தாகம்

தாகம் ...........!

எந்தக்
குறியீடாகவும்
படிமமாகவுமில்லாத
வெறும்
ஹைட்ரஜனும்
ஆக்சிஜனும்
சேர்ந்துருவான
நீர்ச்சேர்மத்திற்கான
பச்சை தாகம் !

வாயிலிருந்து
தொடங்கி
உணவுக்குழாய்
நெடுகிலுமான
மகா புழுக்கமாய்
தகித்துக்கொண்டிருக்கிறது
அது !

நீர் கொள்வதற்கான
வாய்ப்புகளனைத்தும்
நழுவிக்கொண்டேயிருக்கின்றன
பேருந்து ஜன்னல்வழி
நழுவும்
காட்சிகள் போல !

வெறும் வாய்
காற்றைக் குடிக்க .........
முடிவிலாப் பாலையாக
நீண்டு கொண்டேயிருக்கிறது
சாலை !

புகைந்து கருகிய
ஏதோவொன்றை
நுகர்ந்து பார்த்ததில்
உயிரின் வாடை !

மெல்லிய
தங்கச்சங்கிலி மினுங்கும்
ஓர் இளம்பெண்ணின்
வெதுவெதுப்பான
இரத்தம் பாயும்
பின்னங்கழுத்தைப்
பார்வை
வெறிக்கும் முன்............

மெல்ல
வேகமிழந்து
மோட்டலில் நிற்கிறது
பேருந்து !

=======================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (17-Sep-14, 8:27 pm)
Tanglish : thaagam
பார்வை : 86

மேலே