பெண்ணே விளைவிப்பாய் புதுமைகளை

பெண்ணே விளைவிப்பாய் புதுமைகளை
பாவலர் கருமலைத்தமிழாழன்

குமைகின்ற நெஞ்சத்தில்
குறிக்கோள்கள் இல்லாமல்
சமையலறைப் புகைக்குள்ளே
சாம்பலாகிப் போவதுவோ !

அடுக்கான பட்டத்தின்
அறிவுதனைக் காட்டாமல்
படுக்கையறைப் பதுமையென
பலியாகிப் போவதுவோ !

தலைமையினைத் தாங்குகின்ற
தகுதிதனைப் பேணாமல்
தலைமுறையைப் பெற்றெடுத்துத்
தாதியாகிப் போவதுவோ !

சந்திரனில் கால்வைக்கும்
சாதனைகள் புரியாமல்
எந்திரமாய் வீட்டிற்குள்
எடுபிடியாய்ப் போவதுவோ !

அடிகளிலே அகிலத்தை
அளப்பதற்கு முனையாமல்
படிகளினைத் தாண்டாத
பத்தினியாய்ப் போவதுவோ !

வழியடைக்கும் முட்களைய
வளைகரத்தில் வாளெடுத்தே
விழிகளிலே கனலேற்றி
விளைவிப்பாய் புதுமைகளை !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (5-Oct-14, 9:10 pm)
பார்வை : 55

மேலே