மழை காதலிக்கு சமர்ப்பணம்

என் வாசலில் நீ வந்ததால் புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது....
இதயங்கள் நழுவுது இதில் என்ன மாயம்..."

போ...... இதற்கு மேல் என்னால் இந்த பாடலை கேட்க முடியவில்லை...
எனைச் சுற்றி எரியும் மழை வாசத்தில் சூரியனாய் சுட்டுக் கொண்டே இருக்கிறது உனது தூரம்....சருகுகளின் தோட்டத்தில் இலை தேடும் பின்னிரவாய் எனது காதல்.... விசும்புகிறது.....என்ன சொல்லி தீர்வது நான்.... அல்லது என்ன சொல்லாமல் தீர்வது... சொல்லுவதும் சொல்லியதும் சொல்லாமல் கொல்லும் உன் மௌனத்தில் ரயிலின் தடம் புரளல் என் தண்டுவடத்தில்......

இயலாமை..... கோபமாய்..... கோபம்.... தாபமாய்..... தாபம்..... வேகமாய்... வேகம்... மீண்டும் உன் மீது கோபமாய் .. கோபம் மீண்டும் இயலாமையாய்.... காலங்களை கடக்க விட்டு நீ விட்டுச் சென்ற இடத்திலேயே நிற்கிறேன்....எப்படி முடிகிறது.... உனக்கான மழைக் காலத்தை வரவேற்க.... எப்படி முடிகிறது.. நமக்கான குடையை கிழித்தெறிய....எப்படி முடிகிறது.... கனவுக்குள் விளையாடும் நம் காதலை பால்வீதிக்குள் நிர்வாணமாய் விரட்டி விட.....

அழத் தெரியும் அளவுக்கு.....பிழை தெரியவில்லை..... என் பிழை கூட நீயாகிப் போவதன் சுருக்கத்தில் தற்கொலை செய்வது என்னமோ என் கவிதை மட்டுமே....தூரங்கள் பழக்கமாகிப் போவதால் தொடுவானங்கள் தொடு திரை ஆகிறது..... மாலை நடையில் மதியம் இழுத்துக் கொண்டு திரியும் பூனையின் மிரட்சிக்கு நானே எலியாகிய சாட்சி.... எளிமையான சாட்சியும் கூட....

எதையும் கடக்கத் துணிந்த கரடு முரடான மூளை கொண்டவன்..... உனைக் கடக்க முடியாத துயர் ஒன்றில் மூலை முடுக்கெல்லாம் ... ஒட்டடை ஆகிறேன்....முள் கிரீடம் அழுத்தும் நொடியில் இன்னும் ஒரு ஆணி அடியுங்கள் என் உடலெங்கும் என்று கதறும் அதே வேளையில் இதயம் கொண்ட உன் உயிரில் என் குருதித் துளிகளை காணிக்கை ஆக்குகிறேன்.....அபத்தங்களின் முற்றுப்புள்ளி என இருந்த காதல் உன்னிடம் சேர்ந்த பிறகு... முத்தங்களின் யுத்தங்களின் சத்தங்கள் ஆனது......

நீ திட்டிய சொற்களை சேகரித்த பின் தான் தெரிந்தது....முட்டிய கண்ணீரின் சூட்டில் உன் பார்வை பறவையாகிறது என்பதை.....

என் கூண்டு உடைக்கும் சாவி உன் புன்னகை.... அல்லது உன் முனங்கல்....

"சுவரிடம் நிற்காதே.. என்று எத்தனை முறை உரைப்பது... பார்.. பழகிய கண்கள் சித்திரம் என்று சொல்கிறது......" -கவிதை வேறா.. என்று நீ கேட்கும் தருணத்தில் சுவர் உடைத்த இடி பிடித்து எனை இல்லாமல் ஆக்க முயற்சிக்க கூடும் என் காதல்........வலியும் வலி சார்ந்த வாழ்க்கையும் என்று நான் நாவல் எழுதினால் நீயே முன்னுரை எழுத வேண்டும்.... முன்னுரையில் நீ எழுதும் உன்னுரையில் நான் என்னுரை மறந்த பின்னுரை ஒன்று நீ சொல்லக் கூடும்..... அதில் நான் என் பின்னாளைய வாழ்வின் துயரத்தை ஆழ் மனதில் எண்ணி எண்ணி பின்னக் கூடும்....

இத்தனை சுலபமாக பெருங்காற்று காட்டாறாய் கடக்க முடியுமா...ஒரு காதலால்....
என் தோணி கரையேறவில்லை..... என் கரை கூட கரையிலில்லை....

எத்தனை மென்மையானதோ அத்தனை வன்மையானது..... இந்த காதல்... இது தேகம் வழியே உள் நுழைந்து ஒவ்வொரு அணுவையும் கசக்கி பிழியும் அந்தகார தீ கிடங்கின் இடைவிடாத தேவ மழை......சாத்திரம் உடைத்த குரல் எனது... உடைந்து அழும் பாத்திரம் அறிந்த சரித்திரம் என் பின்னால்....எதைப் பற்றி கவலைப் படுவாயோ..... அதில் எனைப் பற்றியும் கவலைப் படு.... உனக்காக கவலைப்படும் முட்டாள் தனமான ஆறுதல் வார்த்தையைத் தவிர இந்த காதலால் என்னை நிரூபிக்க முடியவில்லை....

விழி கொண்ட வேகம்.. கண்ணீர்... என் விரல் கொண்ட வேகம்.... இந்த கடிதம்...

நெஞ்சோடு சாய்ந்த இளஞ்சூட்டு மாலையை இன்னும் அணிந்தே கிடக்கிறது நம் இடைவெளி.... உன் ஆசை நீ சொல்ல, என் பாஷை மாறியதே...என் ஆசை தீ தின்ன, உன் ஆசை வாட்டியதே.....சின்னஞ் சிறு வயதில் நமக்கோர் சித்திரம் தோன்றியதே... அந்த சித்திர முகத்திரை கிழித்து முகம் மறைத்தே உதிர வேண்டுமா...கோட்டோவிய இலைகள்....

காதலை சொல்லும் என் காதலில் காதல் மட்டுமே..... கொல்லும் உன் கோபத்திலும் காதல் மட்டுமே.... உன் காதலும் என் காதலும்.... நம் காதலே....

அது தீராது.... மாறாது ........ எப்போதும் சேராது..........

யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று அழுது விட்டாவது போகிறேன்.. போ..........

கவிஜி


*எனது எதிர்க்காற்று நாவலில் வரும் ஒரு பகுதி.... இது ......

எழுதியவர் : கவிஜி (30-Sep-14, 5:46 pm)
பார்வை : 166

மேலே