரோட இருந்தப்ப நான் அவளுக்கு துரோகம் செய்யலியே. அன்னியோன்னியமா இருந்தோமே. இரண்டு பாகம் மாதிரி இருந்தோம். அவ போனதுல நான் பாதி செத்துட்டேன். உனக்கு வந்த லிவர் கான்சர் எனக்கு வரக்கூடாதா?’’

அப்பா உடைந்து நொறுங்கினார்.

‘‘நீ மாதங்கியோட வயசைத்தான் பார்த்தே; மாதங்கியோட அப்பாவுக்கு அப்பவே அறுபது வயசு. அம்மா அப்பாவி; இவ மூத்தவ. இவளுக்கு கீழே அடுத்தடுத்து நாலு பொண்ணுங்க. மாதங்கி நிலைமைய நினைச்சு பாரு, இருபது வயசுல நாப்பது வயசு குடும்ப பாரம்... அதான் மாதங்கிய செலக்ட் பண்ணேன். கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவானதுக்கப்பறம் சீக்கிரமே பண்ணிக்கிறது நல்லதில்லையா? அவங்க குடும்ப பாரம் சுமக்க ஆள் கிடைக்குது இல்லையா? ’’

இதில் இவ்வளவு விசயம் இருக்கா? நான் மலைத்தேன். அப்பா தொடர்ந்தார்.

‘‘உன்கிட்ட பேச எவ்வளவோ ட்ரை பண்ணேன். முகத்துல முழிக்காதேன்னு சொல்லிட்டு ஹைதராபாத் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிட்ட. லெட்டர் போட்டா திருப்பி அனுப்புன. மானேஜரையும் மாதங்கியையும் விட்டுப் பேசச் சொன்னா தூக்கி எறிஞ்சே.’’

‘‘மாதங்கி உங்கள... உங்கள ட்ரை... ’’ அதற்கு மேல் பேசக் கூசினேன்.

அப்பா புரிந்து கொண்டார்.

‘‘உங்கம்மா இருந்தப்பவே நிறைய தூண்டில், வலையெல்லாம் பார்த்தாச்சு. அதையே சட்டை பண்ணலே. மாதங்கி அவ அப்பா கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னு சொன்னா. தொடங்கி வச்சது அவதான். அதத்தான் அப்படி சொல்லியிருக்கா. அவ அப்பா என் ஜாதகம் கேட்டார். ஜாதகம் பொருந்தினதும் கல்யாண பேச்சை ஆரம்பிச்சார். நான் வேணாம்னு சொன்னேன். கால்ல விழுந்து கதறிட்டார். ஒரு பைசா வரதட்சணை வாங்கல. இதுல என் தப்பு என்னம்மா இருக்கு?’’

அதானே, இவர் தப்பு என்ன இருக்கு? நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

‘‘ஏம்மா, தெரியாமதான் கேக்கறேன், மாதங்கிய நல்லவள்னு ஒத்துக்கிட்ட; அப்பா மாத்திரம் எப்படி வில்லனானேன்?’’

லாஜிக்கான கேள்வி! பதில்தான் தெரியவில்லை.

‘‘உனக்கு அப்பா பக்கத்தில வரலையே, இதைச் செய்யலியே அதைச் செய்யலியேங்கிற ஏக்கம்; அந்த ஏக்கம்தான் வெறுப்பா மாறிடுச்சி.’’

அப்பா தனக்குத் தானே பேசிக் கொள்வது போல பேசினார்.

‘‘தப்பு என்னோடது தாம்மா. உன்னை பக்கத்துல இருந்து கவனிச்சிருக்கணும்; செய்யல. கம்பெனி நல்ல நிலைக்கு வந்த பிறகு அந்த பேரை தக்க வைக்க போராட வேண்டியிருந்துச்சு. அம்மா காலமானதுக்கு அப்பறமாவது உன்னை கவனிச்சிருக்கணும்; என் சோகத்தை விட உன் சோகம் பெரிசுன்னு புரிஞ்சிட்டிருக்கணும். அதையும் பண்ணல. உண்மையச் சொல்லவா? உங்கம்மா போனதுக்கப்பறம் உனக்காவது அப்பான்னு ஒருத்தர் இருக்கார், எனக்கு யாருமே இல்லைன்னு நினைச்சுட்டேன். அது தப்புல்ல? புருசன் போனதுக்கப்பறம் பிள்ளைங்க முகத்தை பார்த்து மனசை தேத்திக்கிற அம்மாங்க இருக்காங்க. பெண்டாட்டி போயிட்டா தான் அனாதையாயிட்டதா நினைச்சு முட்டாள்தனம் பண்ற என்னை மாதிரி ஆட்களும் இருக்காங்க. ஸாரிம்மா சிண்ட்ரல்லா, என்னை மன்னிச்சிரு.’’

ஆக, அப்பாவின் மனதில் அம்மாவுக்கான நிரந்தர இடத்தை யாராலும் பறிக்க முடியவில்லை, என்னாலும்தான்!

முதன் முதலாக அப்பாவை பாசமாகப் பார்த்தேன்.

அப்பா உடல் குலுங்க அழுது கொண்டிருந்தார். நான் ஆறுதல் சொல்ல முயற்சித்தேன்- எழுந்து உட்கார்ந்தவுடன் பாதாளத்தில் வீழ்வது மாதிரி சரிய அப்பா நெஞ்சில் சாய்த்துக் கொண்டார். அப்பாதான் என்றாலும்... முதலில் விலகினேன். உடம்பு நடுங்கி கை கால்கள் சில்லிட்டன. என் கைகள் தன்னிச்சையாக மூக்கை தொட்டுப் பார்த்தன, ரத்த பிசுபிசுப்பு தென்படுகிறதா என்று. இதோ இப்போது வந்து விடும் என்ற நினைப்பில் பயமும் நிராசையும் அலைக்கழிக்க அப்பாவை இறுகப் பிடித்து அப்படியே நெஞ்சோடு ஒட்டினேன். பாட்டி எங்கள் அறைப் பக்கம் தலை காட்டவில்லை.

இரண்டு மணி நேரம் கழிந்தது. உடல் நிலை மோசமாகுமென்று நினைத்திருந்தேன். மனதின் வலி நீங்கியதாலோ என்னவோ உபாதை நீங்கியிருந்தது. நானாக சென்று மெத்தையில் படுத்தேன்.

அப்பா ட்ரிப் போட்ட என் கையை தடவிக் கொண்டிருந்தவர், திடீரென்று சொன்னார், ‘‘மாதுளை வாசம், பேப்ரிக் கன்டிஷனர்.’’

‘‘எ..என்னப்பா?’’ புரியாமல் கேட்டேன்.

‘‘தோள்ள சாஞ்ச போது என்ன வாசம்னு யோசிச்சே இல்லே, அதான் சொன்னேன், ’’ ஓரப் பார்வையில் எங்கோ பார்த்தபடி அப்பா. நான் சிரித்தேன். அப்பா சிறந்த நிர்வாகி என்பது தெரியும்; வேறு என்னென்னவோ தெரிந்தவர் என்பது தெரியாதே. அப்படியே தூங்கிப் போனேன்.

தொடரும்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (13-Sep-14, 11:35 am)
பார்வை : 143

மேலே